Sunday, July 25, 2021
நாடும் ஏடும் அண்ணாவின் உரை
Wednesday, July 7, 2021
புவியீர்ப்புக் கட்டணம்
புவியீர்ப்புக் கட்டணம்
கடிதத்தை உடைக்கும் போதே அவனுக்குக் கை நடுங்கியது.அது எங்கேயிருந்து வந்திருக்கிறது என்பது தெரியும்.
இது மூன்றாவது நினைவூட்டல், மூன்று மாதங்களாக அவன் புவியீர்ப்புக் கட்டணம் கட்டவில்லை.
இப்போது, உடனே கட்டவேண்டும் என்று இறுதிக் கடிதம் வந்திருக்கிறது. கடந்த இரண்டு வருடங்களாகத்தான் இந்தத் தொல்லை, அதற்கு முன் இப்படி விபரீதமான ஒரு துறை புவியீர்ப்புத் துறை உண்டாகியிருக்கவில்லை .
'அம்மையே!
சொல்லுங்கள், நான் உங்களுக்கு இன்று எப்படி உதவலாம்?
புவியீர்ப்புக் கட்டணத்தை கட்டும்படி மீண்டும் நினைவூட்டல் கடிதம் வந்திருக்கிறது.'
'நீங்கள் யார் பேசுவது?
'நான் 14 லோரன்ஸ் வீதியிலிருந்து பேசுகிறேன்.
'சரி, உங்களுக்கு என்ன பிரச்சினை?
இந்தக் கட்டணம் அதிகமாக இருக்கிறது. இன்னொரு முறைபரிசீலிக்க முடியுமா?
'இதோ கணினியில் உங்கள் கணக்கை திறந்திருக்கிறேன் சென்ற மாதமும் உங்களோடு பேசியிருக்கிறேனே அதற்கு முதல் மாதமும் இதே கேள்வியைக் கேட்டிருக்கிறீர்கள்.
ஆரம்பத்தில் இருந்து ஒழுங்காக பணம் கட்டி வந்த உங்களுக்குத் திடீரென்று என்ன நடந்தது
"என்னுடைய நிதிநிலைமை மோசமாகிவிட்டது.
அதற்கு நாங்கள் என்ன செய்யமுடியும். எங்கள் துறையின் விதிமுறைகள் அடங்கிய கையேட்டை உங்களுக்கு அனுப்பியிருந்தோமே?. அதன் பிரகாரம்தான் கட்டணம் அமைத்திருக்கிறோம்
'அம்மையே, உங்கள் கையேடு மகா மிகவும் பாரமாக உள்ளது எழுத்துக்கள் எறும்புருவில் படித்து முடிப்பதற்கிடையில் ஒடி விடுகின்றன. உங்கள் கட்டண அமைப்பும் புரியவில்லை. மிக அநியாயமாக இருக்கிறது.
புரியாதது எப்படி அநியாயமாகும். நீங்கள் தண்ணீருக்கு கட்டணம் செலுத்துகிறீர்கள். மின்சாரக் கட்டணம், சமையல் வாயு கட்டணம், சூரியஒளி வரி, காற்றுத்தூய்மை வரி என்று சகலதும் கட்டுகிறீர்கள். தொலைக்காட்சி, தொலைபேசி, செல்பேசி எல்லாம் பட்டுபட்டென்று தீர்த்துவிடுகிறீர்கள். இதிலே மாத்திரம் என்ன குறை கண்டீர்கள்?
அம்மையே புவியிப்புக்கும் எனக்கும் என்ன சம்மந்தம் ஆதியிலிருந்து அது இருந்து கொண்டுதானே இருக்கிறது. நியூட்டன் அதைக் கண்டுபிடிப்பதற்கு முன்னர் கூட இருந்திருக்கிறது என்று சொல்கிறார்களே. இவ்வளவு நாளும் அதற்கு வரி விதிக்கவில்லை.
இப்பொழுது இரண்டு வருடங்களாக அதற்கும் வரி கட்டவேண்டுமென்றால் எப்படி?
ஐயா, நீங்கள் சொல்வது ஆச்சரியமாக இருக்கிறது. இந்தக் கேள்வியை இரண்டு வருடத்திற்கு முன்னரே கேட்க உங்களுக்குத் தோன்றவில்லை?
தண்ணீரை உங்கள் வீட்டுக்குக் கொண்டு வருகிறோம். காற்றை தூய்மையாக்கி சுவாசிக்க வழங்குகிறோம். கூரையிலே விழும் சூரிய ஒளியில் உங்கள் சாதனங்கள் இயங்கவதற்கு அனுமதிக்கிறோம்.
சமையலுக்கு வாயு தருகிறோம். மின்சாரம் தருகிறோம். எல்லாவிதக் கட்டணமும் கட்டிவிடுகிறீர்கள்.
ஆனால் புவியீர்ப்புக்கு மட்டும் எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள், யோசித்துப் பாருங்கள், புவியீர்ப்பு இல்லாமல் உங்களால் ஒரு நிமிடம் வாழ முடியுமா?
கார் ஓட்ட முடியுமா? நடக்க முடியுமா உங்கள் பிள்ளைகள் ஓடியாடி விளையாட முடியுமா?
ஒன்றுக்குப் போவது போல ஒரு சின்னக் காரியம்கூட உங்களால் செய்யமுடியாதே?
