Sunday, July 4, 2021

குந்தியின் தந்திரம்

குந்தியின் தந்திரம்

வானத்திலே -இருந்து மின்னல் ஒன்று ஓசையில்லாமல் இது போல குந்திதேவியின் சிந்தனையிலே இந்த யோசனை பளிச்சென்று பூத்தது. இது அவளுக்கே ஆச்சரியமாக இருந்தது. இந்த

அபூர்வமான யோசனை ஏன் அவளுக்கு முன்பே உதிக்க இல்லை. இத்தனை காலமும் அவளை ஆட்டிவைத்த சிக்கலுக்கு இவ்வளவு இலகுவான தீர்வா என்று அதிசயமாக இருந்தது.

சாலிவாகன தடாகத்தின் அருகில் குந்தி தன் குமாரர்களோடு ஒரு வருடம்வரை தங்கியிருந்தாள். இங்கேதான் பீமன் இடும்பனைக் கொன்றான். அவனுடைய தங்கை இடும்பியோ பீமனுடைய யௌவன உடல்வாகைக் கண்டு மயங்கி காதல் கொண்டுவிட்டாள். குந்தியிடமே வந்து தன் காதலை பிரகடனம் செய்து பீமனை யாசித்தாள். பீமன் என்றால் தரையைப் பார்த்துக் காலால் கற்களை உருட்டியவாறிருந்தான். யுதிஷ்டிரனுக்கு விஷயம் புரிந்துவிட்டது. தடை சொல்லாமல் அவர்களுடைய விவாகத்துக்கு சம்மதம் தெரிவித்துவிட்டான். அப்போதுகூட குந்திதேவிக்கு இந்த உபாயம் தோன்றவில்லையே!

இந்த ஏகசக்கிரபுரத்து வாழ்க்கையும் அவர்களுக்கு அலுத்து விட்டது. அதிலும் மறைவாக வாசம் செய்யும்போது ஒரே இடத்தில் இருப்பது புத்திசாலித்தனமாகாது. ராஜகுமாரர்களாகப் பிறந்துவிட்டு பிராமண வேஷம் தரித்து, பிட்சை பாத்திரம் ஏந்தி எவ்வளவு காலத்துக்குத்தான் அவர்கள் நகரத்தைச் சுற்றி வலம் வருவார்கள். குந்தியின் குமாரர்கள் எல்லாம் உற்சாகம் இழந்து காணப்பட்டனர்.

அதிலும் பீமனைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. பகாசுரன் இருக்குமட்டும் பீமன் அவனை வதம் செய்வதிலேயே குறியாய் இருந்தான். இப்போது பகாசுரனும் இறந்துவிட்டான்; பிச்சையும் குறைந்துகொண்டே வந்தது. உணவு பற்றாமல் பீமன் மெலிந்து வருவதைப் பார்க்க குந்திக்கு வருத்தமாக இருந்தது.


அதிர்ஷ்ட வசமாக இந்தச் சமயத்தில் பாஞ்சால தேசத்து அரசன் துருபதன் தன்மகள் திரௌபதிக்கு சுயம்வரம் நிச்சயித்து விட்டதால் பிராமணர்கள் எல்லாம் கூட்டம் கட் போய்க்கொண்டிருந்தார்கள். ஐந்து தூண்களைப்போல குந்தியின் குமாரர்கள் இந்தச் சுயம்வரத்தில் கலந்துகொள்ள சைப்பட்டார்கள். ஆனால், இதை எப்படிக் குந்தியிடம், சொல்வார்கள்? |

லௌகீகம் அறிந்த குந்திதேவி தன் நுண்ணிய மதியினால் இதை உணர்ந்துகொண்டாள். காம்பிலிய நகரத்துக்குச் செல்வதற்கு அனுமதி தந்துவிட்டாள. பாண்டு குமாரர்களுக்கு உற்சாகம் கரைகொள்ளவில்லை.எல்லோருமாக பலநாள். பயணித்துச் சுயம்வர நகரத்துக்கு வந்து சேர்ந்தார்கள். அங்கே ஒரு குயவனுடைய யாகையில் இடம் செய்துகொண்டு தங்கி னார்கள்.

சுயம்வரம் நாளன்று பாஞ்சால தேசம் கோலாகலமான அலங்காரங்களுடன் காட்சியளித்தது. ஆடவரும் பெண்டிரும் பட்டாடைகள் புனைந்து, தங்கள் தங்கள் வீட்டுப் பண்டிகைபோல மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர். குந்தியினுடைய ஐந்து குமாரர்களும் பிராமண வேடம் பூண்டு சுயம்வர மண்டபத்துக்குச் சென்று விட்டார்கள். குயவனும், மனைவியும்கூட போய்விட்டார்கள். குந்திமாத்திரம் வீட்டிலே தனியாக இருந்தாள்.

அவள் மனம் சஞ்சலத்தில் மீண்டும் உழன்றது. வெகு காலமாக மனதிலே கனன்றுகொண்டிருந்த தீ இப்பொழுது சுவாலைவட்டு எழும்பியது. அவளுடைய தீராத விசனத்துக்கு விரைவிலேயே விமோசனம் கிடைக்கக்கூடும்! தன் குமாரர்களின் பௌருஷத்தில் வைத்த நம்பிக்கை வீண்போகாமல் அவர்கள் வெற்றி வீரர்களாகத் திரும்புவார்களென்று காத்திருந்தாள்.

என்னதான் பிராமண வேடம் போட்டாலும் சத்திரிய சின்னங்களை முற்றாக மறைக்க முடியுமா! சிங்கம் போன்ற நடையும், நிமிர்ந்த செஞ்சும், தரை பார்க்காத தலையும் அவர்கள் ராஜவம்சத்தைச் சேர்ந்தவர்கள் என்று கட்டியம் கூறிவிடுமே. தோள்களில் நாண் உறைந்த காய்ப்புகளையும், பெரு விரல்கள் தடிப்புகளையும் எங்கே கொண்டுபோய் மறைப்பது. -குந்தி மறுபடியும் விசாரத்தில் ஆழ்ந்தாள்.

அர்ஜூனனுடைய வீர்யம் உலகப் பிரசித்தமானது. மனமதன கரும்புவில்லை எடுப்பதுபோல் அர்ஜூனன் தனுசை அநாயாசமாக வளைத்து. நாண் ஏற்றி, ஐந்து சரங்களையும் செலுத்தி மத்சயத்தை வெட்டி விடுவான் என்பதில் அவளுக்கு ஐயமேயில்லை. சுயம்வரத்திற்குக் காத்திருக்கும் திரௌபதி நெருப்பிலே பிறந்தவள். துருபதராஜன் செய்த பெரும் தவத்தினால் அர்ஜூனனை மணப்பதற்கென்றே அவதரித்தவள். தேவர்களுடைய அந்த வாக்கு பொய்யாகிப் போய்விடுமா? அங்கே வந்து கூடியிருக்கும் அரசர்கள் ஒரு பிராமணன் திரௌபதியை அபகரிப்பதை சும்மா பார்த்துக்கொண்டிருப்பார்களா? பீமன் தன் கோள் வலிமையைக் காட்டாமல் வரமாட்டானே!

இப்பொழுதெல்லாம் பீமனை நேரிலே பார்க்க அவள் கண்கள் கூசுகின்றன. நாணம் வந்து விடுகிறது. ஏதோ பெரும் குற்றம் புரிந்தது போல அவள் மனம் படபடக்கிறது.

அரக்கு மாளிகையில் இருந்து அவர்கள் தப்பி சுரங்க வழியாக வெளியேறி விட்டார்கள். பீமன் குந்தியை முதுகிலும், நகுல சகாதேவர்களை இடையிலும், யுதிஷ்டிரனையும், அர்ஜூன னையும் தோளிலும் வைத்துக்கொண்டு புயல்போல வேகமாக நடக்கிறான். எங்கே துரியோதனனுடைய ஒற்றர்கள் பார்த்து விடுவார்களோ என்ற கவலை வேறு. விதுரன் முன்னெச்சரிக்கையாக ஏற்பாடு செய்திருந்த படகுக்காரன் மூலம் கங்கையைக் கடந்து தென்திசையாக செல்கிறான். எண்பது யோசனை தூரம் கடந்தாகிவிட்டது. பயங்கரமான காடு. களைப்பே அறியாத பீமனுக்கு அப்போது களைப்பு மேலிட்டு விடுகிறது. சிறிது இளைப்பாறலாம் என்று பார்க்கிறான். பீமனுடைய வலிமையில் நம்பிக்கை வைத்து அவனுடைய தாயும் சகோதரர்களும் நிச்சிந்தையாக உறங்கிக்கொண்டு இருக்கிறார்கள்.

பீமன் தன் பிதாவை மனத்தினால் தியானித்தான். வாயு தேவன் அபபோது மென்தென்றலாக உருவெடுத்து வந்து பீமனை ஒரு குழந்தையை அணைப்பதுபோல வாஞ்சையுடன் அணைத்துக் கொண்டான். பீமனுடைய தேகம் பரவசமானது. ஒருவித புத்துணர்ச்சி வந்து புதுப்பலத்துடன் பிரகாசித்தான்.

வாயுதேவன் தான் வந்தகாரியம் முடிந்து திரும்பும்போது குந்திதேவியைப் பார்த்தான். அவள் அழகுற ஒரு மரத்தடியில் தன்னை மறந்து சயனித்துக்கொண்டிருந்தாள். அவளுடைய குறையாத சௌந்தர்யத்தில் தடுமாறிய வாயு அடக்கம் இழந்து அவளை இறுகத் தழுவிவிட்டான். எல்லாம் ஒரு கணம்தான. குந்திக்கும் பழைய ஞாபகம் வந்து ஒரு நொடிப்பொழுது அந்த பரிச இன்பத்தில் தன்னை இழந்துவிட்டாள். வாயுதேவன்

மறைந்துவிட்டான்.


கண்களைத் திறந்தபோது அவள் முன்னாள் பீமன் நின்று கொண்டிருந்தான். அவனுடைய முகத்தில் என்றுமில்லாத ஓர் அருவருப்பு. குந்திதேவிக்கு அவன் முகத்தை நிமிர்ந்து பார்க்கக்கூட கூச்சமாக இருந்தது. தலையைக் குனிந்து ரகஸ்யமாகத் தன்னைக்கடிந்து கொண்டாள்.



சொந்த மகனையே நேருக்கு நேர் பார்க்க முடியாதபடிக்கு அவமானமாக இருந்தது. மனதிலே பெரும் சுமையொன் உட்கார்ந்து கொண்டது. துரியோதனாதியரும், சிசுபாலனும் அரசர்களும் அவளைத் தூற்றுவதை அவள் அறியமாட்டாளா? முறையற்ற முறையிலே கர்ப்பம் சுமந்தவள் என்று அவளை தூஷிக்கிறார்களே! முறைகேடாக பிறந்த குமாராகளுக்கு எப்படி ராஜ்யம் சித்திக்கும் என்று குதர்க்கம் பேசுகிறார்களே! திருதராட்டினான் பிறந்த முறையை மறந்துவிட்டார்களா?

இந்த அற்புதமான யோசனையைப் பரீட்சித்துப் பார்க்கும் நேரம் நெருங்கிவிட்டது. சிறு பெண்ணாயிருந்தபோது துர்வாச முனிவர் உபதேசித்த மந்திரத்தைப் பரீட்சித்து சூரியனிடம் ஒரு மகவைப் பெற்றவள். நெஞ்சைக் கல்லாக்கிக்கொண்டு கவச குண்டலத்தோடு ஜொலித்த அந்தக் குழந்தையை ஒரு பேழையிலே வைத்து ஆற்றிலே அனுப்பியவள். அந்த ரகஸ்யம் அவள் மனத்தின் அடியிலே மிகவும் பாதுகாப்பாகப் பூட்டப்பட்டுக் கிடந்தது. அப்படித்தான் இந்த சோதனையும் அவள் மனத்தின் ஆழத்தில் புதைந்துபோய்விடும்.

