Wednesday, June 30, 2021

திகடசக்கரம்

 

திகடசக்கரம்

எரிச்சல் ஊட்டுவதற்கென்றே பிறவியெடுத்தவன் 'எரிக்ஸன்', முந்திய பிறவியில் நான் செய்த வினைப்பயனால் அவனுடன் எனக்கு ஒரு தொந்தம் ஏற்பட்டுவிட்டது.நான் எங்கே போனாலும் அவனும் அங்கே என் பின்னால் வந்து சேர்ந்து விடுவான்

ஸ்வீடன் தேசத்து அரசாங்கத்துக்காக இவன் வேலை செய்க வந்தான். ஆள் உயரமாகவும் வசீகரமாகவும் இருப்பான். அவன் ஆங்கிலம் கதைப்பது கேட்க ஆனந்தமாக இருக்கும். 'ஸ்வீடிஷ்' மொழியிலே சிந்தித்துப் பின் அதை ஆங்கிலத்தில் வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்த்துப் பேசுவான். ஆகையினாலே, அவனுடைய ஆங்கிலம் நெளிந்து, நெளிந்து வரும். சுருக்காக ஒரு விஷயத்தைப் பேசினோம் என்பது அவன் ஜாதகத்திலேயே கிடையாது. நீண்டு வளைத்துத்தான் கதைக்கு வருவான்.

அவன் வடதுருவம் என்றால், நான் தென் துருவம் அவன் நெருப்பு என்றால் நான் ஐஸ். அவன் நீட்டி நீட்டிப் பேசினால் நான் சுருக்கமாகத்தான் பேசுவேன். எப்பவும் அவசரப்பட்டு ஓடிய படியே இருப்பான். நான் அப்படி இல்லை . குழாயில் வரும் நீர் போல மளமளவென்று சிந்தனைகளை வரவரக் கொட்டிக் கொண்டே இருப்பான். நானோ ஆற அமர யோசித்து ஒரே ஒரு வசனம் பேசினாலே அது பெரிய காரியம். இப்படியாக நாங்கள் முற்றிலும் எதிர்மறையானவர்கள். எங்கள் இரண்டு பேருக்கும் கடவுள் எப்படியோ ஒரு முடிச்சைப் போட்டுவிட்டார்.

ஐந்து நிமிடத்திற்கு மேல் யாரும் எரிக்ஸனுடன் தொடர்ச்சியாகப் பேசமுடியாது. எப்படியும் எரிச்சல் மூட்டி விடுவான.

அப்படி ஓர் அசாத்தியமான சாமர்த்தியம் அவனிடமிருந்தது.

எங்கள் இருவருக்கும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் பணி - எங்கள் பணியின் நிமித்தம் நாங்கள் இப்படி அடிக்கடி சந்திக்  வேண்டிவரும். ஆப்பிரிக்காவின் கடற்கரையோரத்தில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இருவரும் தங்கியிருக்கிறோம். ஒரு விசேஷ கூட்டத்திற்காக நாங்கள் வரவழைக்கப்பட்டிருந்தோம்.

விஷயம் இதுதான். ஸ்வீடன் நாடு பன்னிரெண்டு மில்லியன் டொலர் ஓர் அணைக்கட்டு விஷயமாகக் கொடுப்பதாக இருந்தது இந்த அணைக்கட்டினால் மின்சக்தியும் விவசாயமும் பெருகி நாடு பெரும் சுபிட்சம் அடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் சில குழுக்கள் இந்த அணைக்கட்டு சம்பந்தமாக ஆராய்ந்ததில் பல அனர்த்தங்கள் விளையும் என்பதைக் கண்டு கொண்டார்கள். அவர்கள் வேண்டு கோளின்படி நாங்கள் ஆராய்ச்சி செய்து 96 பக்கம் கொண்ட ஒரு அறிக்கையைத் தயார் செய்திருந்தோம்.

மறுநாள் ஒன்பது பேர் கொண்ட குழுவின் முன் எங்கள் அறிக்கையைச் சமர்ப்பித்து அணைக்கட்டினால் ஏற்படக் கூடிய பாதகங்களைக் கூறி அணைக்கட்டு பிளானை முற்றிலும் முறியடிக்க வேண்டும்.