அம்மையே, என்னுடைய சுண்டெலி மூளையில் இவை யெல்லாம் புரிய தாமதமாகிறது. ஆனால், உங்கள் துறை என்ன செய்கிறது? புவியீர்ப்பை சுத்தம் செய்கிறதா அல்லது வீடு வீடாய் கொண்டுபோய் அதை இறக்குகிறதா? இது மிகப் பெரிய அநியாயமாகப் படவில்லையா?
அமெரிக்காவில் உள்ள அத்தனை பேரும் புவியீர்ப்புக் கட்டணம் கட்டுகிறார்கள். ஐரோப்பா கட்டுகிறது. சில ஆப்பிரிக்க நாடுகளும் கட்டத் தொடங்கிவிட்டன. உலகம் படுவேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. நீங்கள் ஒரு தேசப்பற்றாளராக நடக்கவில்லை. புவியீர்ப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்தும் அதனை முற்றிலும் பயன்படுத்தியும் அதற்கான கட்டணத்தை நீங்கள் கட்டத் தயங்குவது விசனத்துக்குரியது. இதைப் பற்றி நான் மேலிடத்துக்கு முறைப்பாடு செய்ய வேண்டியிருக்கும்….
அம்மையே, உங்கள் இனிமையான குரலும் 'முறைப்பாடு என்ற வார்த்தையும் ஒரே வாசகத்தில் வரலாமா? இந்தத் துறை துவங்கிய காலத்திலிருந்து நான் கட்டணத்தை சரியாகக் கட்டி வந்தேன் எனக்கு தேசப்பற்றும் பூமிப்பற்றும் புவியீர்ப்புப் பற்றும் அதிகம் உண்டு. புவியீர்ப்பு கவிதை ஒன்றாவது படிக்காமல் நான் தூங்கப் போவதில்லை. அம்மையே, எப்படியும் கட்டிவிடுகிறேன். சிரமத்துக்கு மன்னிக்கவும். வணக்கம்.'
'வணக்கம்.
'ஹலோ .'
'ஹலோ .'
அது யார்? 14 லோரன்ஸ் வீதிதானே? வீட்டுச் சொந்தக்காரரா பேசுவது?'
'நான்தான், சொல்லுங்கள்?
ஐயா, நான் புவியீர்ப்புத் துறையிலிருந்து பேசுகிறேன்.
நீங்கள், கடந்த நாலு மாதம் கட்டணம் கட்டாமல் எங்கள் சேவையைப் பயன்படுத்தி வருகிறீர்கள். உங்கள் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் நெருங்கி வருகிறது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.'
'அம்மையே, இது என்ன அநியாயம். நான் பணக் கஷ்டத்தில் இருக்கிறேன், கொஞ்சம் கருணை காட்டுங்கள். நான் கட்ட முடியாது என்று சொல்லவில்லையே, எனக்குச் சிறிது அவகாசம் கொடுங்கள். புவியீர்ப்பு முடிவதற்கிடையில் எப்படியும் கட்டி விடுவேன்.'
'நீங்கள் இடக்காகப் பேசுவதாக நினைக்கிறீர்கள். உங்களுக்கு இத்துடன் எட்டு அவகாசம் கொடுத்தாகிவிட்டது. எங்கள் தரவுகளின் அடிப்படையில் பார்த்தால் நீங்கள் ஏமாற்றும் பேர்வழி என்று தெரிகிறது. நீங்கள் உடனடியாக முழுப்பணத்தையும் கட்டாவிட்டால் பாரதூரமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்.
'அம்மையே, பெரிய வார்த்தை சொல்லலாமா? ஏமாற்றுவது என்ற வார்த்தையை எழுத்துக்கூட்டக்கூட எனக்கு வல்லமை பத்தாது, நான் அப்படியான ஆளும் அல்ல. சின்ன வயதில் அம்மாவின் கோழிக்குஞ்சு ஒன்றை அவருக்குத் தெரியாமல் திருடி விற்றது பற்றி யாரோ சொல்லியிருக்கிறார்கள். தேவ சங்கீதம் போல ஒலிக்கும் உங்கள் குரலில் இந்த வார்த்தைகள் வரலாமா?
இந்த மாதம் முழுக்காசையும் கட்டிவிடுகிறேன்.
"சரி, அப்படியே செய்யுங்கள். அடுத்த மாதம் எங்கள் துறையிலிருந்து ஒருவர் உங்களை அழைக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.'
மெத்தச் சரி. அம்மையே, ஒரு விளக்கம் கூறவேண்டும்….
'சொல்லுங்கள்….
'ஒவ்வொரு மாதமும் இந்தக் கட்டணம் ஏறிக்கொண்டு வருகிறதே. அது ஏன்?
நாங்கள் அனுப்பிய சுற்றறிக்கை 148.8 ஐ நீங்கள் படிக்க வில்லையா?
'இல்லை , அம்மையே.'
அதில் 48வது பக்கத்தை படிக்கவேண்டும்.
புவியீர்ப்பை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள். உங்கள் மனைவி பயன்படுத்துகிறார் உங்கள் இரண்டு பிள்ளைகளும் பயன்படுத்துகிறார்கள். உங்கள் எடை மாதாமாதம் கூடுகிறதல்லவா, அதுதான் காரணம். உங்கள் எட்டு வயது மகனைக் கேட்டிருந்தால் அவன் பதில் சொல்லியிருப்பானே.'