பாண்டுவுடன் குந்தியும் மாத்ரியும் வனத்திலே வாழ்ந்த காலம். ஒரு ரிஷியும் அவர் பத்தினியும் காட்டிலே மான் உருவம் கொண்டு விளையாடிக்கொண்டிருந்தார்கள். இதை அறியாத பாண்டு அம்பை எய்து ரிஷியைக் கொன்றுவிட்டார். அந்த ரிஷ இறக்குமுன் பாண்டு தன் மனைவியுடன் சேர்ந்தால் அக்கணமே அவருக்கு மரணம் சம்பவிக்கும் என்று சபித்துவிட்டார்.

பாண்டு மனம் உடைந்துபோனார். திரும்பவும் நகரத்துக்கும் போகாமல் வனத்திலேயே மீதி நாட்களையும் தவத்திலே கழிப்பது என்று தீர்மானிக்கிறார். இப்படியே காலம் போகிறது. மூன்று வருடங்கள் ஓடி விடுகின்றன.

திடீரென்று பாண்டுவுக்குத் தான் புத்திரபாக்கியம் இல்லாமல் இறந்து விடுவோமென்று வருத்தம் ஏற்படுகிறது. சந்ததியைச் சிருஷ்டிக்காமல் இறப்பவன் நரகத்துக்குப் போவான் என்ற வாக்கு பாண்டுவை இரவும் பகலுமாக வதைக்கிறது இந்த வேதனையில் பாண்டு பலநாட்களாக வருந்துகிறான், இறுதியில் குந்தியிடம் தன யோசனையை வைக்கிறான்

ஒரு ரிஷி மூலம் தனக்கு ஒரு மகவைப் பெற்றுத் தரும்படி யாசிக்கிறான்.அப்படியும் குந்தியின் மனத்தை அவனால் தளர்த்த முடியவில்லை . 

ஒருநாள் பாண்டு படும் வேதனையைக் குந்தி பார்த்தாள். அவனுடைய துயரத்தை அவளால் தாங்க முடியவில்லை . இறுகியிருந்த அவளுடைய மனது இளகிவிட்டது. பல வருடங்களுக்கு முன்பு துர்வாசர் தனக்கு உபதேசித்த மந்திரத்தைப் பற்றி பாண்டுவிடம் கூறினாள். பாண்டுவின் மனம் மீண்டும் துளிர்த்தது.

பாண்டுவின் ஆலோசனைப்படி தர்மதேவனை வேண்டி குந்தி ஒரு மகவைப் பெற்றாள். தர்மம் மறு உருவம் எடுத்து வந்ததுபோல வந்து பிறந்தவன்தான் யுதிஷ்டிரன். பாண்டுவின் மகிழ்ச்சியைச் சொல்ல முடியாது.

ஒரு வருடம் கழிந்தது; பாண்டுவுக்கு மீண்டும் ஆசை. குந்தியினால் மறுக்க முடியவில்லை. இம்முறை வாயு பகவானை வேண்டினாள். வலிமைக்கு ஓர் எல்லையல்லவா வாயு? அப்படிப் பிறந்தவன்தான் பீமன். தர்மதேவனிடம் குந்தி பக்தியுடன் நடந்து கொண்டாள் என்றால் வாயுவின் பலம் காரணமாக அவனை பயத்துடன்தான் சேர்ந்துகொண்டாள்.

ஆனால், பாண்டுவுக்கு இன்னும் ஆசை அடங்கவில்லை. இந்தமுறை குந்தி இந்திரனை நினைத்துக்கொண்டாள். அகலிகை மேல் காதல் கொண்டவன் இந்திரன்! தேவர்களுக்கெல்லாம் அரசன். குந்திக்குப் பெருமையாக இருந்தது. அவனிடம் அள வில்லாத காதலுடன் நெருங்கினாள். அப்படிப் பிறந்தவன்தான் அர்ஜூனன். கண்ணைப் பறிக்கும் வனப்புடன் ஜொலித்தான் அவன், 

கண்டவர்கள் எல்லாம் காதல் கொள்ளும் லட்சணம் கொண்டவன் அர்ஜூனன். அதற்குச் சமமான வீரமும் பராக்கிரமும் படைத்தவன். யுதிஷ்டிரனுக்கு வலது கரம் பீமன் என்றால் அவனுடைய இடது கரம் அர்ஜூனன். வஞ்சகமாக இழந்த ராஜ்யதை மீட்பதற்கு யுதிஷ்டிரன் இவர்களுடைய பராககிரமத்தைதான் நம்பியிருந்தான்.

அர்ஜூனன் பிறந்த பிறகுகூட பாண்டுவின் ஆசை தணிய வில்லை. மீண்டும் குந்தியை வற்புறுத்தினான். ஆனால், குந்தி பிடிவாதமாக மறுத்துவிட்டாள். தேவேந்திரனுடன் கூடிய பிறகு  அவளுக்கு வேறு தேவர்களை வரிப்பதில் நாட்டமில்லை. அவளே வலிந்து சென்று துர்வாசருடைய மந்திரத்தை மாத்ரிக்கு உபதேசித்தாள். அந்த மந்திரத்தின் மகிமையில் மாத்ரிக்கும், அஸ்வினி குமாரர்களுக்கும் பிறந்தவர்கள் தான் இந்த நகுலனும், சகா தேவனும்.

அழகு என்று பார்த்தால் சகாதேவனுடைய அழகு யாருக்கு வரும்? எல்லோருக்கும் இளையவன். அவன் நிறமும் தாமரை போன்ற கண்களும் எவரையும் மயக்கிவிடும். அதிலும் மகாபுத்தி சாலி, வாக்குவல்லவன். உண்மையைச் சொல்வதற்கு அஞ்ச மாட்டான்.

இந்தச் சகாதேவன் சிறுவனாக இருந்தபோது என்ன கேள்வி கேட்டுவிட்டான்?

சதஸ்சிருங்க வனத்தில் குந்தியும் மாத்ரியும் ஐந்து புதல்வர் களுடன் கழித்த அந்த மகிழ்ச்சியான காலம். சிறுவர்கள் ரிஷி களிடம் பாடம் கற்று வந்தார்கள். அப்பொழுது ஒருநாள் சகா தேவன் அழுதுகொண்டே ஓடி வந்தான். குந்தி அவனை அள்ளி மடியில் இருத்தி, "குழந்தாய்! என்ன நடந்தது?” என்று கேட்கிறாள்.

அதற்குச் சிறுவன் சகாதேவன் சொல்கிறான்: “தாயே! என்னால் இந்த ரிஷி குமாரர்களின் பரிகாசத்தை இனிமேலும் தாங்க முடியாது. என் தந்தை யார்? என் உடன் பிறந்தவர்களின் தந்தையர் யார்? யுதிஷ்டிரனுடைய பிதா தர்மதேவன் என்று சொல்கிறார்கள். பீமனுக்கு வாயுதேவனாம். அர்ஜூனனுக்கு இந்திரனாம். எங்கள் பிதாவோ அஸ்வினி குமாரர்கள். ரிஷி குமாரர்களுக்கோ ஒரேயொரு தந்தைதான். எங்களுக்கோ பல தந்தைகள்! என்னால் இந்த அவமானத்தை எப்படித் தாங்க முடியும்? எப்பொழுது பார்த்தாலும் அவர்கள் என்னை இம்சித்தபடியே இருக்கிறார்கள்."

குந்தியினால் பதில் சொல்ல முடியவில்லை . அவள் முகம் தரை பார்த்தது. கண்களில் நீர் கோத்துவிட்டது. அன்று தொடங்கிய இழுக்கு இன்றுவரை இழுத்துக்கொண்டே போகிறது. ரிஷி குமாரர்கள் மாத்திரமா? எல்லோரும்தான் அவளைத் தூற்றுகிறார்கள்.

அவளுடைய துயரம் எல்லாம் இந்தச் சுயம்வரத்தில் நிச்சயமாக தீர்ந்துவிடும். அதற்குப் பிறகு குந்தியை யாரும் நூதனப் பிறவிபோலப் பார்க்க மாட்டார்கள் இழித்துக் கூறார்கள், பாண்டு இருக்கும்போதே புருஷாகளை வரித்தவள் என்று வசைபாட மாட்டார்கள்

தூரத்திலே கேட்ட அந்தச் சத்தம் ஓங்கி வளர்ந்து வாசல் வந்துவிட்டது. அதைத் தொடர்ந்து பெரிய ஆரவாரமும்,சனங்களின் சிரிப்பொலியும் கேட்டது. குந்தி தான் செய்ய வேண்டியதை இன்னொருமுறை மனதிலே நன்கு தீர்மானித்துக்கொண்டாள். சோதனைக்கான சமயம் வந்துவிட்டது. வாசல் பக்கம் போகாமல் குந்தி நன்றாக உள்ளேபோய் உட்கார்ந்து

கொண்டாள்.

வாசலில் இப்போது காலடிச்சத்தம் வெகு துல்லியமாகக் கேட்டது. காதுகளைக் கூர்மையாக்கி கவனித்தபோது வளையல் குலுங்கும் ஓசையும் கேட்டதுபோல இருந்தது.

யுதிஷ்டிரன்தான் பேசினான். வாசலில் இருந்து கொண்டே மகிழ்ச்சி பொங்க உரத்த குரலில் கூறினான்.

"தாயே! பிட்சை கொண்டு வந்திருக்கிறோம்”

குந்திதேவி உடனேயே பதில் கூறவில்லை . இந்தத் தருணத்திற்காக அவள் எவ்வளவு வருடங்கள் காத்திருந்தாள்!

சிறு பெண்ணாக இருந்தபோது குந்தி சூரியனை வேண்டி கர்ப்பம் திறந்து கர்ணனைப் பெற்றாள். உலகறிய சுயம்வர மண்டபத்தில் பாண்டுவுக்கு மாலையிட்டாள். சதஸ்சிருங்க வனத்தில் பாண்டுவின் ஆணைப்படி மூன்று தேவர்களை வரித்து பிள்ளை களைப் பெற்றாள்; எல்லாமாக அவளுக்கு ஐந்து புருஷர்கள்.

மனதைத் திடப்படுத்திக்கொண்டு குந்தி யுதிஷ்டிரனுக்குப் பதில் கூறினாள்.

"என் குமாரர்களே! பிட்சை கொண்டு வந்திருக்கிறீர்களா? வழக்கம்போல ஐவரும் பங்கு போட்டுக்கொள்ளுங்கள்.”

தாயாருடைய வாக்கை தேவவாக்காக எடுத்துக்கொள்ளும் பாண்டவர் ஐவரும் திரௌபதியைத் தங்கள் மனைவியாக ஏற்றுக் கொண்டனர்.

குந்தி தன் மனதிற்குள்ளே மெல்ல நகைத்துக்கொண்டாள்.

இனிமேல் யாரும் அவளை ஓர் அவச்சொல் சொல்லப் போவதில்லை. நிம்மதியான பெருமூச்சு ஒன்று அவளிடமிருந்து வெளியே வந்தது.


பி.கு. நான் காலையில் எழுவதற்கு ஐந்து நிமிடம், முன்பே என் மனமானது எழுந்துவிடும். எழுந்து எனக்காகக் காத்திருக்கும். இந்த மனம் கேட்கும் ஆயிரம் கேள்விகளுக்கு நான் பதில் சொல்லியாக வேண்டும். இது அன்றாடம் நடக்கும் சங்கதி.

இப்படியான ஒரு காலை வேளையில் என் மனம் கேட்ட கேள்விககளில் எனது கற்பனை விரிந்தது. அதில் பிறந்தது தான் இந்தக் கதை. பாரதம் அறிந்த பெரியவர்கள் மன்னிப் பார்களாக.



Thursday, July 1, 2021

குங்குலியக்கலைய நாயனார்

குங்கிலியக்கலய நாயனார்

அந்த வீட்டு மாடியிலே ஒரு மாலை நேரத்தில் நாங்கள் மூன்று பேரும் கூடியிருக்கிறோம். பதினாலு வருடம் ரஷ்ய துருப்புகளுடன் போராடியும் முற்றிலும் அழிந்து விடாமல் நொண்டிக் கொண்டு நிற்கிறது அப்கானிஸ்தானிலுள்ள ‘ஹெரத்’ என்ற நகரம். நான் சுற்றிலும் பார்க்கிறேன். அழகிய மலைகள் சூழ்ந்து இருக்கின்றன. மெல்லிய குளிர் காற்று உடம்பை வருடுகிறது.