எரிக்ஸன் நெருப்புக்கு மேலே நின்றான். எங்களுடைய அறிக் கையை எப்படியும் வெற்றிகரமாக ஒப்பேற்றிவிட வேண்டும் என்ற ஆர்வம் அவனுக்கு. ஆனால், ஆர்வம் இருந்தால் காணுமா? எங்களுக்குச் சில வில்லங்கங்களும் இருந்தன.

குழுவுக்கு தலைமை வகிப்பவர் ஓர் ஓய்வு பெற்ற நீதிபதி. அனாவசியப் பேச்சு அவருக்குப் பிடிக்காது. ஆனால், 'சரி' என்று பட்டதை நேரே பயமின்றி சொல்லக்கூடியவர். மற்றது ஒரு பாதிரியார். அவராலும் எங்களுக்கு இடைஞ்சல் இல்லை.

'சாயத் தான் எங்கள் முதல் எதிரி. மிகப்பெரிய பணக்காரன். முக்கால்வாசி மந்திரிமாரைக் கைக்குள்ளேயும், மீதியுள்ளோரை பைக்குள்ளேயும் வைத்துக்கொண்டு திரிபவன். பணத்தின் பலத்தினால் ஆடம்பரமாகப் பேசப் பழகிக்கொண்டவன். குழுவிலே இருந்த மற்ற ஆறு பேரையும் அவன் 'வாங்கிவிட்டான்' என்றுதான் கதை. இந்த அணைக்கட்டு திட்டம் அங்கீகாரம் பெற்றால் அதனால் வரும் ஒப்பந்தங்கள் எல்லாம் இவனிடம்தான் போய்ச்சேரும்; நிராகரிக்கப்பட்டாலோ அவனுக்குக் கோடிக் கணக்கில் நஷ்டம்.

எரிக்ஸன், நாங்கள் தயாரித்த அறிக்கையை கர்மசிரத்தையாக படித்துக்கொண்டிருந்தான். சிவப்புக்கோடு, மஞ்சள் கோடு, நீலக் கோடு என்று எங்கும் மூவர்ணக் கொடிபோலக் கீறி வைத்திருந்தான்.

 

அறை முழுக்க சிகரட் புகையும், பீர் போத்தலும் 'பைல்  கட்டுகளும்தான். என்மேல் அவனுக்கு எரிச்சலுக்கு காரணம் நான் அன்றைய தினசரியை சாவதானமாக கொண்டிருந்ததுதான்.

எரிக்ஸனுக்கு குட்நைட் சொல்லிவிட்டுப் படுப்பதற்கு விரைந்தேன். அவன் "V.D, என்ன? எட்டு மணிக்கே படுக்கப் போறாயா? நாளைக்கு ஒன்பது மணிக்கல்லவா கூட்டம்? எவ்வளவோ குறிப்புகள் தயார் பண்ண வேண்டியிருக்கிறதே?” என்றான்.

('வைத்தியநாதன்' என்று என் பெற்றோர் சூட்டிய அழகிய பேரை இவனுக்காகச் சுருக்கி 'வைத்தி' என்று மாற்றினேன்: . அதையும் குறுகத் தறித்து 'V.D' என்று என்னைச் செல்லமாகக் கூப்பிடத் தொடங்கிவிட்டான், கொலை பாதகன்.)

நான். "எரிக்ஸன், நாளை காலை எட்டுமணிக்கு இங்கே சந்திப்போம். எங்கள் அணுகுமுறையை இன்னொரு தரம் ஒத்திகை பார்த்துக் கொள்ளலாம். பயப்படுவதற்கு ஒன்றுமில்லைஎன்றேன்.

எரிக்ஸனுக்கு ஆத்திரமான ஆத்திரம். “சாயத்தோடு சேர்ந்து ஏழு பேர் ஒரு பக்கம். பாதிரியார் ஒருவரைத்தான் நாங்கள் நம்பலாம். இது எங்களுக்கு முழுத் தோல்வி. சந்தேகமே இல்லை . நீ போய் ஆனந்தமாக சயனிஎன்றான் கோபத்துடன்.

இப்படி எத்தனை எரிமலைகளைக் கண்டவன் நான். விர் ரென்று என் படுக்கையறைக்குப் போனேன்; படுத்ததும் தூங்கியும் விட்டேன்.