'உங்களுக்கு எப்படி என் மகனின் வயது எட்டு என்று தெரியும், இது பெரிய அநியாயமாக இருக்கிறதே.'
'ஐயா, எங்களுக்கு எல்லாம் தெரியும். உங்கள் மகன் பிறந்தது அல்பெர்ட் மார்ட்டின் மருத்துவமனையில், அவனுடைய எடை பிறக்கும்போது 7 றாத்தல் 8 அவுன்ஸ் என்பதும் பதிவாகியிருக்கிறது. உங்கள் மனைவியின் சுற்றளவு அதிகமாகி வருகிறதே, அதைக் கவனித்தீர்களா?'
'நீங்கள் எல்லை மீறிப் பேசுகிறீர்கள்?'
'ஏன் கட்டணம் கூடுகிறது என்று கேட்டீர்கள், அதற்குக் காரணம் கூறினேன். இந்தத் திட்டத்தால் பயன் பெற்றவர்கள் அதிகம். சிலர் தங்கள் எடையைக் கணிசமாகக் குறைத்து விட்டார்களே .'
அம்மையே, எங்கள் எடை எப்படி உங்களுக்குத் தெரியும்?.
'நீங்கள் சுற்றறிக்கை 133.6 ஐ படித்திருக்கவேண்டும்.
உங்களுடைய இன்றைய எடை 174, கடந்த மாதம் அது 172 ஆக இருந்தது. உங்கள் வீட்டு மூலைகளில் பொருத்தியிருக்கும் மந்திரக் கண்கள் இந்தத் தகவல்களை எமக்கு அனுப்புகின்றன.'
'அம்மையே, நாங்கள் இரண்டு வாரகாலம் இந்த நாட்டில் இல்லை. வெளிநாட்டுக்குப் பயணம் போயிருந்தோம். அதற்குக் கழிவு ஒன்றும் இல்லையா? நாங்கள் இந்த நாட்டு புவியீர்ப்பை பயன் படுத்தவில்லையே?
ஐயா. இதையெல்லாம் எங்கள் துறை முன்கூட்டியே ஆழமாக சிந்தித்திருக்ககிறது. உங்கள் சட்டத்தரணிமூலம் ஒரு சத்தியக் கடதாசி தயாரித்து அனுப்பிவிடுங்கள். இந்தத் தேதியிலிருந்து இந்தத்தேதிவரை நாங்கள் இந்த நாட்டு புவியீர்ப்பை பாவிக்கவில்லை.
நாங்கள் பயணம் சென்ற தேசத்தில் அவர்களுக்குச் சேரவேண்டிய புவியீர்ப்பு கட்டணத்தைச் செலுத்திவிட்டோம்.
இப்படி எழுதி அனுப்புங்கள். நாங்கள் அதற்கான கழிவை உங்கள் கணக்கில் சேர்த்துவிடுவோம்.'
நன்றி அம்மையே, நன்றி. உங்கள் அறிவுக்கூர்மை என் நெஞ்சைத் துளைத்தாலும் உங்கள் குரல் இனிமை என்னைத் திக்கு முக்காட வைக்கிறது. இன்னும் ஒரேயொரு கேள்வி கேட்க அனுமதிப்பீர்களா?'
'சரி, கேளுங்கள்.'
'என்னுடைய மாமியார் படுத்த படுக்கையாக இருக்கிறார். அவர் ஒரு கட்டிலில் தூங்குகிறார். அவருக்குப் பக்கத்தில் ஒரு கிளாசில் அவர் பல் தூங்குகிறது. அவர் புவியீர்ப்பை பாவிப்பதே இல்லை. அதற்கு ஏதாவது சலுகை உண்டா ?'
இப்படி ஒரு கேள்வி கேட்கிறீர்களே. நான் வெட்கப்படுகிறேன். உங்கள் மாமிக்கு புவியீர்ப்பு இல்லையென்று வையுங்கள். அவரால் கட்டிலில் படுத்திருக்க முடியுமா?
இப்பொழுது செவ்வாய் கிரகத்தைத்தாண்டி அல்லவோ பறந்து போய்க்கொண்டிருப்பார்.'
'மன்னியுங்கள். என்னுடைய மூளையைப் பிரகாசிக்க வைத்து விட்டீர்கள். இன்றே புவியீர்ப்புக் கட்டணத்தைக் கட்டி விடுவதாக வாக்குறுதியளிக்கிறேன்.'
'முதலில் செய்யுங்கள்.'
'ஹலோ '
'ஹலோ
ஐயா, உங்கள் வாக்குறுதியும் செவ்வாய் கிரகத்தைத் தாண்டி பறந்து கொண்டிருக்கிறது. இறுதி எச்சரிக்கை தருவதற்காக வருந்துகிறேன். இன்னும் ஒரு வாரத்திற்குள் நீங்கள் நிலுவைக் கட்டணம் முழுவதையும் கட்டிவிடவேண்டும்.'
அம்மையே, இது என்ன இப்படி வெருட்டுகிறீர்கள். நான் வைத்துக் கொண்டு இல்லையென்கிறேனா?
காற்று வரி "வாயு கட்டணம் கட்டினேன், தண்ணீர்க் கட்டணம் கட்டினேன் ,மின்சாரக் கட்டணம் கட்டினேன்.'