'ஹுமெலின்' கனடாக்காரர், நீண்ட தாடி வைத்திருப்பவர் அறிவுஜீவி. கனடாவில் பேராசிரியராக இருந்து இப்போது ஐ.நா வின் போதைப் பழக்கம் தடுப்புப் பிரிவில் வேலை பார்க்கிறார்.

லூனன்பெர்க்' ஜெர்மன்காரர். சதுரமான தாடை, அதை எப்பவும் நிமிர்த்தி வைத்துத்தான் கதைப்பார். ஐ.நாவின் அகதிகள் மறுகுடியேற்றத்தில் அவருக்கு வேலை.

மாவீரன் அலெக்சாந்தர் அழகி ருக்ஷானாவின் சௌந்தர்யத்தில் மனதைப் பறி கொடுத்தது இங்கேதான். ஆஹா! இந்தப் பெண்கள்தான் என்ன அழகு! அவர்கள் கண்கள் பச்சை நிறத்தில் ஆளை மயக்கும். கூந்தலோ கருமையிலும் கருமை. பெண் குழந்தைகளைத்தான் பார்க்க முடியும்; வளர்ந்து விட்டாலோ பர்தாவில் புகுந்து விடுவார்களே?

நான்தான் தொடங்கினேன். எனக்குக் கனடாக்காரரைச் சீண்டுவதில் ஒரு தனி இன்பம், "அப்ப, ஹாமெலின் இந்தப் போதைப்பழக்கம் மிகவும் கெட்டது. இதை முற்றிலும் அழித்த பிற்பாடு என்ன செய்வதாக உத்தேசம்? உமக்கு வேலை விடுமே?” என்று கேட்டேன்.


அபகானிஸ்தானில் பத்து லட்சம் பேர் இதற்கு அடிமை. இது தவிர, போதைப்பொருள் உற்பத்தி உலகத்திலேயே 35 வீதம் இங்கேதான். இவர் தனியாளாக இதை ஒழித்தும் கட்ட கொடுக்குக் கட்டிக்கொண்டு கனடாவில் இருந்து வந்து குதித்திருக்கிறார். இது நடக்கிற காரியமா? மலையை இடித்து மூக்குப்  பொடி போட்டு முடிக்கிற கதைதான்.


இகற்குக் கனடாக்காரர் பதில் கூறுமுன் ஜெர்மன்காரர்

முந்திக்கொண்டு சொன்னார்: 

(இங்கே நடந்த சம்பாஷணைகள் எல்லாம் ஆங்கிலத்தில் அதை வாசகாகளுக்காக நான் 'என் தமிழில்' தந்திருக்கிறேன்.)

பழக்கத்தில் 'நல்ல பழக்கம், கெட்ட பழக்கம்' என்று இல்லை : 'விடக் கூடிய பழக்கம்', 'விட முடியாத பழக்கம்' இப்படி இரண்டுதான். சிலருக்குக் காலையில் எழுந்தவுடன் தேநீர் வேண்டும். சிலருக்கு சிகரெட தேவை ; இது இல்லாமல் நடுக்காட்டில் அவர்களை விட்டால் தலையைப் பிய்த்துக்கொண்டு பைத்தியமாகி வாவார்கள். எந்தப் பழக்கமும் ஒரு கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும். அதை மீறினால்தான் கஷ்டம்."

அதற்குக் கனடாக்காரர், "எனக்கு ஒரு நண்பர் இருந்தார். புத்தகக் கடையென்றால் அவருக்குப் பைத்தியம். எந்த ஒரு கடையைக் கண்டாலும் புகுந்து விடுவார். நேரகாலம் தெரியாமல் உள்ளே இருப்பார். இருக்கிற காசெல்லாவற்றையும் கொடுத்து புத்தகங்களை அள்ளுவார். காசில்லாவிடில் உங்களிடமும் கடன் வாங்குவார். புத்தகம் படிப்பது நல்ல பழக்கம். அதிலும் அவர் அறிவுசார்ந்த புத்தகங்களைத்தான் படிப்பார். இருந்தும், அவர் வரையில் இந்த நல்ல பழக்கமும் ஒரு கெட்ட அடிமைப் பழக்கம் தான். ஏனெனில், அவரால் இதைவிட முடியவில்லையே" என்றார்.

நான் சொன்னேன்: "நான் செருப்புப் போடும்போது எப்பவும் இடதுகாலைப் போட்டு பிறகுதான் வலது காலைப் போடுவேன், ஷேவ் எடுக்கும்போது வலது பக்கம் செய்து பிறகுதான் இடது பக்கம். இதுவும் பழக்கம்தானே?"

ஜெர்மன்காரர் சொன்னார், மிக அவசரப்பட்டு "என் மனைவி எப்போதும் கொண்டையூசி குத்தும்போது இடது பக்கம்

குத்தி பிறகுதான் வலது பக்கம் குத்துவாள். நான் அவதானித்துப் பார்த்திருக்கிறேன்.”

"வேறு என்னவெல்லாம் உமது மனைவி செய்வதை நீர் அவதானித்துப் பார்த்திருக்கிறீர்" என்றார் கனடாக்காரர், கண் களைச் சிமிட்டியபடி.

அதற்குப் பிறகு சம்பாஷணை கீழிறங்கிவிட்டது; வெகு வெகு கீழிறங்கிவிட்டது. இது அப்படியே கொஞ்ச நேரம் நீடித்தது.


நான் "தயவு செய்து உங்கள் சம்பாஷணையை இடுப்புக்கு  - மேலே கொண்டு வருகிறீர்களா“ என்று விட்டுத் தொடர்ந்தேன்.

"ஒரு பழக்கமானது எப்போது அடிமைப் பழக்கமாக மாறுகிறது என்பதைக் கண்டுபிடிக்க முடியுமா”?

ஜெர்மன்காரர் அந்தச் சமயம், தன் பையில் வைத்திருந்த ஒரு வளைந்த போத்தலை எடுத்தார் அவர் எப்பவும் அதில் குடி வகை வைத்திருப்பார். எந்தக் காடு,மேடு,மலை சமுத்திரம் என்றாலும் அதைக் 'கவசகுண்டல் போல் காவிக்கொண்டு திரிவார். அவர் ஒரு மிடறு குடித்துவிட்டுச் சொன்னார்


சிம்பிள். ஒரு மனிதனைப் பத்து நாள் பட்டினி வேண்டும். அதற்குப் பிறகு ஐந்து ரூபாயை அவன் கொடுத்துப் பார்க்க வேண்டும். அவன் நேராக சிகரெட் வாங்கி ஓடினால் அவன் அந்தப் பழக்கத்துக்கு அடிமை.”

"எனக்கு சவ்வரிசிப் பாயசம் என்றால் உயிர். திரும்ப திரும்பச் சாப்பிடுவேன்; களவெடுத்தும்கூட சாப்பிடுவேன் இதுவும் அடிமைப் பழக்கமா?" என்று கேட்டேன்.

அதற்குக் கனடாக்காரர் "ச்சீ, அது எப்படி அடிமைப் பழக்கம் ஆக முடியும்? நீ வயிறு நிறைய பாயசம் குடித்து ஓய்ந்த பின் யாராவது உன் முன்னே ஒரு கப் பாயசத்தை நீட்டினால் உனக்குக் குமட்டிக்கொண்டு வருகிறதே. அது அடிமைப் பழக்கம் அல்ல. அடிமைப் பழக்கம் என்றால் அதற்கு முடிவே கிடையாது. போதும்' என்று நீ சொல்லவே மாட்டாய். அறிவு நிலையால் இருக்கும் வரை எடுத்துக்கொண்டே இருப்பாய்; உன் முடிவு உன் வசமே இல்லை” என்றார்.

ஜெர்மன்காரர் சொன்னார்: “இது சொல்லித் தெரிவதில்லை இந்தப் போதைக் கொடுமையில் விழுந்தவர்களைக் கண்ணால் பார்க்க வேணும். நான் 'பெஷாவாரில்' மூன்று வருடம் வேலை செய்தேன். நாளொன்றுக்கு நாலு ஐந்து வெடிகுண்டுகளாவது வெடித்துக்கொண்டிருந்த காலம் அது. என் வீட்டுக்கு காவல் ஒரு பட்டாணி காவல்காரன். மடியிலே ரிவால்வரும். தோளிலே ஏகே 47ம் ஆக வீட்டைச் சுற்றியபடி இருப்பான்."

"அன்று கிறிஸ்துமஸ் இரவு. நானும் மனைவிஹயம வெளியே போய்விட்டு ஒருமணி மட்டில் வந்து படுத்து கண்ணயர்ந்திருப்போம். 

வீட்டின் கீழே  கண்ணாடிகள் உடைந்து சலுசலுவென்று சத்தம். கீழே ஓடிவந்து விளக்கைப் போட்டால் எங்கும் கண்ணாடிச் சில்லுகள்."


« 'காக்கா இஸ்மயில், காக்கா இஸ்மயில்' என்று கத்தினோம். இஸ்மயில் கதிரையில் இருந்தபடியே AK47 ஐ மடியில் குழந்தை போல அணைத்தவாறு தூக்கத்தில் இருந்தான்.”

"பொலீஸ் வந்து எல்லா விபரங்களையும் பதிவு செய்து கொண்டுபோனார்கள். களவுபோனது விலையுயர்ந்த கலைப் பொருள்கள். அதற்குப் பிறகு பொலீஸிடம் இருந்து ஒரு தகவலும் இல்லை. நானும் மறந்து விட்டேன்."

“ஒருநாள் என் கந்தோருக்கு பொலீஸ் நிலையத்தில் இருந்து ஒரு தொலைபேசி வந்தது, என்னை நிலையத்துக்கு உடனே வரும் படி. நானும் மனைவியைக் கூட்டிக்கொண்டு விரைந்து சென் றேன்.”

அங்கே நான் கண்ட காட்சி என்னை ஸ்தம்பிக்க வைத்தது. ஒரு பையன், 24 வயது இருக்கும். குந்தி முழங்காலைக் கட்டியபடி ஒரு மூலையில் இருக்கிறான். குளிருக்கு நடுங்குவதுபோல அவன் தேகம் நடுங்குகிறது. நெற்றி, தாடையெங்கும் காயங்கள்; சில காயங்களில் இரத்தம் வழிந்தவண்ணம் இருக்கிறது.

"அன்று காலை அவன் பொலீஸாரிடம் கையும் களவுமாக பிடிபட்டிருக்கிறான். அவன் திருடிய சாமான்களை அங்கே அடுக்கி வைத்திருந்தார்கள். என் வீட்டில் களவுபோன பொருட்கள் அங்கே இல்லை. அவை எல்லாம் வேறு வேறு வீடுகளில் திருடியவை. அவன் என் வீட்டில் திருடியதை ஒப்புக்கொண்டிருக்கிறான், ஆனால், விற்றுவிட்டானாம்.”

“என் மனைவி அவன் முன்னே முழங்காலில் உட்கார்ந்தாள். 'உன்னை நான் எப்படியும் வெளியே கொண்டுவந்து விடுவேன். தயவு செய்து என் முகத்தைப் பார். எங்கள் வீட்டில் நீ எடுத்த பொருள்கள் ஆயிரம் டொலர் பெறும். யாரிடம் அவற்றை விற்றாய், சொல்' என்று மன்றாடினாள்.”

“அவன் கண்களில் கண்ணீர்தான் வந்தது. வாய் குழறியது. அவனால் ஒன்றுமே கதைக்க முடியவில்லை.'

"அவன் ஒரு மருத்துவக் கல்லூரி மாணவனாம். தாய்க்கு ஒரே பையன். தகப்பன் இல்லை. தங்கை மட்டும்தான். வீட்டிலோ வறுமையிலும் வறுமை. இவன் படிப்பில் எப்பவும் முதல்தான். திறமையாகப் படித்து மருத்துவக் கல்லூரிக்குத் தெரிவு செய்யப்பட்டு விட்டான்."

“முதல் வருடம் நன்றாகவே படித்தான். ஆனால், இரண்டா வது வருடம் பிடித்தது சனியன். நண்பர்களுடன் ஒருநாள் மாலை ஒரு 'சிமிட்டா' பொடி போல் உறிஞ்சிக்கொண்டான். ஒரே ஒரு முறைதான். அடுத்த நாளும் எடுத்தான். அதற்கு அடுத்த நாளும் இப்படியே போயிற்று. ஒவ்வொரு முறை எடுக்கும் போதும் இதுதான் கடைசித்தரம் என்று நினைத்துக் கொண்டான்.