அடுத்த நாள் விடிகாலை ஆறு மணிக்கே கதவைப் படபட வென்று தட்டினான், எரிக்ஸன். நான் அந்த நேரம் வழக்கமா ஸ்நானம் செய்து ஸ்தோத்திரங்களை முடித்துவிட்டுக் கை விரல் எண்ணிக்கொண்டே காயத்ரி ஜபம் செய்துகொண்டிருந்தேன். அவனும் விடாமல் கதவைத் தட்டிக்கொண்டேயிருந்தான்.

இறுதியில் நான் ஜபங்களை முடித்த பின் கதவைத் திறந்தேன்.

எரிக்ஸன் முற்றிலும் உடுத்தித் தயாராகி வந்திருந்தான் நாங்கள் காலை உணவை முடித்துவிட்டு ஒரு மூலையில் இருந்து எங்கள் அணுகுமுறையைச் சரிபார்த்துக்கொண்டோம்.

 

எரிக்ஸன், இன்று நடக்கும் கூட்டமோ மூன்று மணித் தியாலத்திற்கு மேல் நீடிக்க முடியாது. தலைவர் முடிவை இன்றே ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்க வேண்டும். எங்களுடைய அறிக்கையிலே இன்று கேள்வி மேல் கேள்வியாகக் கேட்டுக்கொண்டே இருப்பார்கள். அதிலும் அறிக்கையின் முதல் பக்கத்திலேயே மூன்று தாக்கமான கேள்விகள் வரும். நீ அயர்ந்து விடாதே. உன் வித்தை எல்லாத்தையும் காட்டி பதிலை அவசரமின்றி எடுத்துக் கூறு. எவ்வளவு நேரம் கடத்த முடியுமோ அவ்வளவு நேரத்தையும் கடத்து. உன் பதில் முடியும் தறுவாயில் நான் உன்னுடன் வந்து சேர்ந்து கொள்வேன்.''

என்ன VD? அவ்வளவுதானா?” என்றான். "அவ்வளவுதான்.''

தலையிலே இரு கைகளையும் வைத்து மேலே ஆண்ட வனைப் பார்த்தான், எரிக்ஸன்.

ஒன்பது மணி நெருங்கிக்கொண்டிருக்கிறது. எரிக்ஸன் இரண்டு கைகளிலும் மலைபோல் குவித்து, கட்டுக்கட்டாகப் புத்தகங்களும் அறிக்கைகளும் கோப்புகளுமாகக் கொண்டுபோய் மேசை மேல் கண்காட்சிக்கு அடுக்கி வைப்பதுபோல் அடுக்கி வைக்கிறான். நான் நாலு தாள்களை மாத்திரம் ஒரு வெறும் கோப்பில் மறைத்து வைத்துக்கொண்டு வருகிறேன்.

சாயத் ஆடம்பரமாக உரத்துப் பேசிக்கொண்டு நுழைகிறார். அவருக்குப் பின்னால் நாலு பேர் ஓடாத குறையாக வருகிறார்கள். சபைத்தலைவர்கூட எழுந்து அவருக்கு மரியாதை செய்கிறார். நாங்களும் வணக்கம் சொல்லிக் கொள்கிறோம்.

தலைவருடைய சிறு உரைக்குப் பிறகு எரிக்ஸன் தன் கட்சி வாதத்தை ஆரம்பித்து வைக்கிறான்.

எடுத்த வீச்சிலேயே எரிக்ஸன் அறிக்கையில் கண்டுள்ளபடி இந்த அணைக்கட்டினால் 47,000 ஏக்கர் காடுகள் தண்ணீரில் மூழ்கி விடும் என்கிறான்.

சாயத் உடனேயே எதிர்ப்புக் குரல் தெரிவிக்கிறார். "இது என்ன குப்பை? எங்கே இதற்கான ஆதாரம்?” என்று கேட்கிறார். எரிக்ஸன் தனக்கே உரிய பாணியில் நேரிடையாகப் பதில் சொல்லாமல் சுற்றி வளைத்து ஆரம்பிக்கிறான். சுருள் வாளைப்போல் அவனுடைய வாதங்கள் எல்லாம் திருப்பித் திருப்பித் தொடங்கிய இடத்திலேயே வந்து விழுகின்றன. அவனோ களைப்படையாமல்

தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கிறான். இதற்கிடையில் சபையி லுள்ள மற்றைய உறுப்பினர்களும் தங்களுக்குத் தெரிந்ததைக கூற வாதம் சூடுபிடித்தது. இப்படியாக முதல் கேள்வியிலேயே முக்கால் மணிநேரம் செலவழிந்துவிட்டது.