அதைத்தான் நானும் கேட்கிறேன். எல்லாத் துறைகளுக்கும் பணத்தைக் கட்டுகிறீர்கள், புவியீர்ப்புக் கட்டணத்தை கட்டுவதற்கு மட்டும் தயக்கம் காட்டுகிறீர்கள்.'
"அதன் காரணம் உங்களுக்குத் தெரியும்தானே "
இல்லை, தெரியாது. தயவுசெய்து என் அறிவைக் கூட்டுங்கள்.
மின்சாரக் கட்டணம் கட்டாவிட்டால் இணைப்பைத் துண்டித்து விடுவார்கள். தண்ணீர்க் கட்டணம் கட்டாவிட்டால் தண்ணீரை வெட்டிவிடுவார்கள். காற்று, தொலைபேசி, வாயு எல்லாத்தையும் வெட்டிவிடுவார்கள். புவியீர்ப்புக் கட்டணம். கட்டாவிட்டால் அதைத் துண்டிப்பீர்களா? நியூட்டன் திரும்ப பிறந்து வந்தால்கூட அதைச் செய்யமுடியாதே.'
'ஐயா, சுற்றறிக்கை வாசிக்கத் தெரியாத நீங்கள் இவ்வளவு சிந்திப்பீர்கள் என்றால் இந்தத் துறையை நடத்தும் விஞ்ஞானிகள் எவ்வளவு சிந்திப்பார்கள். சென்றவாரம் செய்தித்தாள் படித்தீர்களா?"
'நீங்கள் என்னுடைய நாலாம் வகுப்பு உபாத்தினிபோல கேள்விக்கு மேல் கேள்வி கேட்கிறீர்கள்.'
'ஐயா, நீங்கள் சுற்றறிக்கைதான் படிப்பதில்லை, பேப்பர் என்ன பாவம் செய்தது, அதைப் படிக்கலாம் அல்லவா?"
'அம்மையே, என் கனவில் துர்தேவதைகள் வந்து என்னை ஆட்டிப்படைக்கின்றன. நான் என்ன செய்ய?'
'சரி, துர்தேவதைகள் போன பிறகு பேப்பரைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.'
'அம்மையே, என் ஆவலைப் பெருக்கவேண்டாம். தாங்க முடியவில்லை. பேப்பரில் என்ன செய்தி வந்தது, தயைகூர்ந்து செப்புங்கள்.'
'செப்புகிறேன். ஒருவர் எட்டுமாதத்துக்கு புவியீர்ப்புக் கட்டணம் கட்டாமல் உங்களைப்போல ஏமாற்றிக்கொண்டே வந்தார்.'
அப்படியா?
'அவருக்கு தண்டம் விதித்தோம், அவர் அதையும் கட்டவில்லை., ஆகவே புவியீர்ப்பை அவர் இனிமேல் பாவிக்கக் கூடாது என்று தீர்மானித்தோம்.'
பிறகு என்ன நடந்தது?'
அவரை விண்வெளிக்கலத்தில் ஏற்றிச்சென்று புவியீர்ப்பு இல்லாத இடத்தில் இறக்கி விட்டோம். மனிதர் ஒரு தடவை பூமியைச் சுற்றி வந்தார். அதற்கிடையில் மனது மாறி சம்மதித்து விட்டார்..
திரும்பவும் அவரைப் பூமியில் கொண்டுவந்து இறக்கிவிட நேர்ந்தது.'
'உண்மையாகவா!
மனிதர் முழுக்காசையும் கட்டினார்; தண்டத்தையும் கட்டினார்; வட்டியையும் கட்டினார். ஆனால், ஒரு பிரச்சினை?
'அது என்ன ?'
'விண்வெளிக்கலத்தில் ஏற்றிச்சென்ற பயணச் செலவு விண்வெளி உடையின் விலை, இன்ன பிற செலவுகளை மாத மாதம் கட்டுகிறார். 2196 மாதங்களில் கட்டி முடித்து விடுவார்.
2196 மாதங்களா?
'ஓமோம், கட்டிமுடிக்க 183 வருடங்கள் ஆகும்.
'அவ்வளவு வருடம் வாழ்வாரா?'
'அது தெரியாது. அவருடைய பிள்ளைகள் நிலுவை கணக்குக்கு உத்திரவாதம் கொடுத்திருக்கிறார்கள்.'
'அம்மையே, நான் இன்றே உங்கள் கட்டணத்தை ஒருசதம் மிச்சம் வைக்காமல் கட்டிவிடுகிறேன்.''
'ஹலோ .'
'ஹலோ '
'உங்களைப் பற்றி புவியீர்ப்புத்துறையினர் சிலாகித்து சொன்னார்கள். நீங்கள் கட்டணத்தை உடனுக்குடன் கட்டி விடுவதாக புகழ்கிறார்கள்.'
'நன்றி. நீங்கள் யார் பேசுவது? தொண்டை அடைத்த வாத்தின் குரல்போல இருக்கிறதே!
'நான்தான் பூமிப்யணத்துறையில் இருந்து பேசுகிறேன்
இது என்ன புதுத்துறையா?'
என்ன ஐயா எங்களுடைய கடிதம், சுற்றறிக்கை ஒன்று கவில்லையா? மூன்று மாதக் கட்டணம் நிலுவையில் இருக்கிறதே.
'என்ன கட்டணம்?'