கல்லூரிக்குப் போவது இப்போது தடைபட்டது. இவன் சிந்தனை எல்லாம் அடுத்த வேளை 'சிமிட்டாவுக்கு' காசு சம்பாதிப்பது எப்படி என்பதுதான். முதலில் புத்தகங்களை விற்கத் தொடகினான். பிறகு வீட்டில் பொருட்கள் திடீர் திடீரென்று காணாமல் போகத்தொடங்கின. கடைசியில் ஒருநாள் தங்கை தோட்டிலேயே கை வைத்தான். அதை விற்கக் கொண்டுபோன இடத்தில் பிடிபட்டுவிட்டான்.''

"அப்பத்தான் முதல் முதலாக தாய்க்கும் தங்கைக்கும் விஷயம் தெரிய வந்தது. அவர்கள் மன்றாடி பொலீஸில் இருந்து. அவனைக் காப்பாற்றி விட்டார்கள். ஆனால், வீட்டுப் பயம் இப்போது இல்லை. ஒவ்வொரு நாளும் வீட்டிலே சண்டை இப்படித் தொடங்கி அடிதடி வரையில் போய்விட்டது. ஒருநாள் தாயாரை அடித்தேவிட்டான்."

"அதற்குப் பிறகு அவன் வீட்டிற்கு வருவதே இல்லை. சுருண்டு சுருண்டு போய் ரோட்டு ஓரங்களில் படுத்திருப்பான். போதையின் உத்வேகம் வரும்போது எங்கேயாவது புகுந்து களவெடுத்து விடுவான்.”

“நானும் மனைவியும் பெஷாவாரை விடும்போது அவனை ஜெயிலில் போய்ப் பார்த்தோம். மனைவி அவனுக்கு ஒரு கம்பளிப் போர்வை கொடுத்தாள். இப்பக்கூட அவனுடைய நீளமான கண்கள் என் நினைவில் அடிக்கடி வரும். அவன் இன்னும் இருக்கிறானா இறந்து விட்டானா, தெரியவில்லை.”

"இந்தப் பழக்கத்தில் இருந்து மீளவே முடியாதா?"

ஹாமெலின் சொன்னார். "சில பேரால் முடிகிறது. நான் ஒரு நாளைக்கு நூறு சிகரெட் வரை குடித்திருக்கிறேன். கல்லூரியில்தான் எனக்கு இந்தப் பழக்கம் முதலில் ஏற்பட்டது. இரவிரவாக இருந்து ஆராய்ச்சிக்கு தயார் பண்ண வேண்டும். சிகரெட இதற்கு உறுதுணையாக இருந்தது. என் விரல் நகங்கள் எல்லாம் மஞ்சள். உதடுகள் கறுத்து இருக்கும். ஐந்து நிமிடங்களில் இன்னொரு சிகரெட் பத்தாவிட்டால் கைகள் நடுங்கத் தொட விடும்."

"நான் தீக்குச்சியினால்தான் சிகரெட் பற்ற வைப்பே முதல் உரசலில் அதைப் பற்ற வைக்கும்போது தீக்குச்சி மருந்துடன் சேர்ந்து ஒரு சுவை வரும். அது மகத்தானது. என் இன்பம் எல்லாம் அந்த முதல் இழுப்பில்தான். எத்தனையோ முறை முயன்றும் இந்தப் பழக்கத்தை உதற முடியவில்லை .”

“ஒரு கோடை விடுமுறைக்காகப் பெற்றோரிடம் போய்க் கொண்டிருந்தேன். நீண்ட ரயில் பிரயாணம், ரொறொன்ரோவில் இருந்து வுட்ஸ்ரொக் வரை."

“என்ன தோன்றியதோ, திடீரென்று என் கையிலிருந்த கடைசி சிகரெட் பெட்டியை ஜன்னல் வழியாக விட்டெறிந்தேன். ஏன் அப்படிச் செய்தேன் என்று இன்றுவரை எனக்குத் தெரியாது. அதன் பின் நான் அதைத் தொடவே இல்லை. நான் பாக்கிய சாலி."

"அதற்குப் பிறகு சிகரெட் குடிக்கவேண்டும் என்ற உத்வேகம் எப்பவாவது வந்ததா?”

"நான் அதை மாற்ற வேறு சில பழக்கங்களை வரவழைத்துக் கொண்டேன். சூயிங்கம் சாப்பிடுவது அதில் ஒன்று. இப்ப 17 வருடங்கள் ஆகிறது. இன்னும் எனக்கு அந்தப் பயம் முற்றிலும் போகவில்லை. எங்கே இன்னோருமுறை திரும்பவும் தொற்றி விடுமோ? என்று பயந்தபடியே இருக்கிறேன்" என்றார்.

நான் சிறுவயதில் பார்த்த ஒரு சம்பவத்தை விவரிக்கிறேன். எங்கள் கிராம வாழ்க்கையும் அதில் வாழ்ந்த மக்களின் பழக்க வழக்கங்களும் என் நண்பர்களுக்கு வியப்பாக இருக்கிறது.

“எனக்கு அப்ப அஞ்சு, ஆறு வயது இருக்கும். 'குடிகாரச் சின்னத்தம்பி' என்றுதான் அவனுக்குப் பேர்; எங்களுக்குப் பயம். வீட்டிலே சோறு தீத்தும்போதுகூட 'குடிகாரச் சின்னத்தம்பி' என்று சொல்லித்தான் தீத்துவார்கள்.

ஒழுங்கையின் எத்தத்தில் அவன் வரும்போதே நாங்கள் உள்ளே ஓடி விடுவோம். குடித்துவிட்டு ஆடிக்கொண்டே வருவான். வேட்டி அவிழ்ந்துவிடும். வேட்டியை ஒரு கையால் இழுத்த படியே வருவான் சின்னத்தம்பி.

சும்மா வரமாட்டான். உரத்த குரலில் திட்டிக்கொண்டுதான் வருவான். அவனுடைய 'மூடைப் பொறுத்தது. ஒரு நாளைக்கு முன்வீட்டு முருகேசுவைப் பேசுவான். இந்த வேலிக்கும் அந்த வேலிக்குமாக 'உலாஞ்சி, உலாஞ்சி'தான் வருவான்; இன்னொரு நாளைக்கு நடராசாவைத் திட்டியபடி வருவான்; ஒரு நாளைக்கு அவன் பெண்சாதி, மற்றொரு நாளைக்கு அவன் தாயார், இப்படி.


கலாம் 

என்று பொட்டு வழி

 பார்கள். 

ட்டக் 

எங்கள் ஊர் பெண்டுகள் எல்லாம் அவன் இன்றைக்கு

ஆரை வைகிறான் என்று வேலி வழியாலும், பொட்டு வழியாலும் காது கொடுத்துக் கேட்டுக் கொண்டிருப்பார்கள். மற்ற வீட்டு ரகசியங்களை அவன் கொட்டக் கொட்டக் கேட்டுக்கொண்டிருப்பதில் அவர்களுக்கு ஆர்வம்.

எங்கள் வீடு அவன் வீட்டுக்குப் பக்கத்தில்தான். அவன் வீட்டுப் படலை அடுத்த ஒழுங்கை வழியாகத்தான் இருக்கும. அம்மா அவன் மனைவியை 'ராசக்கா' என்றுதான் கூப்பிடுவாள். எங்கள் வீட்டுக் குந்தில் ஏறி நின்று பார்த்தால் வீட்டுக்கூரை தெரியும்.

எங்கள் வீட்டுக்கு ஒரு பாட்டு வாத்தியார் வருவார். அவர் அக்காவுக்குப் பாட்டு சொல்லிக்கொடுப்பார். ஹார்மோனியம் வாசித்தபடியே அக்கா அவர் சொல்லிக்கொடுப்பதைத் திருப்பிப் பாடுவாள். அக்காவுக்கு அப்பப் பதினாறு, பதினேழு வயதிருக்கும்

அக்கா பாடும்போது நான் அவள் முகத்தையே பார்த்தபடி இருப்பேன். அக்காவுக்கு வட்டமான பெரிய கண்கள். அக்காவின் கைவிரல்கள் வெள்ளைக் கட்டையிலும், கறுப்புக் கட்டையிலும் மாறிமாறி தவழ்ந்து விளையாடும். அவள் குரலும் பாட்டு வாத்தியார் குரலும் சேர்ந்து ஒலிக்கும்.

கனக சபா...பதி...தரி...சனம் 

ஒருநாள் 

கண்டால்...கலி...தி...ரும் 

ஆ......

அக்கா இந்தப் பாட்டைப் பாடுகிறாள். என் தகப்பன் மரக்கட்டிலில் சப்பணம் கட்டிக்கொண்டு இருந்து ரசிக்கிறார்.

மூன்று வீடு தள்ளி 'கனகசபாபதி, கனகசபாபதி' என்று ஓர் இளம் பொடியன். சைக்கிளுக்குப் பின்னால் உமலைக் கட்டிய படி அடிக்கடி அந்தப் பக்கம் ஓடிக்கொண்டிருப்பதுதான் அவன் வேலை.


ஒருநாள் இந்தக் குடிகாரன் வழக்கம்போல வேட்டியை இழுத்தபடி போறான், சத்தம் போட்டுக் கத்தியபடி எல்லாப் பெண்டுகளும் தங்கள், தங்கள் வேலைகளை விட்டுவிட்டு காது கொடுத்துக் கேட்டபடியே இருக்கிறார்கள். அன்றைக்கு எங்களுடைய முறைபோலும். குடிகாரன் சொல்கிறான்:

"அது ஆரடி கனகசபாபதி? இது என்ன கேப்பாரில்லையா?"

அதற்குப் பிறகு அக்கா அந்தப் பாட்டைப் பாடுவதை விட்டாள். என் தகப்பனார் அப்படி உத்தரவு போட்டு டார். கொஞ்ச நாள் பிறகு பாட்டுக்காரரையும் வேண்டாமென்றுவிட்டார்.

இப்படித்தான் ஒருநாள் நான் ஒரு சின்னச் சருவச் சட்டியோடு எங்கள் படலையடியில் நிற்கிறேன். வழக்கமாக அந்த வழியால் மாணிக்கம் கள் எடுத்துக்கொண்டு போவான். அம்மா சொன்னபடி அப்பத்திற்குப் போட ஒரு சொட்டு கள்ளு வாங்க காத்துக்கொண்டிருக்கிறேன்.

தூரத்திலே குடிகாரச் சின்னத்தம்பி. முதலில் அவன் குரல், பிறகுதான் உருவம் தெரிகிறது. வழக்கம்போலச் சத்தம் போட்டு பேசியபடியே வாறான். நான் சருவச் சட்டியைப் போட்டுவிட்டு உள்ளுக்கு ஓடிவிட்டேன்.

அவன் வீட்டுக்குப்போனவுடன் சண்டை தொடங்குகிறது. இவன் நாலரை அடி உயரம். ராசக்கா ஆறு அடி. முதலில் வார்த்தையிலேதான் சண்டை. அம்மா குந்தில் ஏறி நின்று பார்க் கிறாள். நாங்கள் அவள் முந்தானையைப் பிடித்துக்கொண்டு நிற்கிறோம்.

ராசக்காவுக்கு இரண்டு பிள்ளைகள். பூரணம், அவளுக்கு பதின்மூன்று வயது; பெரிய பிள்ளை ஆனவுடன் படிப்பை நிறுத்தி விட்டாள். மற்றது பற்பன் (பத்மநாபன்) என்னோடுதான் படிக் கிறான். அவன் பள்ளிக்கு வர்றதே 'பாணும், சம்பலும்' வாங்கத் தான். அவன் அரைவாசி சாப்பிட்டுவிட்டு மீதியை அக்காவுக்கும், அம்மாவுக்கும் கொண்டுபோய்க் கொடுப்பான்.

“என்ன இழவுக்கு இஞ்ச குடிச்சுப் போட்டு வாறாய்?”

"ஏண்டி, உன்ரை கொப்பற்ற சீதனத்தில் குடிக்கிறேனே?” இது அவன்.

"மூன்று நாள் பிள்ளைகளுக்குச் சாப்பாடில்லை; நாள் மாறி நாள் இப்பிடி வாறியே? உனக்குக் கொஞ்சமாவது அறிவிருக்கா?”