அப்போது நான் எரிக்ஸனுக்கு சாடை காட்டிவிட்டு சொன்னேன்:

"பதினைந்து வருடங்களுக்கு முன்பு அரசு அமைத்த  விசாரணைக் குழுவில் தலைவர் அவர்களே ஓர் உறுப்பினராக இருந்திருக்கிறீர்கள். அந்த அறிக்கையில் 47,000 ஏக்கர் என். பிரஸ்தாபித்தது ஞாபகமிருக்கிறது" என்று கூறிவிட்டு எரிக்ஸன் கொண்டு வந்த பைல் கட்டுகளையும் புத்தகத்தையும் சிதற அடித்து தேடுவதுபோலத் தேடி சிறிது நேரம் கடத்திவிட்டு, "ஆஹா, இதோ அதற்கான படிவம்என்று நான் தயாராகக் கொண்டுபோன ஏட்டில் இருந்து தாளை உருவிக் கொடுத்தேன். தலைவர் அதை வாங்கிப் படித்துவிட்டு தலையை ஆட்டினார்.

சாயத் தாளைப் பிடுங்கி உற்று உற்றுப் பார்த்தார். பார்த்து விட்டு மேசை மேலே போட்டார். மற்றவர்களும் எடுத்து காயதத்தை ஆட்டி ஆட்டிப் பார்த்தார்கள்.

எரிக்ஸன் மீண்டும் பேசத் தொடங்கினான். ஆனால், மூன்றாவது நிமிடமே இன்னுமொரு இடைஞ்சல் வந்தது. சாயத் சொன்னார். "1,16,000 பேர் குடிபெயர்வதாகச் சொல்கிறீரே? அரசாங்கம் அவ்வளவு பேருக்கும் புது வீடுகள் கட்டித்தருவதாகக் கூறியிருக்கிறதே! இதில் என்ன நஷ்டம்?” என்றார்.

எரிக்ஸன் இதற்கும் பதில் அளிக்கத் தொடங்கினான். சொல்லி வைத்தபடி பதிலும் நீண்டுகொண்டேபோனது. தலைவர் தண்ணீர் குடித்தார். பாதிரியார் கொட்டாவி விட்டார். சாயத் தலையை இரண்டு பக்கமும் ஆட்டிக்கொண்டே இருந்தார்.

அப்போது, சமயம் பார்த்து நான் குறுக்கிட்டு, "தலைவரே மதிப்பிற்குரிய எமது முதல் மந்திரியாரும், திரு சாயத் அவர்களும் இன்னும் சிலரும் கடந்த வருடம் மே மாதம் 20ஆம் திகதி ஸ்விடன் போனபோது மேற்படி விஷயம் மிகவும் விஸ்தாரமாக பேசப்பட்டது. குடிபெயர்வால் ஏற்படும் சமுதாய இன்னல்கள் புது வீடுகள் கட்டுவதனால் மட்டுமே தீரக்கூடிய காரியமல்ல. இதை ஸ்வீடன் அரசாங்கமே ஒப்புக்கொண்டு எழுதியிருக்கிறது ' என்று கூறி அவர்கள் எழுதிய கடிதத்தின் நகலை சபையின் முன் வைத்தேன். எல்லோரும் பாய்ந்து எடுத்து அந்தக் கடிதத்தை படித்தார்கள்.

 

தலைவருடைய நம்பிக்கை இப்போது பரிபூரணமாக எரிக்ஸனுடைய பக்கம் திரும்பிவிட்டது. இதற்கிடையில் இரண்டு மணி நேரம் ஓடிவிட மீதி நேரத்தில் எரிக்ஸன் சொல்ல வேண்டிய தெல்லாவற்றையும் நேர்த்தியாகச் சொல்லி முடித்தான். இம்முறை அவனுக்குத் தடங்கலே இல்லை.