பூமிப் பயணக் கட்டணம். அதாவது பூமி சூரியனைச் சுற்றி வருவது உங்களுக்குத் தெரியும். ஒருமுறை பூமி சூரியனைச் போது நீங்கள் 149,600,000 மைல்களைக் கடக்கிறீர்கள். நினைத்துப் பாருங்கள். இத்தனை மைல்கள் நீங்கள் இலவசமாகப் பயணம் செய்கிறீர்கள். ஒரு சதம் செலவு இல்லாமல், இனிமேல் இது இலவசம் கிடையாது. பயணத்துக்கு கட்டணம் கட்டவேண்டும்.
அப்படியா. அருமையான விசயம். இனிமேல் நாள் நாளாக எண்ணாமல் மைல் மைலாக எண்ணலாம். நினைத்துப் பார்க்கும் போதே புல்லரிக்கிறது.
முதலில் மூன்று மாதக் கட்டணத்தை அனுப்பிவிடுங்கள் பிறகு புல்லரியுங்கள். நீங்கள் பயணம் செய்த தூரம் 37,400,000 மைல்கள்,
'அதற்கென்ன. பாட்டுப் பாடிக்கொண்டு ஒரு காசோலை எழுதி ஒப்பம் வைத்து அனுப்பி விடுகிறேன்.
ஒரு கேள்வி அம்மையே. இதிலே, விமானத்தில் இருப்பதுபோல முதலாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு, மூன்றாம் வகுப்பு என்று இருக்கிறதா?
இல்லை. இல்லவே இல்லை. எல்லோரும் சரிசமம்தான்.
'மிச்சம் நல்லது. சமத்துவம் என்றால் எனக்குப் பிடிக்கும். என்னுடைய அம்மாவுக்கும் பிடிக்கும்.'
'உங்களுக்கு ஒரு சலுகையும் இருக்கிறது.'
'அப்படியா, சொல்லுங்கள்.'
'லீப் வருடத்தில் ஒரு நாள் அதிகம் அல்லவா? ஆனால், நாங்கள் கட்டணத்தைக் கூட்டப்போவதில்லை. லீப் வருடத்திலும் அதே கட்டணம்தான்.'
'நம்பவே முடியவில்லை. இந்த நற்செய்தி கொடுத்த உங்களுக்கு ஒரு முத்துமாலை பரிசளித்தாலும் தகும். அல்லா விடில் புள்ளி விழாத சிவந்த ஆப்பிள் கொடுத்தாலும் தகும். கேட்கும் போதே மனம் புளகிக்கிறது. அம்மையே,
பணக்காரர்களுக்கு நல்ல வசதியிருக்கிறது. அவர்கள் அதிகக் கட்டணம் கட்டலாம் அல்லவா?
பாருங்கள், உங்கள் மூளை சுறுசுறுப்பாக வேலை செய்கிறது. உங்களைப்போல ஆட்கள்தான் பூமிக்குத் தேவை. நீங்கள் விமானத்தில் போகும்போது, அளவுக்கு அதிகமான பொதி கொண்டு போனால் மிகை கட்டணம் கட்டவேண்டும். அப்படித்தான் இங்கேயும்.'
'உதாரணமாக?
பணக்காரரிடம் நாலு வீடுகள், ஐந்து கார்கள், அப்படி ஏராளமான பொருள்கள் இருந்தால் அவர் மிகை கட்டணம் கட்ட வேண்டும். சாதாரண குடும்பத்தவர்கள் மிகை கட்டணம் கட்டத் தேவையில்லை. உங்களுக்கு அந்த அபாயம் கிடையாது
அம்மையே, உங்களை எப்படிப் பாராட்டுவது என்றே தெரியவில்லை. இன்றே என் பயணக் கட்டணத்தை அனுப்பி விடுவேன்.'
'நல்லது. அது என்ன சத்தம்?'
'ஒன்றுமில்லை . பூமி பிரண்டு மறுபக்கம் திரும்பும் சத்தம்
'சரி, நீங்கள் என்னிடம் பத்து நிமிடம் பேசியபோது 11000 மைல்கள் பிரயாணம் செய்துவிட்டீர்கள். அதற்கும் சேர்த்து பணத்தைக் கட்டிவிடுங்கள்.'
‘உடனே, உடனே செய்வேன். இதனிலும் பார்க்க மகிழ்ச்சிதரும் விசயம் எனக்கு வேறு என்ன இருக்கிறது? இன்னொன்று"
'என்ன ?'
'நான் ஒரு சுற்றுலா போவதற்கு திட்டமிட்டிருந்தேன். இந்த பெரிய பிரபஞ்ச பயணம் போகும்போது, சின்னஞ்சிறு சுற்றும் என்ன கேடு என்று அதை நிறுத்திவிட்டேன். அந்தக் காசை மிச்சம் பிடித்து பூமிப் பயணக் கட்டணத்தை உடனே கட்டிவிடுகிறேன்.'
'பூமிப் பற்றாளர் என்றால் நீங்கள்தான்.'
'அம்மையே, ஓர் ஆலோசனை. நட்சத்திரங்கள் சும்மா சும்மா சும்மா மினுங்கிக்கொண்டு கிடக்கின்றன.
அதற்கு ஒருவரும் வரி கட்டுவதில்லை. சந்திரன் வளர்வதும் தேய்வதுமாய் இருக்கிறான். அவனையும் வளைத்துப் போடவேண்டும். ஒருவருமே கவனிப்பதில்லை !