எந்தப் பெண்ணும் கேட்க வேண்டிய கேள்விதான்?

"இப்ப அடி விழும் சத்தம். பிறகு ராசக்கா விளக்குமாத்தைப் படுங்கி 'ரப்பிலே' செருகிவிட்டாள். இவருக்கு அது எட்டவில்லை. எம்பி எம்பிப் பார்க்கிறார்."

"எடுத்துக் குட்டி, எடுத்துக் குட்டி"




காலால் அவளை உதைக்கிறார்.

மனிதனுடைய பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டல்லவா? ராசக்கா அறைக்குள் புகுந்து கதவைப் படார் என்று சாத்தும் சத்தம். கொஞ்ச நேரம் அமைதி. ஊர் முழுக்கக் காதைக் கூர்மையாக்கி வைத்துக்கொண்டிருக்கிறது.

அம்மாதான் முதலில் பார்த்தாள், வீட்டுக் கூரை  டங் கென்று ஒரு கணம் ஆடியதை "ஐயோ, இஞ்சருங்கோ என்னெண்டு போய்ப் பாருங்கோ" என்று கத்தினாள் அம்மா

"எல்லோரும் வேலியைப் பாய்ந்தும், கிணத்தைத் தாண்டியும் வந்து விட்டார்கள். கதவு பூட்டியிருக்கிறது. சின்ன ராக உலக்கையால் கதவை உடைத்து முதலில் உள்ளுக்குப் போறான் பிறகு அம்மா ."

நாக்கு வெளியே நீண்டுவிட்டது. ராசக்கா முகட்டில் இருக்க ஒரு சேலையில் தொங்கிக்கொண்டிருந்தாள். எல்லோருமாகப் பிடித்துக் கீழே இறக்கி தண்ணி தெளிக்கிறார்கள். ஒருகணம் பிந்தியிருந்தால் மரணம்தான்.

சின்னத்தம்பிக்கு வெறி முறிந்துவிட்டது. தலையில் கை வைத்தபடி ஒரு மூலையில் இருக்கிறான். பிள்ளைகள் கத்துகத்தென்று கத்துகிறார்கள்.

கொக்குவில் சனம் எல்லாம் வீட்டுக்குள்; விதானையாரும் வந்து விட்டார்.

"ஐயா ஐயா! என்னைக் கொல்லுங்கோ இந்தச் சனியனை இனி நான் தொடமாட்டேன். இது சத்தியம்” என்று கத்துகிறான் சின்னத்தம்பி. பார்க்கப் பரிதாபமாகத்தான் இருக்கிறது.

முதல் நாள், வேட்டியைக் கட்டியபடியே கீழே பார்த்த படி வேலையிலிருந்து திரும்பினான் சின்னத் தம்பி, இரண்டாம் நாளும் அப்படித்தான்; மூன்றாம் நாளும் அதேதான்.

அம்மா சொன்னாள் 'சின்னத்தம்பி திருந்தி விட்டான் என்று .

நாலாம் நாள் வேட்டி அவிழ, அவிழ அவன் கத்திக் கொண்டே வாறான்.

"விதானையார் என்ன எனக்குச் சொல்லுறது. என்ரை பெண்சாதி. இவர் ஆர் என்னைக் கேட்க!

கொஞ்ச நேரம் நாங்கள் எல்லாம் மெளனம் பிறகு கனடாக்காரர் சொன்னார்.


‘“இந்தப் பழக்கம் உள்ளே வெகு நைஸாகப் புகுந்துவிடும். அது புகுந்ததே தெரியாது. ஆனால், அதை வெளியேற்றுவதுதான் மிகவும் சிரமம்.”

"அதிலும் நோய் விலகும் அறிகுறிகள் (withdrawal Symptoms) அதன் பாதிப்போ அவஸ்தையானது. நரக வேதனைதான். இதிலே மீள்வது மிகவும் அரிது” என்றார் ஜெர்மன்காரர்.

அவர்களுக்கான 'புனர்வாழ்வு மையங்கள்' (rehabilitation Centres) மேல் நாடுகளில் இருக்கின்றன. ஆனால், பத்திலே ஒருவர்தான் மீண்டு வருவார்கள்.

“எனக்கு அப்படி ஒருவரைத் தெரியும். ஆப்பிரிக்காவில் நான் வேலை செய்தபோது அந்தப் பரிச்சயமேற்பட்டது” என்று நான் கூறினேன்.

அது மரங்கள் ஏற்றுமதி செய்யும் ஒரு பெரிய கம்பெனி. ஆப்பிரிக்காவின் சிவப்பு மரங்களுக்கு உலகமெங்கும் நல்ல வரவேற்பு. பத்தாயிரத்துக்கும் அதிகமானோர் அங்கே வேலை செய்தார்கள். கம்ப்யூட்டர் பிரிவில்தான் நான். எனக்குக் கீழே நாற்பது பேர்.

அவனுடைய பேர் 'லுங்கே ஒபுக்கு'. நல்ல தேகக்கட்டுடன் இருப்பான். எப்பவும் சிரித்த முகம். வயது இருபத்தியாறு. ஒரு மனைவியும் மகளும்தான்.

கம்ப்யூட்டரை அவன் கண்டதேயில்லை. ஆனால், அதைக் கண்ட நாளிலிருந்து அவனுக்கு ஒரு மோகம். அதில் மீன்குஞ்சு நீந்துவதுபோல இவனும் புகுந்து விளையாடுவான். இயற்கையாகவே அவனுக்கும் கம்ப்யூட்டருக்கும் ஒரு சொந்தம் இருந்தது. நான் ஒன்றைச் சொல்லிக் கொடுத்தால் தானாகவே பத்து விஷயங் களைக் கற்றுக்கொண்டு விடுவான்.

நாங்கள் மாதா மாதம் அமெரிக்காவிலுள்ள தலைமையகத் துக்கு நாற்பது பக்கங்கள் கொண்ட செயலாட்சி அறிக்கையை அனுப்ப வேண்டும், ஆறு மாதத்திலேயே இவனை நான் இது தயாரிப்பதில் ஒரு விற்பன்னனாகத் தயார் செய்து விட்டேன்.

இரவு பகலாகக் கம்ப்யூட்டரே கதி என்று கிடப்பான். என் வேலையானது சுகமாகவும் அவசரமின்றியும் நகர்ந்து கொண்டி ருந்தது. அப்போதுதான் ஒபுக்குவுக்கு இன்னொரு மோகம் பிடித்தது.


இந்த இடத்தில் நான் கொஞ்சம் கதையை நிற்பாட்டினேன். ஜெர்மன்காரர் போத்தல் மூடியைத் திறந்து ஒரு மிடறு ஊற்றிக்கொண்டார். நான் தொடர்ந்தேன்.

அங்கே அமெரிக்காவில் இருந்து வந்த 'பீஸ்கோ ' ஊழியர்கள் (Volunteers) அநேகம். அதிலும் பெண்களே அதிகம். எல்லாருமே கட்டிளம் கன்னியர். கன்னியர் என்பதெல்லாம் ஒரு பேச்சு தான். அதிலே ஒரு நீலக் கண் அழகி, பெயர் 'கரலைன்'. அவளுக்கு இவன் மேல் மையல்.

பீஸ்கோவில் இருந்து வரும் பெண்கள் ஓர் ஆணை வலையில் வீழ்த்தி இழுத்துக்கொண்டு போவது அங்கே வழக்கம் தான். பீஸ்கோ பெண்கள் அங்கு வருவதே அதற்காகத்தான் என்று என்னுடைய மேலதிகாரி எனக்கு அடிக்கடி சொல்லுவார்.

மேற்கு ஆப்பிரிக்காவில் ஒருவித குடிவகையைச் சிறு சிறு ‘பொலிதீன் பைகளில் போட்டு விற்பார்கள். அதில் ஊசியால் ஒரு சிறு ஓட்டை போட்டு வாய்க்குள் அடக்கி வைத்துக்கொள்ள வேண்டும். அந்த மது வகையோ மிகவும் சக்தி வாய்ந்தது. அது கசிந்து கசிந்து ஒரு மணியளவுக்கு தாக்குப்பிடிக்கும். அது முடிந்த வுடன் இன்னும் கேட்கும். கொடுத்துக்கொண்டே இருக்க வேணும்.

கரலைன் காதலிக்கு 'பொலிதீன்' மோகம். இவன் சாது. இவனும் பழகிக்கொண்டான். அது பிடரியில் ஏறி இடம் பார்த்து உட்கார்ந்து விட்டது. இவனுக்கு அதை இறக்கிவிட வழியில்லை. அதன் சொற்படி எல்லாம் ஆடத் தொடங்கினான்.

ஆப்பிரிக்காவில் ஒரு பழமொழி இருக்கிறது. ஆற்றிலே ஆழம் பார்க்க ஒரு காலை மட்டும் விடு, இரண்டு காலையும் விடாதே, முட்டாளே என்று. இவன் இரண்டு காலையும் விட்டு விட்டான்.

ஒருநாள் அவன் என்முன்னே நிற்கும்போது கவனித்தேன். நிற்க முடியாமல் திண்டாடினான்; கைகளெல்லாம் நடுக்கம் அடிக்கடி வேலைக்கு வரத் தவறினான். அறிக்கைகள் தயாராக நாட்கள் எடுத்தன. எனக்கு அவனிலே சம்சயம் ஏற்பட்டது.

ஒரு திங்கள் காலை நான் அலுவலகம் வருகிறேன். என் மேசையில் ஒருசிறு குறிப்பு இருக்கிறது. அந்த மாதத்தின் ப்ரோகிராம் விபரங்கள்; இந்தக் கம்ப்யூட்டர் பைல் இந்த 'டைரக்டரியில் இருக்கிறது; ரகசிய 'கோட்' இது என்று இப்படியான சில குறிப்பு கள்தான். எனக்கு அது முழுவதுமாய் விளங்கவில்லை. ஒரு மூலையிலே போட்டுவிட்டேன்.

இரண்டு நாளாக ஒபுக்கு வரவில்லை. மூன்றாம் நாளும் இல்லை. எனக்குக் கிலி பிடித்துவிட்டது. தலைமையகத்துக்கு அறிக்கை அனுப்பும் நாள் நெருக்கிக்கொண்டே வந்தது. விசாரித்ததில் அமெரிக்கச் சிட்டுடன் இவன் ஓடிவிட்டான் என்றார்கள். 'கரலைன்' இவனைக் கடத்திவிட்டாள். கந்தோரில் எல்லாருக்கும் தெரிந்திருந்தது; ஆனால், நான்தான் கடைசி.

அப்பத்தான் அந்தக் குறிப்பு நினைவுக்கு வந்தது. அதைப் பார்த்து இரவு பகல் வேலை செய்து தலைமையகத்துக்கு அறிக்கையை கெடு முடிவதற்கிடையில் அனுப்பி வைத்தேன். எனக்கு அவன் மீது அன்புதான் சுரந்தது. கோபம் வரவில்லை . அவன் எவ்வளவு ஓர் இக்கட்டில் மாட்டி தன் குடும்பத்தையும், சுற்றத்தையும் துறந்து ஓடினாலும் என்னை நட்டாற்றில் விட்டுப் போக விரும்பவில்லை. அவனுடைய குறிப்புகள் என் வேலையைக் காப்பாற்றின.

நான் ஒபுக்குவை மறந்தே விட்டேன். ஆனால், ஒரு வருடம் கழித்து எனக்கு அவனிடமிருந்து ஒரு கடிதம் வந்தது.

ஐயா,

உங்களை நான் மறப்பேனா? உங்களிடம் படித்த கம்ப் யூட்டர்தான் இன்று எனக்குச் சோறு போடுகிறது.

நான் போதைக்கு ஆளாகிப் பட்ட அவஸ்தை கொஞ்ச நஞ்சம் அல்ல. புனர்வாழ்வு மையத்தில் ஆறு மாதம் கிடந்தேன். அதனிலும் பார்க்க நரகம் வேறு ஒன்றும் இல்லை. இந்நோயின் 'விலகும் அறிகுறிகள்' என்னைச் சித்திரவதை செய்துவிட்டன. எத்தனையோ முறை தற்கொலைக்கு முயற்சி செய்தேன். இறுதியில் தப்பிவிட்டேன். என்னை மன்னிக்க வேண்டுகிறேன். கரலைனும் தன் அன்பைத் தெரிவிக்கிறாள்.