அவன் பேசி ஓய்ந்ததும் தலைவர் இன்னும் யாராவது ஏதேனும் சொல்ல விரும்புகிறார்களா என்று கேட்டார்.

என் மடியில் இன்னுமொரு ஆணி இருந்தது. கடைசி ஆணி. நான் சொன்னேன்.

"தலைவரே, எல்லோரும் களைப்பாகி இருக்கும் இந்தச் சமயத்தில் நேரத்தை வீணாக்காமல் விஷயத்துக்கு வருகிறேன். எந்த ஒரு காரியத்தை எடுத்தாலும் அதில் நல்ல விளைவுகளும் கெட்ட விளைவுகளும் கலந்தே இருக்கும். நல்ல விளைவுகள்கூட இருப்பின் நாங்கள் அந்தக் காரியத்தைச் செய்கிறோம்; இல்லா விடில் அதைத் தவிர்த்து விடுகிறோம்.”

"இந்த அணைக்கட்டினால் எங்களுக்கு அதிகப்படியான மின்சக்தியும், நீர்ப்பாசன வசதிகளும், கிராமங்களுக்குக் குடி தண்ணீரும் கிடைக்கிறது. அத்துடன், அடிக்கடி ஏற்படும் வெள்ளப் பெருக்குகளையும் இது தடுக்கிறது. இது எல்லாம் நல்ல விளைவுகள்தான்.”

"ஆனால், இதனால் ஏற்படும் பாதகங்களையும் நாங்கள் கணக்கு பார்க்க வேணும். சுற்றுச்சூழல் முற்றிலும் அழிந்துவிடு கிறது. 1,16,000 பேர் குடிபெயர்வதினால் ஏற்படும் சமுதாயக் கேடுகள், காடுகளின் அழிவு; மீன் முதலிய உயிரினங்களின் புலம் பெயர்வு (migration) தடை; ஆற்றிலே வண்டல் தன்மை குறைந்து விடுவதால் நசிந்துவிடும் விவசாயம்; இவையெல்லாம் பாதகமான விளைவுகள்

இந்த அறிக்கையின் 46ஆம் பக்கத்திலே கொடுத்திருக்கும் விபரங்களின்படி, நன்மைகளுக்கு 370 புள்ளிகள் என்றால் தீமை களுக்கு 520 புள்ளிகள் விழுகின்றன.”

"ஆனால், இந்தக் கணக்கிலே நாங்கள் ஒரு மிகப்பெரிய தப்பு செய்து விட்டோம்.

"இந்த இடத்தில் வாழும் 16 வகையான உயிரினங்கள் இந்தப் பிராந்தியத்திலேயே பிரத்தியேகமாக வாழும் தன்மை பெற்றவை. இந்த உலகின் வேறெந்த மூலை முடுக்கிலும் இந்த உயிரினங்களைக் காண ஏலாது. இந்தத் திட்டம் நிறைவேறினால் இந்த உயிரினங்கள் முற்றிலும் அழிந்துவிடும்; பூண்டோடு போய்விடும்.”

"இந்த உயிரினங்களின் அழிவுக்கு மதிப்புப் புள்ளிகள் போட முடியுமா? கோடி புள்ளிகள் போட்டாலும் அவை ஈடாகுமா?”

"கடவுள் இந்த உயிரினங்களைச் சிருஷ்டித்தார். எத்தனையோ கோடி ஆண்டுகள் இதே இடத்தில் உயிர் வாழ்ந்தன ஆனால், இனிமேலும் அவை உயிர் வாழும் பொறுப்பு கடவுள் கையில் இல்லை; உங்கள் ஒன்பது பேருடைய கைகளில் தான் இருக்கிறதுஎன்றேன்.

கூட்டத்தில் சிறிது நேரம் சலனமில்லை . சாயத்தின் முகம் பேயறைந்தது போலிருந்தது. பாதிரியாரின் முகத்தில் புன்சிரிப்பு

தலைவர் ஐந்து நிமிடங்களில் தன் முடிவுரையைக் கூறினார். அதன் கடைசி வாசகம்:

"தகுந்த ஆதாரங்களினாலும், ஆணித்தரமான வாதங்களாலும் இந்த அணைக்கட்டு மனித மேம்பாட்டுக்கு உகந்ததல்ல என்பது தீர்மானமாகிவிட்டது. ஆகவே இதைக் கைவிடும் ஆலோசனையை இன்றே அரசாங்கத்துக்கு அறிவிக்க நான் கடமைப்பட்டிருக்கிறேன்.”