அருமையான யோசனை. கவனிக்கிறோம். கவனிக்கிறோம்
Tuesday, July 6, 2021
சுவருடன் உரையாடும் மனிதர்
சுவருடன் பேசும் மனிதர்
'
கனடாவிற்கு வந்து ஏற்பட்ட பிரச்சினைகளுள் ஒன்று தலைமுடி வெட்டுவது. நான் வசித்த வீட்டிலிருந்து தலைமுடி திருத்தும் இடம் நாலே நிமிட தூரத்தில் இருந்தது. கடந்த ஏழு வருடங்களாக மாதம் ஒருமுறை அங்கே சென்றிருக்கிறேன். அதன் உரிமையாளர் ஓர் இத்தாலியர், பெயர் ரோனி. அவரும் இரண்டு,மூன்று உதவியாளர்களும் அங்கே வேலை செய்தார்கள்.
ரோனி நட்பானவர். அவருடைய முடி அலங்கோலமாக சிதறுன்டு போயிருக்கும். நான் அவருக்குச் சொல்வேன், 'என்ன உங்களுடைய முடியே இப்படித் தாறுமாறாக இருக்கிறது. உங்கள் வாடிக்கைக்காரர்கள் இதைப் பார்த்து வராமல் போய்விடுவார்களே, அவர் சொல்வார், 'என்ன செய்வது. என்னைப்போல ஒரு நல்ல முடிதிருத்துபவர் கிடைத்தால் உடனே தலையைக் கொடுத்து விடுவேன். இங்கே எல்லோருமே மோசம். அதுதான் முடிவெட்டுவதைத் தள்ளிப் போட்டுக்கொண்டே வருகிறேன்.'
நானும் ரோனியைப் போல அவருடைய உதவியாளர் களிடம் தலையைத் தரமாட்டேன். வரிசையில் உட்கார்ந்திருக்கும் வாடிக்கைக்காரர்களுடன் என் முறைக்காகக் காத்திருப்பேன். ரோனியிலே எனக்குப் பிடித்தது அவசரமின்மை . நிதானமாக, தொழில் சுத்தமாக வேலையை முடிப்பார். எப்படி வெட்ட வேண்டும் என்று கேட்க மாட்டார். என்ன சைஸ் கிளிப் என்று கேட்கமாட்டார். பிடரியில் நேர் வெட்டா அல்லது குறைவெட்டா என்றெல்லாம் கேட்கமாட்டார். ஒவ்வொரு வாடிக்கைக்காரருக்கும் அவரிடம் குறிப்பு உண்டு. தையல்காரரிடம் இருப்பது போல, மருத்துவரிடம் இருப்பது போல. அதைப் பார்த்து தன் வேலையைச் செம்மையாக முடித்துவைப்பார்.
அவரிடம் எனக்குப் பிடிக்காத ஓர் அம்சமும் இருந்தது. 'ரோனி விளையாட்டுப் பிரியர். அவர் தலைமுடி வெட்டும்போது, முதல் நாள் நடந்த ஐஸ் ஹொக்கி பற்றி அல்லது கூடைப்பந்து பற்றி அல்லது பேஸ்போல் பற்றி ஓயாது பேசுவார். விளை யாட்டைப் பற்றி தெரியாது என்று சொன்னால் கனடாவில் ஒரு புழுவைப் பார்ப்பதுபோல பார்ப்பார்கள்..
ஆகவே, முதல் நாள் நான் அதற்குத் தயாரிக்க வேண்டும். – தொலைக்காட்சியில் விளையாட்டுகளைப் பார்த்து முக்கியமான குறிப்புகளை எடுத்து வைத்துக்கொள்வேன். அடுத்த நாள் முடி திருத்தும்போது ஏதாவது ஒரு குறிப்பிட்ட சம்பவத்தைச் சொல்லி அவரை மகிழ் விப்பேன். அன்று முடிவெட்டு உத்தமமாக அமையும்.
ஆனால், எத்தனை வருடங்கள்தான் இந்த நாடகத்தை ஆட முடியும். எனக்கும் அலுப்பு பிடித்தது. நான் வேறு இடத்தில் முடிவெட்ட ஆரம்பித்தேன். அது 20 நிமிட தூரத்தில் இருந்த பெரிய நிலையம், பெண்கள் பகுதி தனியாக இயங்கியது.. ஆட்கள் வருவதும் போவதுமாக ஒரே கலகலப்பு. நான் வாயே திறக்காத ஒரு வேலைக்காரரிடம் போகலாம் என்ற முடிவில் இருந்து. என்னுடைய முறை வந்தபோது, புதன்கிழமை என்ற வாசகம் எழுதிய தடித்த உடையை வியாழக்கிழமை அணிந்திருந்த ஐம்பது வயதுக்காரர் ஒருவர் என் முடியை வெட்டத் தயாராயிருப்பதாகச் சொன்னார். ஒருநாள் பிந்திய ஆள் என்றாலும் அவர் தலையைச் சரித்து புன்னகைத்த விதம் எனக்குப் பிடித்துக்கொண்டது.
அவர் வாய் திறந்து ஒரு வார்த்தை பேசவில்லை . கருமமே கண்ணாகி அவர் முடியை வெட்டி முடித்ததும் கண்ணாடியில் பார்த்தால் அது வெகு நேர்த்தியாக இருந்தது. ஒரு கலைஞனின் வேலை என்பதில் சந்தேகமே இல்லை. அவருடைய கைகள் வண்ணத்துப் பூச்சி போல துரிதமாக இயங்கின.