ஒபுக்கு . இதை நான் சொல்லி முடிக்கவும் சமையல்காரன் 'டிங்டிங்' என்று மணியடித்து 'டின்னர்ரெடி' என்று சொல்லவும் சரியாக விருந்தது.

ஜெர்மன்காரர் போத்தலை உருவினார். மூடியைத் திறந்து கொஞ்சம் வாயிலே ஊற்றிவிட்டு மறுபடியும் போத்தலைப் பையிலே வைத்தார்.

"இது என்ன? நாங்கள் இவ்வளவு கதைத்த பிறகும் இப்படிச் செய்கிறீரே? இதை இன்றே தலையைச் சுத்தி வீசிவிடும்” என்றேன்.


ஜெர்மன்காரர், "ஆமாம், இன்று இதுதான் கடைசித் தடவை நாளை விடியும் வரை” என்றார்.

நாங்கள் சிரித்தோம்.

மேற்படி கதையைப் படித்துவிட்டு நண்பனொருவன் – என்ன கதை எழுதிறாய் நீ? தலையுமில்லை, வாலுமில்லை . குங்கிலியக்கலய நாயனார் என்று தலைப்பு வேறு கொடுத்திருக்கிறாயே என்று கேட்டான்.

"உனக்கு குங்கிலியக்கலய நாயனார் கதை தெரியுமா என்று கேட்டேன்.

"என்ன தெரிய வேணும். அறுபத்தி மூன்று நாயன்மார்களில் அவரும் ஒருவர்” என்றான்.

"திருக்கடவூரிலே சுவாமிக்குத் தினமும் குங்கிலியம் தூபம் இடுவதே இவர் தொழில். எப்பேர்ப்பட்ட வறுமையில் வாடினாலும் தினமும் இதைச் செய்யத் தவற மாட்டார். கிடைக்கும் காசையெல்லாம் கொடுத்துக் குங்கிலியம் வாங்கி சுவாமிக்குத் தூபம் போட்டபடியே இருப்பார். இப்படியே வீட்டிலே இருக்கும் பொருள்களையெல்லாம் விற்று விற்று குங்கிலியம் வாங்குவார்.

"ஒருநாள் வீட்டிலே மனைவியும் பிள்ளைகளும் பட்டினி. விற்பதற்கு இனி ஒன்றுமே இல்லை. அப்பொழுது அந்த மனைவி தன் தாலியைக் கழற்றிக் கொடுத்து அதை எப்படியாவது விற்று நெல் வாங்கி வரச் சொல்கிறாள், பிள்ளைகளின் பசியைத் தீர்ப்பதற்கு. இவரும் 'அப்படியே' என்று போனார், ஆனால், வழியில் ஒருவன் ஒரு பொதி குங்கிலியம் கொண்டு வரக் கண்டு அதிலே மனதைப் பறிகொடுத்தார்.”

"தன் வயமிழந்து, மதிமயங்கி, தாரை தாரையாகக் கண்ணீர் சொரிய அவன் காலில் விழுந்து தாலியைக் கொடுத்து குங்கிலியப் பொதியைப் பெற்றுக்கொண்டார். அதை நேரே கொண்டு போய் கோயிலிலே வைத்து தூபம் போடலானார். பசியை மறந்தார்; மனைவியை மறந்தார், பிள்ளைகளையும் மறந்தார்.''

"இது என்னத்தைக் காட்டுகிறது ?" என்றேன். "அவருடைய பக்தியைத்தான் " என்றான் நண்பன்.

"இல்லை , இதுவும் ஒரு வித அடிக்ஷன் (addiction)தா என்றேன் நான்.










Wednesday, June 30, 2021

திகடசக்கரம்

 

திகடசக்கரம்

எரிச்சல் ஊட்டுவதற்கென்றே பிறவியெடுத்தவன் 'எரிக்ஸன்', முந்திய பிறவியில் நான் செய்த வினைப்பயனால் அவனுடன் எனக்கு ஒரு தொந்தம் ஏற்பட்டுவிட்டது.நான் எங்கே போனாலும் அவனும் அங்கே என் பின்னால் வந்து சேர்ந்து விடுவான்

ஸ்வீடன் தேசத்து அரசாங்கத்துக்காக இவன் வேலை செய்க வந்தான். ஆள் உயரமாகவும் வசீகரமாகவும் இருப்பான். அவன் ஆங்கிலம் கதைப்பது கேட்க ஆனந்தமாக இருக்கும். 'ஸ்வீடிஷ்' மொழியிலே சிந்தித்துப் பின் அதை ஆங்கிலத்தில் வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்த்துப் பேசுவான். ஆகையினாலே, அவனுடைய ஆங்கிலம் நெளிந்து, நெளிந்து வரும். சுருக்காக ஒரு விஷயத்தைப் பேசினோம் என்பது அவன் ஜாதகத்திலேயே கிடையாது. நீண்டு வளைத்துத்தான் கதைக்கு வருவான்.

அவன் வடதுருவம் என்றால், நான் தென் துருவம் அவன் நெருப்பு என்றால் நான் ஐஸ். அவன் நீட்டி நீட்டிப் பேசினால் நான் சுருக்கமாகத்தான் பேசுவேன். எப்பவும் அவசரப்பட்டு ஓடிய படியே இருப்பான். நான் அப்படி இல்லை . குழாயில் வரும் நீர் போல மளமளவென்று சிந்தனைகளை வரவரக் கொட்டிக் கொண்டே இருப்பான். நானோ ஆற அமர யோசித்து ஒரே ஒரு வசனம் பேசினாலே அது பெரிய காரியம். இப்படியாக நாங்கள் முற்றிலும் எதிர்மறையானவர்கள். எங்கள் இரண்டு பேருக்கும் கடவுள் எப்படியோ ஒரு முடிச்சைப் போட்டுவிட்டார்.

ஐந்து நிமிடத்திற்கு மேல் யாரும் எரிக்ஸனுடன் தொடர்ச்சியாகப் பேசமுடியாது. எப்படியும் எரிச்சல் மூட்டி விடுவான.

அப்படி ஓர் அசாத்தியமான சாமர்த்தியம் அவனிடமிருந்தது.

எங்கள் இருவருக்கும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் பணி - எங்கள் பணியின் நிமித்தம் நாங்கள் இப்படி அடிக்கடி சந்திக்  வேண்டிவரும். ஆப்பிரிக்காவின் கடற்கரையோரத்தில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இருவரும் தங்கியிருக்கிறோம். ஒரு விசேஷ கூட்டத்திற்காக நாங்கள் வரவழைக்கப்பட்டிருந்தோம்.

விஷயம் இதுதான். ஸ்வீடன் நாடு பன்னிரெண்டு மில்லியன் டொலர் ஓர் அணைக்கட்டு விஷயமாகக் கொடுப்பதாக இருந்தது இந்த அணைக்கட்டினால் மின்சக்தியும் விவசாயமும் பெருகி நாடு பெரும் சுபிட்சம் அடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் சில குழுக்கள் இந்த அணைக்கட்டு சம்பந்தமாக ஆராய்ந்ததில் பல அனர்த்தங்கள் விளையும் என்பதைக் கண்டு கொண்டார்கள். அவர்கள் வேண்டு கோளின்படி நாங்கள் ஆராய்ச்சி செய்து 96 பக்கம் கொண்ட ஒரு அறிக்கையைத் தயார் செய்திருந்தோம்.

மறுநாள் ஒன்பது பேர் கொண்ட குழுவின் முன் எங்கள் அறிக்கையைச் சமர்ப்பித்து அணைக்கட்டினால் ஏற்படக் கூடிய பாதகங்களைக் கூறி அணைக்கட்டு பிளானை முற்றிலும் முறியடிக்க வேண்டும்.

எரிக்ஸன் நெருப்புக்கு மேலே நின்றான். எங்களுடைய அறிக் கையை எப்படியும் வெற்றிகரமாக ஒப்பேற்றிவிட வேண்டும் என்ற ஆர்வம் அவனுக்கு. ஆனால், ஆர்வம் இருந்தால் காணுமா? எங்களுக்குச் சில வில்லங்கங்களும் இருந்தன.

குழுவுக்கு தலைமை வகிப்பவர் ஓர் ஓய்வு பெற்ற நீதிபதி. அனாவசியப் பேச்சு அவருக்குப் பிடிக்காது. ஆனால், 'சரி' என்று பட்டதை நேரே பயமின்றி சொல்லக்கூடியவர். மற்றது ஒரு பாதிரியார். அவராலும் எங்களுக்கு இடைஞ்சல் இல்லை.

'சாயத் தான் எங்கள் முதல் எதிரி. மிகப்பெரிய பணக்காரன். முக்கால்வாசி மந்திரிமாரைக் கைக்குள்ளேயும், மீதியுள்ளோரை பைக்குள்ளேயும் வைத்துக்கொண்டு திரிபவன். பணத்தின் பலத்தினால் ஆடம்பரமாகப் பேசப் பழகிக்கொண்டவன். குழுவிலே இருந்த மற்ற ஆறு பேரையும் அவன் 'வாங்கிவிட்டான்' என்றுதான் கதை. இந்த அணைக்கட்டு திட்டம் அங்கீகாரம் பெற்றால் அதனால் வரும் ஒப்பந்தங்கள் எல்லாம் இவனிடம்தான் போய்ச்சேரும்; நிராகரிக்கப்பட்டாலோ அவனுக்குக் கோடிக் கணக்கில் நஷ்டம்.

எரிக்ஸன், நாங்கள் தயாரித்த அறிக்கையை கர்மசிரத்தையாக படித்துக்கொண்டிருந்தான். சிவப்புக்கோடு, மஞ்சள் கோடு, நீலக் கோடு என்று எங்கும் மூவர்ணக் கொடிபோலக் கீறி வைத்திருந்தான்.

 

அறை முழுக்க சிகரட் புகையும், பீர் போத்தலும் 'பைல்  கட்டுகளும்தான். என்மேல் அவனுக்கு எரிச்சலுக்கு காரணம் நான் அன்றைய தினசரியை சாவதானமாக கொண்டிருந்ததுதான்.

எரிக்ஸனுக்கு குட்நைட் சொல்லிவிட்டுப் படுப்பதற்கு விரைந்தேன். அவன் "V.D, என்ன? எட்டு மணிக்கே படுக்கப் போறாயா? நாளைக்கு ஒன்பது மணிக்கல்லவா கூட்டம்? எவ்வளவோ குறிப்புகள் தயார் பண்ண வேண்டியிருக்கிறதே?” என்றான்.

('வைத்தியநாதன்' என்று என் பெற்றோர் சூட்டிய அழகிய பேரை இவனுக்காகச் சுருக்கி 'வைத்தி' என்று மாற்றினேன்: . அதையும் குறுகத் தறித்து 'V.D' என்று என்னைச் செல்லமாகக் கூப்பிடத் தொடங்கிவிட்டான், கொலை பாதகன்.)

நான். "எரிக்ஸன், நாளை காலை எட்டுமணிக்கு இங்கே சந்திப்போம். எங்கள் அணுகுமுறையை இன்னொரு தரம் ஒத்திகை பார்த்துக் கொள்ளலாம். பயப்படுவதற்கு ஒன்றுமில்லைஎன்றேன்.

எரிக்ஸனுக்கு ஆத்திரமான ஆத்திரம். “சாயத்தோடு சேர்ந்து ஏழு பேர் ஒரு பக்கம். பாதிரியார் ஒருவரைத்தான் நாங்கள் நம்பலாம். இது எங்களுக்கு முழுத் தோல்வி. சந்தேகமே இல்லை . நீ போய் ஆனந்தமாக சயனிஎன்றான் கோபத்துடன்.

இப்படி எத்தனை எரிமலைகளைக் கண்டவன் நான். விர் ரென்று என் படுக்கையறைக்குப் போனேன்; படுத்ததும் தூங்கியும் விட்டேன்.