வெளியே வந்ததும் எரிக்ஸன் என்னைக் கட்டிப்பிடித்து மேலே தூக்கினான்.

எப்படிச் செய்தாய்? எப்படிச் செய்தாய்?' என்று துளைத்து எடுத்தான். நான் "கச்சியப்பருக்கு நன்றிஎன்று கூறினேன. "யாரிந்தக் கச்சியப்பர்?” என்று நச்சரித்தான். நான்பிறகு சொல் கிறேன்என்று கூறி அவனிடமிருந்து மெள்ளக் கழன்றுகொண டேன்.

அன்று பின்னேரம் எரிக்ஸன் மறுபடியும் என் அறை கதவை விடாமல் தட்டியபடியே இருந்தான். நான் சாயங்கால பூசையை முடித்துக்கொண்டு கதவைத் திறந்ததும் என் கையைப் பிடித்து இழுக்காத குறையாகத் தன் ரூமுக்கு அழைத்துப் போனான்.

அங்கே இருந்த வசதியான கதிரையில் அவன் சாய்ந்து உட்கார்ந்து கொண்டான். என்னையும் இருக்கச் சொன்ன

பணிப்பெண்ணிடம் பீர் கொண்டு வரும்படி ஆணையிட்டான். அவள் அசைந் அசைந்து அசைந்து பீரைக் கொண்டுவந்து வைத்தாள்; கண்களைச் சுழட்டி ஒரு வீசு வீசிவிட்டுப் போய் விட்டாள். எரிக்ஸனுடைய கண்கள் அவளைத் தடவிக்கொண்டே கொஞ்ச தூரம் பின்சென்று மீண்டும் திரும்பியது.

பீரை ஊற்றிச் சுவைத்துக் குடித்தான். பிறகு என்னைப் பார்த்து, "யார், அந்தக் கசியப்பா, சொல்என்றான். அவனுடைய ஆவலும் பீருடைய நுரைபோலப் பொங்கிக்கொண்டு நின்றது.

நான் சொன்னேன்: “எரிக்ஸன், 'கசியபா' இல்லை ; கச்சியப்பர் உனக்கு இது விளங்காது. எங்கள் பழக்க வழக்கங்கள், சமயக் கோட்பாடுகள் இவற்றை அறிந்த ஒருவரால்தான் நான் சொல்லப்போவதை உண்மையில் புரிய முடியும்; இது வீண் நேரம்.”

அதற்கு எரிக்ஸன், “எந்த ஒரு விஷயமும் அதைச் சொல்லும் விதத்தில் இருக்கிறது. சொல்கிறவர் கெட்டிக்காரர் என்றால், புரிகிறவர் புரிந்து கொள்வார். நீ சொல்ல வேண்டியதைச் சொல்லு, நான் புரியும்வரை புரிந்துகொள்கிறேன்என்றான்.

காலைத் தூக்கி மேலே போட்டுக்கொண்டு, பீர் குடித்தபடி கந்த புராணம் கேட்கும் முதல் மனிதன் இவனாகத்தானிருக்கும் என்று நான் என் மனதிற்குள் நினைத்துக்கொண்டு சொன்னேன்:

"கச்சியப்பர் என்பவர் கந்த புராணம் என்ற பெருங்காப்பியத்தை தமிழிலே பாடினார். அதை அரங்கேற்றும்போது, ஒரு இலட்சம் கிரந்தங்கள் கொண்ட அந்த நூலில் முதல் செய்யுளில், முதல் வரியில், முதல் வார்த்தையிலேயே ஒரு சிக்கல் வந்து விட்டது. சிக்கலோ பெரிய சிக்கல். ஆனால், கச்சியப்பர் ஆணித் தரமான ஆதாரத்தோடு அந்தச் சிக்கலை அவிழ்க்கிறார். சபையோருக்கு அவருடைய ஆழ்ந்த புலமையிலே அளவற்ற மதிப்பும் நம்பிக்கையும் பிறக்கிறது. (the credibility is established)."