தலையிலே ஆடிக் கொண்டிருக்கும் ஆயிரம் முடிகளில் ஒரு மயிரை மட்டும் அவர் கத்தரிக்கோல் தேடி லாவகமாக வெட்டும். அவ்வளவு நுட்பமான கலைஞன்.
அடுத்த முறையும் அவர்தான் வெட்டினார். அதற்கு அடுத்த முறை சென்றபோது அவருக்காகக் காத்திருந்து அவர் முடிவெட்ட ஆரம்பித்தபோது ஒரு சம்பவம் நடந்தது. முடி திருத்துபவரைப் பார்த்தால் மத்திய கிழக்கு நாட்டைச் சேர்ந்தவர் போலத் தோற்றமளித்தார். கண்கள் பழுப்பு நிறத்திலும் முடி கறுப்பாகவும் இருந்தது. அவருடைய நடை உடை பாவனைகள் எல்லாம் வித்தியாசமாகவே தோன்றின.
வாடிக்கைகாரர்களிடம் பேசும்போது அவருடைய உச்சரிப்பு அரேபியர்களுடையதைப் போல இருந்ததையும் கவனித்தேன்.
அன்று பெண்கள் பகுதியில் இருந்து மிக நாகரிகமாக உடையணிந்திருந்த ஒரு பெண் இவரிடம் வந்தாள். கறுப்பு காலணியும்சிவப்பு கையுறையுமாக பார்த்தவுடனேயே இவள் அரேபியப் பெண் என்று சொல்லிவிடலாம். வயது முப்பதுக்குள்தான் இருக்க வேண்டும் அதிகாரம் செய்தே பழக்கப்பட்டவள் போல ஒருகையை இடுப்பில் வைத்து சாய்ந்து நின்றாள். ஏதோ அரபு போன்ற மொழியில் வேகமாகப் பேச அந்த மனிதர் ஒரு வார்த்தையில் ஏதோ சொன்னார். அந்தப் பெண் மீண்டும் சங்கிலித் தொடர் போல் நிற்காமல் பேசினாள், இவர் மறுபடியும் சுருக்கமாகப் பதில் கூறினார்.
அவள் தொடர்ந்து ஏதோ கேட்க உனக்குக் தெரியவில்லையா? எனக்கு அரபு மொழி தெரியாது என்று உரத்து ஆங்கிலத்தில் சொன்னார்.
ஒரு குதிரை பக்கவாட்டில் நகர்வது போலவே அவள் நகர்ந்து சற்று எரிச்சலாகவே அந்த இடத்தை விட்டு அகன்றாள்.
எல்லோரும் இவரையே பார்த்தார்கள். இவர் ஒருவித பதற்றமும் இன்றி முன்புபோல அமைதியாக என் முடியை வெட்டிக் கொண்டிருந்தார்.
நான் முதன்முதலாக இவரிடம் பேச்சுக் கொடுத்தேன். இவர் ஈராக்கில் இருந்து போருக்கு முன்னர் சதாம் காலத்தில் கனடாவுக்குக் குடிபெயர்ந்தவர்.
அந்தப் பெண் தலையலங்காரம் செய்ய வந்திருக்கிறாள். அவளுக்கு ஆங்கிலம் தெரியாது. அவள் பேசும் அரபுவை மொழிபெயர்த்து ஆங்கிலத்தில் கூறுமாறு கேட்டிருக்கிறாள். இவர் தனக்குத் தெரியாது என்று சொல்லியிருக்கிறார்.
ஈராக்கில் இருந்து புலம்பெயர்ந்த ஒருவருக்கு அரபு மொழி தெரியாது என்பதை அவள் நம்பவில்லை. அதுதான் கோபமாகச் செல்கிறாள்.
எனக்கு ஆச்சரியம். நான் வாழ்நாளில் சந்திக்கும் முதல் ஈராக்கியர் இவர்தான். ஆதி காவியமான கில்காமேஷ் இலக்கியம் பிறந்த நாடு என்று எனக்கு ஈராக்கில் மதிப்பு உண்டு. நாலாயிரம் வருடங்களுக்கு முன்பு சுமேரிய எழுத்தில் எழுதிய அந்தக் காவியம் இன்றும் களிமண் தட்டைகளில் அங்கே பாது காக்கப் படுகிறது.
"நான் அவரிடம் கேட்டேன். எப்படி உங்களுக்கு அரபு மொழி தெரியாமல் போனது?”
'நான் ஈராக்கில் பிறந்தாலும் அநேகமாக வெளிநாடுகளில் தான் வளர்ந்தேன். என்னுடைய தந்தையார் ஈரான், சிரியா போன்ற நாடுகளில் வேலைசெய்தார். நான் பொறியியல் படிப்பு படித்தவன். ஈராக்கில் தொடர்ந்து வாழமுடியாமல் தஞ்சம் கேட்டு கனடாவுக்கு வந்தோம். என் மகன் இப்போது வெளிநாட்டில் வேலை செய்கிறான்
நான் இங்கே தனியாகத்தான் வாழ்கிறேன்.'
பொறியியல் படித்துவிட்டு இந்தத் தொழிலுக்கு எப்படி - வந்தீர்கள்?'