அடுத்த நாள் விடிகாலை ஆறு மணிக்கே கதவைப் படபட வென்று தட்டினான், எரிக்ஸன். நான் அந்த நேரம் வழக்கமா ஸ்நானம் செய்து ஸ்தோத்திரங்களை முடித்துவிட்டுக் கை விரல் எண்ணிக்கொண்டே காயத்ரி ஜபம் செய்துகொண்டிருந்தேன். அவனும் விடாமல் கதவைத் தட்டிக்கொண்டேயிருந்தான்.

இறுதியில் நான் ஜபங்களை முடித்த பின் கதவைத் திறந்தேன்.

எரிக்ஸன் முற்றிலும் உடுத்தித் தயாராகி வந்திருந்தான் நாங்கள் காலை உணவை முடித்துவிட்டு ஒரு மூலையில் இருந்து எங்கள் அணுகுமுறையைச் சரிபார்த்துக்கொண்டோம்.

 

எரிக்ஸன், இன்று நடக்கும் கூட்டமோ மூன்று மணித் தியாலத்திற்கு மேல் நீடிக்க முடியாது. தலைவர் முடிவை இன்றே ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்க வேண்டும். எங்களுடைய அறிக்கையிலே இன்று கேள்வி மேல் கேள்வியாகக் கேட்டுக்கொண்டே இருப்பார்கள். அதிலும் அறிக்கையின் முதல் பக்கத்திலேயே மூன்று தாக்கமான கேள்விகள் வரும். நீ அயர்ந்து விடாதே. உன் வித்தை எல்லாத்தையும் காட்டி பதிலை அவசரமின்றி எடுத்துக் கூறு. எவ்வளவு நேரம் கடத்த முடியுமோ அவ்வளவு நேரத்தையும் கடத்து. உன் பதில் முடியும் தறுவாயில் நான் உன்னுடன் வந்து சேர்ந்து கொள்வேன்.''

என்ன VD? அவ்வளவுதானா?” என்றான். "அவ்வளவுதான்.''

தலையிலே இரு கைகளையும் வைத்து மேலே ஆண்ட வனைப் பார்த்தான், எரிக்ஸன்.

ஒன்பது மணி நெருங்கிக்கொண்டிருக்கிறது. எரிக்ஸன் இரண்டு கைகளிலும் மலைபோல் குவித்து, கட்டுக்கட்டாகப் புத்தகங்களும் அறிக்கைகளும் கோப்புகளுமாகக் கொண்டுபோய் மேசை மேல் கண்காட்சிக்கு அடுக்கி வைப்பதுபோல் அடுக்கி வைக்கிறான். நான் நாலு தாள்களை மாத்திரம் ஒரு வெறும் கோப்பில் மறைத்து வைத்துக்கொண்டு வருகிறேன்.

சாயத் ஆடம்பரமாக உரத்துப் பேசிக்கொண்டு நுழைகிறார். அவருக்குப் பின்னால் நாலு பேர் ஓடாத குறையாக வருகிறார்கள். சபைத்தலைவர்கூட எழுந்து அவருக்கு மரியாதை செய்கிறார். நாங்களும் வணக்கம் சொல்லிக் கொள்கிறோம்.

தலைவருடைய சிறு உரைக்குப் பிறகு எரிக்ஸன் தன் கட்சி வாதத்தை ஆரம்பித்து வைக்கிறான்.

எடுத்த வீச்சிலேயே எரிக்ஸன் அறிக்கையில் கண்டுள்ளபடி இந்த அணைக்கட்டினால் 47,000 ஏக்கர் காடுகள் தண்ணீரில் மூழ்கி விடும் என்கிறான்.

சாயத் உடனேயே எதிர்ப்புக் குரல் தெரிவிக்கிறார். "இது என்ன குப்பை? எங்கே இதற்கான ஆதாரம்?” என்று கேட்கிறார். எரிக்ஸன் தனக்கே உரிய பாணியில் நேரிடையாகப் பதில் சொல்லாமல் சுற்றி வளைத்து ஆரம்பிக்கிறான். சுருள் வாளைப்போல் அவனுடைய வாதங்கள் எல்லாம் திருப்பித் திருப்பித் தொடங்கிய இடத்திலேயே வந்து விழுகின்றன. அவனோ களைப்படையாமல்

தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கிறான். இதற்கிடையில் சபையி லுள்ள மற்றைய உறுப்பினர்களும் தங்களுக்குத் தெரிந்ததைக கூற வாதம் சூடுபிடித்தது. இப்படியாக முதல் கேள்வியிலேயே முக்கால் மணிநேரம் செலவழிந்துவிட்டது.

அப்போது நான் எரிக்ஸனுக்கு சாடை காட்டிவிட்டு சொன்னேன்:

"பதினைந்து வருடங்களுக்கு முன்பு அரசு அமைத்த  விசாரணைக் குழுவில் தலைவர் அவர்களே ஓர் உறுப்பினராக இருந்திருக்கிறீர்கள். அந்த அறிக்கையில் 47,000 ஏக்கர் என். பிரஸ்தாபித்தது ஞாபகமிருக்கிறது" என்று கூறிவிட்டு எரிக்ஸன் கொண்டு வந்த பைல் கட்டுகளையும் புத்தகத்தையும் சிதற அடித்து தேடுவதுபோலத் தேடி சிறிது நேரம் கடத்திவிட்டு, "ஆஹா, இதோ அதற்கான படிவம்என்று நான் தயாராகக் கொண்டுபோன ஏட்டில் இருந்து தாளை உருவிக் கொடுத்தேன். தலைவர் அதை வாங்கிப் படித்துவிட்டு தலையை ஆட்டினார்.

சாயத் தாளைப் பிடுங்கி உற்று உற்றுப் பார்த்தார். பார்த்து விட்டு மேசை மேலே போட்டார். மற்றவர்களும் எடுத்து காயதத்தை ஆட்டி ஆட்டிப் பார்த்தார்கள்.

எரிக்ஸன் மீண்டும் பேசத் தொடங்கினான். ஆனால், மூன்றாவது நிமிடமே இன்னுமொரு இடைஞ்சல் வந்தது. சாயத் சொன்னார். "1,16,000 பேர் குடிபெயர்வதாகச் சொல்கிறீரே? அரசாங்கம் அவ்வளவு பேருக்கும் புது வீடுகள் கட்டித்தருவதாகக் கூறியிருக்கிறதே! இதில் என்ன நஷ்டம்?” என்றார்.

எரிக்ஸன் இதற்கும் பதில் அளிக்கத் தொடங்கினான். சொல்லி வைத்தபடி பதிலும் நீண்டுகொண்டேபோனது. தலைவர் தண்ணீர் குடித்தார். பாதிரியார் கொட்டாவி விட்டார். சாயத் தலையை இரண்டு பக்கமும் ஆட்டிக்கொண்டே இருந்தார்.

அப்போது, சமயம் பார்த்து நான் குறுக்கிட்டு, "தலைவரே மதிப்பிற்குரிய எமது முதல் மந்திரியாரும், திரு சாயத் அவர்களும் இன்னும் சிலரும் கடந்த வருடம் மே மாதம் 20ஆம் திகதி ஸ்விடன் போனபோது மேற்படி விஷயம் மிகவும் விஸ்தாரமாக பேசப்பட்டது. குடிபெயர்வால் ஏற்படும் சமுதாய இன்னல்கள் புது வீடுகள் கட்டுவதனால் மட்டுமே தீரக்கூடிய காரியமல்ல. இதை ஸ்வீடன் அரசாங்கமே ஒப்புக்கொண்டு எழுதியிருக்கிறது ' என்று கூறி அவர்கள் எழுதிய கடிதத்தின் நகலை சபையின் முன் வைத்தேன். எல்லோரும் பாய்ந்து எடுத்து அந்தக் கடிதத்தை படித்தார்கள்.

 

தலைவருடைய நம்பிக்கை இப்போது பரிபூரணமாக எரிக்ஸனுடைய பக்கம் திரும்பிவிட்டது. இதற்கிடையில் இரண்டு மணி நேரம் ஓடிவிட மீதி நேரத்தில் எரிக்ஸன் சொல்ல வேண்டிய தெல்லாவற்றையும் நேர்த்தியாகச் சொல்லி முடித்தான். இம்முறை அவனுக்குத் தடங்கலே இல்லை.

அவன் பேசி ஓய்ந்ததும் தலைவர் இன்னும் யாராவது ஏதேனும் சொல்ல விரும்புகிறார்களா என்று கேட்டார்.

என் மடியில் இன்னுமொரு ஆணி இருந்தது. கடைசி ஆணி. நான் சொன்னேன்.

"தலைவரே, எல்லோரும் களைப்பாகி இருக்கும் இந்தச் சமயத்தில் நேரத்தை வீணாக்காமல் விஷயத்துக்கு வருகிறேன். எந்த ஒரு காரியத்தை எடுத்தாலும் அதில் நல்ல விளைவுகளும் கெட்ட விளைவுகளும் கலந்தே இருக்கும். நல்ல விளைவுகள்கூட இருப்பின் நாங்கள் அந்தக் காரியத்தைச் செய்கிறோம்; இல்லா விடில் அதைத் தவிர்த்து விடுகிறோம்.”

"இந்த அணைக்கட்டினால் எங்களுக்கு அதிகப்படியான மின்சக்தியும், நீர்ப்பாசன வசதிகளும், கிராமங்களுக்குக் குடி தண்ணீரும் கிடைக்கிறது. அத்துடன், அடிக்கடி ஏற்படும் வெள்ளப் பெருக்குகளையும் இது தடுக்கிறது. இது எல்லாம் நல்ல விளைவுகள்தான்.”

"ஆனால், இதனால் ஏற்படும் பாதகங்களையும் நாங்கள் கணக்கு பார்க்க வேணும். சுற்றுச்சூழல் முற்றிலும் அழிந்துவிடு கிறது. 1,16,000 பேர் குடிபெயர்வதினால் ஏற்படும் சமுதாயக் கேடுகள், காடுகளின் அழிவு; மீன் முதலிய உயிரினங்களின் புலம் பெயர்வு (migration) தடை; ஆற்றிலே வண்டல் தன்மை குறைந்து விடுவதால் நசிந்துவிடும் விவசாயம்; இவையெல்லாம் பாதகமான விளைவுகள்

இந்த அறிக்கையின் 46ஆம் பக்கத்திலே கொடுத்திருக்கும் விபரங்களின்படி, நன்மைகளுக்கு 370 புள்ளிகள் என்றால் தீமை களுக்கு 520 புள்ளிகள் விழுகின்றன.”

"ஆனால், இந்தக் கணக்கிலே நாங்கள் ஒரு மிகப்பெரிய தப்பு செய்து விட்டோம்.

"இந்த இடத்தில் வாழும் 16 வகையான உயிரினங்கள் இந்தப் பிராந்தியத்திலேயே பிரத்தியேகமாக வாழும் தன்மை பெற்றவை. இந்த உலகின் வேறெந்த மூலை முடுக்கிலும் இந்த உயிரினங்களைக் காண ஏலாது. இந்தத் திட்டம் நிறைவேறினால் இந்த உயிரினங்கள் முற்றிலும் அழிந்துவிடும்; பூண்டோடு போய்விடும்.”

"இந்த உயிரினங்களின் அழிவுக்கு மதிப்புப் புள்ளிகள் போட முடியுமா? கோடி புள்ளிகள் போட்டாலும் அவை ஈடாகுமா?”

"கடவுள் இந்த உயிரினங்களைச் சிருஷ்டித்தார். எத்தனையோ கோடி ஆண்டுகள் இதே இடத்தில் உயிர் வாழ்ந்தன ஆனால், இனிமேலும் அவை உயிர் வாழும் பொறுப்பு கடவுள் கையில் இல்லை; உங்கள் ஒன்பது பேருடைய கைகளில் தான் இருக்கிறதுஎன்றேன்.

கூட்டத்தில் சிறிது நேரம் சலனமில்லை . சாயத்தின் முகம் பேயறைந்தது போலிருந்தது. பாதிரியாரின் முகத்தில் புன்சிரிப்பு

தலைவர் ஐந்து நிமிடங்களில் தன் முடிவுரையைக் கூறினார். அதன் கடைசி வாசகம்:

"தகுந்த ஆதாரங்களினாலும், ஆணித்தரமான வாதங்களாலும் இந்த அணைக்கட்டு மனித மேம்பாட்டுக்கு உகந்ததல்ல என்பது தீர்மானமாகிவிட்டது. ஆகவே இதைக் கைவிடும் ஆலோசனையை இன்றே அரசாங்கத்துக்கு அறிவிக்க நான் கடமைப்பட்டிருக்கிறேன்.”