அதற்குப் பிறகு கச்சியப்பர் மீதி செய்யுள்களையெல்லாம் தங்கு தடையின்றிப் படித்து, பொருள் கூறி வெற்றிகரமாக அரங்கேற்றி முடித்தார்.”

"என்னுடைய அபிப்பிராயம், அந்த முடிச்சைக் கச்சியப்பர் வேண்டுமென்றே வைத்தார் என்பதுதான். இல்லாவிட்டால், ஒரு லட்சம் பாடல்களில் முதல் செய்யுளில், முதல் வரியில் ஒரு எக்கச்சக்கமான வார்த்தையை முதல் வார்த்தையாக யாராவது வைத்திருப்பார்களா?"

"V.D. இது நல்லாயிருக்கு : விபரமாய்ச் சொல்என்றான் எரிக்ஸன்.

 

தொண்டை மண்டலத்திலே சிறந்து விளங்கும் காஞ்சிபுரத்தில் காளத்தியப்ப சிவாச்சாரியாருக்குப் புத்திரராகப் பிறந்தார். கச்சியப்பர். அவர் தன் ஐந்தாவது வயதிலேயே வித்தியாரம்பம் செய்யப்பெற்று தமிழ், சமஸ்கிருதம் ஆகிய இரு மொழிகள் கற்றுத் தேர்ந்து வல்லுநரானார்.

ஒருநாள் குமரக்கோட்டத்து சுப்பிரமணியக் கடவுள் இவர் கனவிலே தோன்றி, "அன்பனே, நீ நமது சரித்திரத்தைக் கந்தபுராணம் எனப் பெயரிட்டு தமிழிலே பெருங்காப்பியமாகச் செய் அதற்கு முதல் அடியாக 'திகட சக்கரச் செம்முக மைந்துளான், என்று தொடங்குவாயாக" என்று கூறி மறைந்தார். இவரும் அப்படியே கந்த புராணத்தைப் பாட ஆரம்பித்து நாளொன்றுக்கு நூறு பாடல்கள் பாடி அந்தக் காப்பியத்தை குறைவற முடித்தார்.

இந்த நூலை அரங்கேற்றும் பொருட்டு தமிழ் புலவர்களுக்கும், வேத வேதாங்க பண்டிதர்களுக்கும், சிவாகம விற்பன்னர்களுக்கும் தேவார திருவாசக வல்லுநர்களுக்கும் ஓலை விடுத்துச் சபையைக் கூட்டினார்.

குறிப்பிட்ட ஒரு சுபதினத்தில் கந்த புராணத் திருமுறையை குமரக்கோட்டத்து சுப்பிரமணியக் கடவுள் முன் வைத்துத் துதித்துப் பின்னர் முதற் செய்யுளை உரைக்கலானார்:

'திகடசக்கரச் செம்முகமைந்துளான் என்று வாசித்து, அதாவது 'திகழ்+தசம்+கரம்', விளங்குகின்ற பத்து திருக்கைகளும் செவ்விய ஐந்து முகங்களுமாகவுள்ள சிவ பெருமான்' என்ற பொருள் கூறித் தொடங்கினார்.

அப்போது அங்கு கூடியிருந்த புலவர்களிலே மூத்த புலவர் ஒருத்தர் எழுந்து, "நில்லும், நில்லும்; திகழ் தசம் கரம் 'திகடசக்கரம் என்று புணர்வதற்கு விதி தொல்காப்பியம் முதலிய இலக்கண நூல்களில் இல்லையே? இது எப்படிப் பொருந்தும்என்று கூறினார்.

அதற்குக் கச்சியப்பர் திகைத்து நின்று, "இது முருகனே எடுத்துக் கொடுத்த அடியல்லவா? இதற்குக்கூட இலக்கண விதிகள் உண்டா?” என்று கேட்டார்.

அபபோது அந்தப் புலவரானவர் புன்முறுவல் பூத்து "உமக்கு அடியெடுத்துக் கொடுத்த முருகன் இவ்விடம் வந்து சாட்சி சொல்வாரானால் நாங்கள் அக்கணமே இதனை அங்கீகரிப்போம்;

 

அன்றேல் இதற்கு யாதேனும் ஒரு பிற இலக்கண நூலில் விதி காட்டினும் அங்கீகரிப்போம், அல்லாவிடில் அரங்கேற்ற ஒப்புக்

கொள்ளமாட்டோம்" என்றார்.