வெளியே வந்ததும் எரிக்ஸன் என்னைக் கட்டிப்பிடித்து மேலே தூக்கினான்.

எப்படிச் செய்தாய்? எப்படிச் செய்தாய்?' என்று துளைத்து எடுத்தான். நான் "கச்சியப்பருக்கு நன்றிஎன்று கூறினேன. "யாரிந்தக் கச்சியப்பர்?” என்று நச்சரித்தான். நான்பிறகு சொல் கிறேன்என்று கூறி அவனிடமிருந்து மெள்ளக் கழன்றுகொண டேன்.

அன்று பின்னேரம் எரிக்ஸன் மறுபடியும் என் அறை கதவை விடாமல் தட்டியபடியே இருந்தான். நான் சாயங்கால பூசையை முடித்துக்கொண்டு கதவைத் திறந்ததும் என் கையைப் பிடித்து இழுக்காத குறையாகத் தன் ரூமுக்கு அழைத்துப் போனான்.

அங்கே இருந்த வசதியான கதிரையில் அவன் சாய்ந்து உட்கார்ந்து கொண்டான். என்னையும் இருக்கச் சொன்ன

பணிப்பெண்ணிடம் பீர் கொண்டு வரும்படி ஆணையிட்டான். அவள் அசைந் அசைந்து அசைந்து பீரைக் கொண்டுவந்து வைத்தாள்; கண்களைச் சுழட்டி ஒரு வீசு வீசிவிட்டுப் போய் விட்டாள். எரிக்ஸனுடைய கண்கள் அவளைத் தடவிக்கொண்டே கொஞ்ச தூரம் பின்சென்று மீண்டும் திரும்பியது.

பீரை ஊற்றிச் சுவைத்துக் குடித்தான். பிறகு என்னைப் பார்த்து, "யார், அந்தக் கசியப்பா, சொல்என்றான். அவனுடைய ஆவலும் பீருடைய நுரைபோலப் பொங்கிக்கொண்டு நின்றது.

நான் சொன்னேன்: “எரிக்ஸன், 'கசியபா' இல்லை ; கச்சியப்பர் உனக்கு இது விளங்காது. எங்கள் பழக்க வழக்கங்கள், சமயக் கோட்பாடுகள் இவற்றை அறிந்த ஒருவரால்தான் நான் சொல்லப்போவதை உண்மையில் புரிய முடியும்; இது வீண் நேரம்.”

அதற்கு எரிக்ஸன், “எந்த ஒரு விஷயமும் அதைச் சொல்லும் விதத்தில் இருக்கிறது. சொல்கிறவர் கெட்டிக்காரர் என்றால், புரிகிறவர் புரிந்து கொள்வார். நீ சொல்ல வேண்டியதைச் சொல்லு, நான் புரியும்வரை புரிந்துகொள்கிறேன்என்றான்.

காலைத் தூக்கி மேலே போட்டுக்கொண்டு, பீர் குடித்தபடி கந்த புராணம் கேட்கும் முதல் மனிதன் இவனாகத்தானிருக்கும் என்று நான் என் மனதிற்குள் நினைத்துக்கொண்டு சொன்னேன்:

"கச்சியப்பர் என்பவர் கந்த புராணம் என்ற பெருங்காப்பியத்தை தமிழிலே பாடினார். அதை அரங்கேற்றும்போது, ஒரு இலட்சம் கிரந்தங்கள் கொண்ட அந்த நூலில் முதல் செய்யுளில், முதல் வரியில், முதல் வார்த்தையிலேயே ஒரு சிக்கல் வந்து விட்டது. சிக்கலோ பெரிய சிக்கல். ஆனால், கச்சியப்பர் ஆணித் தரமான ஆதாரத்தோடு அந்தச் சிக்கலை அவிழ்க்கிறார். சபையோருக்கு அவருடைய ஆழ்ந்த புலமையிலே அளவற்ற மதிப்பும் நம்பிக்கையும் பிறக்கிறது. (the credibility is established)."

அதற்குப் பிறகு கச்சியப்பர் மீதி செய்யுள்களையெல்லாம் தங்கு தடையின்றிப் படித்து, பொருள் கூறி வெற்றிகரமாக அரங்கேற்றி முடித்தார்.”

"என்னுடைய அபிப்பிராயம், அந்த முடிச்சைக் கச்சியப்பர் வேண்டுமென்றே வைத்தார் என்பதுதான். இல்லாவிட்டால், ஒரு லட்சம் பாடல்களில் முதல் செய்யுளில், முதல் வரியில் ஒரு எக்கச்சக்கமான வார்த்தையை முதல் வார்த்தையாக யாராவது வைத்திருப்பார்களா?"

"V.D. இது நல்லாயிருக்கு : விபரமாய்ச் சொல்என்றான் எரிக்ஸன்.

 

தொண்டை மண்டலத்திலே சிறந்து விளங்கும் காஞ்சிபுரத்தில் காளத்தியப்ப சிவாச்சாரியாருக்குப் புத்திரராகப் பிறந்தார். கச்சியப்பர். அவர் தன் ஐந்தாவது வயதிலேயே வித்தியாரம்பம் செய்யப்பெற்று தமிழ், சமஸ்கிருதம் ஆகிய இரு மொழிகள் கற்றுத் தேர்ந்து வல்லுநரானார்.

ஒருநாள் குமரக்கோட்டத்து சுப்பிரமணியக் கடவுள் இவர் கனவிலே தோன்றி, "அன்பனே, நீ நமது சரித்திரத்தைக் கந்தபுராணம் எனப் பெயரிட்டு தமிழிலே பெருங்காப்பியமாகச் செய் அதற்கு முதல் அடியாக 'திகட சக்கரச் செம்முக மைந்துளான், என்று தொடங்குவாயாக" என்று கூறி மறைந்தார். இவரும் அப்படியே கந்த புராணத்தைப் பாட ஆரம்பித்து நாளொன்றுக்கு நூறு பாடல்கள் பாடி அந்தக் காப்பியத்தை குறைவற முடித்தார்.

இந்த நூலை அரங்கேற்றும் பொருட்டு தமிழ் புலவர்களுக்கும், வேத வேதாங்க பண்டிதர்களுக்கும், சிவாகம விற்பன்னர்களுக்கும் தேவார திருவாசக வல்லுநர்களுக்கும் ஓலை விடுத்துச் சபையைக் கூட்டினார்.

குறிப்பிட்ட ஒரு சுபதினத்தில் கந்த புராணத் திருமுறையை குமரக்கோட்டத்து சுப்பிரமணியக் கடவுள் முன் வைத்துத் துதித்துப் பின்னர் முதற் செய்யுளை உரைக்கலானார்:

'திகடசக்கரச் செம்முகமைந்துளான் என்று வாசித்து, அதாவது 'திகழ்+தசம்+கரம்', விளங்குகின்ற பத்து திருக்கைகளும் செவ்விய ஐந்து முகங்களுமாகவுள்ள சிவ பெருமான்' என்ற பொருள் கூறித் தொடங்கினார்.

அப்போது அங்கு கூடியிருந்த புலவர்களிலே மூத்த புலவர் ஒருத்தர் எழுந்து, "நில்லும், நில்லும்; திகழ் தசம் கரம் 'திகடசக்கரம் என்று புணர்வதற்கு விதி தொல்காப்பியம் முதலிய இலக்கண நூல்களில் இல்லையே? இது எப்படிப் பொருந்தும்என்று கூறினார்.

அதற்குக் கச்சியப்பர் திகைத்து நின்று, "இது முருகனே எடுத்துக் கொடுத்த அடியல்லவா? இதற்குக்கூட இலக்கண விதிகள் உண்டா?” என்று கேட்டார்.

அபபோது அந்தப் புலவரானவர் புன்முறுவல் பூத்து "உமக்கு அடியெடுத்துக் கொடுத்த முருகன் இவ்விடம் வந்து சாட்சி சொல்வாரானால் நாங்கள் அக்கணமே இதனை அங்கீகரிப்போம்;

 

அன்றேல் இதற்கு யாதேனும் ஒரு பிற இலக்கண நூலில் விதி காட்டினும் அங்கீகரிப்போம், அல்லாவிடில் அரங்கேற்ற ஒப்புக்

கொள்ளமாட்டோம்" என்றார்.

இக்கருணத்தில் ஏனைய புலவர்களும் இரு கூறாகப் பிரிந்து தந்தமக்கு தோன்றியபடி விவாதம் செய்ய அன்றைய போதில் முக்காப் போதும் கழிந்தது; கச்சியப்பரும் 'இதற்கு முடிவு நாளை தெரியும்' என்று கூறி சபையைக் கலைத்தார்.

கச்சியப்பர் முருகனிடம் நேரே போய், "அப்பனே, உன்னா லன்றோ நான் கந்தபுராணம் பாட முற்பட்டது. அதற்கு, நீ எடுத்துக் கொடுத்த அடியிலேயே இழுக்கு வந்துவிட்டதே. இது தகுமா?” என்று குறையிரந்தார்.

 முருகன் அவர் கனவிலே தோன்றி, “கச்சியப்பரே, பயப்பட வேண்டாம். சோழ தேசத்திலிருந்து ஒரு புலவர் நாளை வருவார். அவரால் சபையோருடைய ஐயம் தெளிவுறும்என்று கூறி மறைந்தார்.

அடுத்த நாள் சபை கூடியது. அப்போது சோழ தேசத்தி லிருந்து வந்த புலவர் ஒருத்தர் வீரசோழியம் என்ற இலக்கணநூலை சபையினரின் முன் சமர்ப்பித்து, சந்திப்படலத்தில் பதினெட்டா வது செய்யுளில் திகழ் தசம் என்பது திகடசம் என்று புணர்வதற்கு விதியிருக்கிறதைக் காட்டினார். முன்னாளில் ஆட்சேபித்த புலவரும் அதனை வாங்கிப் படித்து 'திகடசக்கரம்' என்னும் புணர்ச்சிக்கு விதி சரியாயிருக்கக் கண்டு விம்மிதமும், மகிழ்ச்சியு முற்றார்; மற்றைய புலவர்களும் ஒருவர் பின் ஒருவராக நூலை வாங்கிப் படித்துத் தங்கள் சந்தேகம் தெளிவுபெற்றனர்.

தடை பெற்ற அரங்கேற்றம் மீண்டும் தொடங்கியது. சபையோருக்குக் கச்சியப்பரிடத்தில் நம்பிக்கையும் மரியாதையும் பக்தியும் பெருகியது.

அதன் பிறகு தங்குதடை எதுவுமின்றி கச்சியப்ப சிவாச்சாரியார் கந்த புராணத்தை வாசித்து பொருளும் கூறி அரங்கேற்றி முடித்தார்.

எரிக்ஸன் கதையை நன்றாக அனுபவித்துக் கேட்டான். விழுந்து சிரித்தான். பிறகு, "உன்னுடைய கச்சியப்பர் பெரிய ஆள்தான்என்றான்.

"இதை இனிமேல் 'கச்சியப்பரின் யுக்தி' (The Kachiyapar's strategy) என்று நாங்கள் எங்களுக்குள்ளே கூறிக் கொள்வோம்என்றான்.

சிரித்துக்கொண்டே, “சரிஎன்றேன் நான்.

" V.D, அவுஸ்திரேலியாவில் நடக்கப் போகும் சம்மேளனத் துக்கு நீயும் வருகிறாயல்லவா? அங்கேயும் இதே யுக்தியைக் கையாளுவோம். அசந்து விடுவார்கள்என்றான்.

நான் "ஒரு யுக்தியை ஒருமுறை கையாளலாம். இரண்டா வது முறையும் சமயோசிதமாகக் கையாண்டு தப்பிவிடலாம். ஆனால், மூன்றாவது முறை எதிராளி உசாராகிவிடுவான். அடுத்த முறைக்கு புதிதாக ஏதாவது யுக்தி தயார் பண்ண வேண்டியது தான். கந்த புராணம் போனால் என்ன? சிவபுராணம் இருக் கிறதே! ஏதாவது தோன்றாமலா போய் விடும்!” என்றேன்.

"அதுவும் சரிதான்என்றான் எரிக்ஸன்.