இக்கருணத்தில் ஏனைய புலவர்களும் இரு கூறாகப் பிரிந்து தந்தமக்கு தோன்றியபடி விவாதம் செய்ய அன்றைய போதில் முக்காப் போதும் கழிந்தது; கச்சியப்பரும் 'இதற்கு முடிவு நாளை தெரியும்' என்று கூறி சபையைக் கலைத்தார்.

கச்சியப்பர் முருகனிடம் நேரே போய், "அப்பனே, உன்னா லன்றோ நான் கந்தபுராணம் பாட முற்பட்டது. அதற்கு, நீ எடுத்துக் கொடுத்த அடியிலேயே இழுக்கு வந்துவிட்டதே. இது தகுமா?” என்று குறையிரந்தார்.

 முருகன் அவர் கனவிலே தோன்றி, “கச்சியப்பரே, பயப்பட வேண்டாம். சோழ தேசத்திலிருந்து ஒரு புலவர் நாளை வருவார். அவரால் சபையோருடைய ஐயம் தெளிவுறும்என்று கூறி மறைந்தார்.

அடுத்த நாள் சபை கூடியது. அப்போது சோழ தேசத்தி லிருந்து வந்த புலவர் ஒருத்தர் வீரசோழியம் என்ற இலக்கணநூலை சபையினரின் முன் சமர்ப்பித்து, சந்திப்படலத்தில் பதினெட்டா வது செய்யுளில் திகழ் தசம் என்பது திகடசம் என்று புணர்வதற்கு விதியிருக்கிறதைக் காட்டினார். முன்னாளில் ஆட்சேபித்த புலவரும் அதனை வாங்கிப் படித்து 'திகடசக்கரம்' என்னும் புணர்ச்சிக்கு விதி சரியாயிருக்கக் கண்டு விம்மிதமும், மகிழ்ச்சியு முற்றார்; மற்றைய புலவர்களும் ஒருவர் பின் ஒருவராக நூலை வாங்கிப் படித்துத் தங்கள் சந்தேகம் தெளிவுபெற்றனர்.

தடை பெற்ற அரங்கேற்றம் மீண்டும் தொடங்கியது. சபையோருக்குக் கச்சியப்பரிடத்தில் நம்பிக்கையும் மரியாதையும் பக்தியும் பெருகியது.

அதன் பிறகு தங்குதடை எதுவுமின்றி கச்சியப்ப சிவாச்சாரியார் கந்த புராணத்தை வாசித்து பொருளும் கூறி அரங்கேற்றி முடித்தார்.

எரிக்ஸன் கதையை நன்றாக அனுபவித்துக் கேட்டான். விழுந்து சிரித்தான். பிறகு, "உன்னுடைய கச்சியப்பர் பெரிய ஆள்தான்என்றான்.

"இதை இனிமேல் 'கச்சியப்பரின் யுக்தி' (The Kachiyapar's strategy) என்று நாங்கள் எங்களுக்குள்ளே கூறிக் கொள்வோம்என்றான்.

சிரித்துக்கொண்டே, “சரிஎன்றேன் நான்.

" V.D, அவுஸ்திரேலியாவில் நடக்கப் போகும் சம்மேளனத் துக்கு நீயும் வருகிறாயல்லவா? அங்கேயும் இதே யுக்தியைக் கையாளுவோம். அசந்து விடுவார்கள்என்றான்.

நான் "ஒரு யுக்தியை ஒருமுறை கையாளலாம். இரண்டா வது முறையும் சமயோசிதமாகக் கையாண்டு தப்பிவிடலாம். ஆனால், மூன்றாவது முறை எதிராளி உசாராகிவிடுவான். அடுத்த முறைக்கு புதிதாக ஏதாவது யுக்தி தயார் பண்ண வேண்டியது தான். கந்த புராணம் போனால் என்ன? சிவபுராணம் இருக் கிறதே! ஏதாவது தோன்றாமலா போய் விடும்!” என்றேன்.

"அதுவும் சரிதான்என்றான் எரிக்ஸன்.