'நான் மாத்திரமில்லை . என் போல பலபேர் வந்து இங்கே முற்றிலும் வேறு வேலை செய்கிறார்கள் – ஆங்கிலத்தில் இன்னொரு முறை என்னால் பொறியியல் படிக்க முடியவில்லை. ஆனால், எனக்கு இந்தத் தொழிலில் ஒரு மோகம் என்று சொல்லலாம்,. மூன்று மாதப் பயிற்சியில் முடி வெட்டப் பழகிவிட்டேன் இதுவும் பொறியியல் போலத்தான்.
மிகப் பெரிய கலை. ஒவ்வொரு நாளும் நான் வீட்டுக்குப் போகமுன்னர் ஒரு புது விசயம் கற்றுக்கொண்டு போவேன்
என்னால் நம்பமுடியவில்லை இந்த மனிதரை அதிசயத்தோடு பார்த்தேன். இனிய புன்னகை மாறாமல் தொழிலில் கவனமாக இருந்தார்.
'நீங்கள் இன்னும் ஆரம்பக் கேள்விக்கு பதில் சொல்லவில்லை. நீங்கள் என்ன மொழி பேசுவீர்கள்?
நான் படித்தது பாரசீக மொழி. அது தொழிலுக்காக, வீட்டு மொழி அராமிக்.'
அராமிக்கா? கேள்விப்பட்டதில்லையே.'
'அப்படி ஒரு மொழி இருக்கிறது. என் மகனுக்கும் கொஞ்சம் தெரியும். என் மனைவியும் நானும் வீட்டிலே அதுதான் போசுவோம். போனவருடம் என் மனைவி இறந்துவிட்டார்.
எனக்கு இங்கே என் மொழி பேசுவதற்கு ஒருவருமே இல்லை .
கனடாவில் இந்த மொழி பேசுபவர்கள் சிலர் இருப்பதாகக் கேள்வி. ஆனால், அவர்களுடன் என்னால் தொடர்புகொள்ள முடியவில்லை.'
அராமிக் மொழி பேசும் நாடு என்று ஏதாவது உண்டா?
'அப்படி இருந்தால் அது பெரிய வரம் அல்லவா? நான் Syrian Othodox Churchஐ சேர்ந்த கிறிஸ்தவன். சதாம் ஆட்சியில் நாங்கள் பட்ட கொடுமைகளைச் சொல்லி ஆற்ற முடியாது. உலகத்தில் இன்று ஒரு மில்லியன் மக்கள் அராமிக் மொழியைப் பேசுகிறார்கள். ஆனால், துயரம் என்னவென்றால், அவர்கள் ஓர் இடத்தில் இல்லை. அவர்களுக்கு ஒரு நாடு இல்லை .
சிதறிப்போய் ஈரான், ஈராக், இஸ்ரேல், லெபனான், சிரியா போன்ற பல நாடுகளில் சிறுசிறு குழுக்களாக வாழ்கிறார்கள்.
அவர்கள் எங்கே வாழ்ந்தாலும் அவர்கள் ஒடுக்கப்பட்ட மக்கள்தான்.
உலகத்தில் முதன் முதலாக சட்டத் தொகுப்பை வழங்கியவன் 3700 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த எங்கள் மன்னன் ஹமுராபி ஒடுக்கப்பட்டவர்களைக் காப்பதற்குத்தான் அவன் சட்டம் இயற்றினான்
இன்று நாங்கள் ஒடுக்கப்பட்டு, துரத்தப்பட்டு நாடு நாடாக அலைந்து கொண்டிருக்கிறோம்.'
கனடா நீங்கள் தேர்ந்தெடுத்த நாடுதானே. இங்கே உங்களுக்கு முழுச்சுதந்திரம் உண்டல்லவா?
'நண்பரே, இது சொர்க்கம் இதில் என்ன சந்தேகம். இங்கே வந்தபின் நான் நினைத்தேன்;
ஒடுக்கப்பட நாடுகளைச் சேர்ந்த மக்கள் ஒவ்வொருவரும் ஒரேயொரு நாள் என்றாலும் கனடாவில் வாழ்ந்து பார்க்க வேண்டும். அப்பொழுதுதான் அவர்களுக்குச் சுதந்திரக் காற்று என்பது என்னவென்று தெரியவரும். நான் சொன்னது எங்கள் மொழியை. இன்று அது அழிந்து கொண்டு வருகிறது. எங்கேயெல்லாம் எம் மக்கள் வாழ்கிறார்களோ அங்கேயெல்லாம் எங்கள் மொழி விழுங்கப்படுகிறது. ஆபத்தில் இருக்கும் மொழி என்று எங்கள் மொழியை அறிவித்து விட்டார்கள். இன்னும் சில வருடங்களில் அது அழிந்து போகக் கூடும்.
அப்படி நிச்சயமாகச் சொல்லமுடியுமா?
அப்படித்தான் அறிவித்திருக்கிறார்கள். நீங்கள் இரவு நேரத்தில் என் வீட்டுக்கு வந்தால் நான் அராமிக் புத்தகங்களைப் படித்துக்கொண்டிருப்பதைப் பார்ப்பீர்கள்.
சுவர்களுடன் அராமிக்கில் பேசுவேன்.
பழக்கம் விட்டுப்போய்விடுமே என்ற பயம்.
"நான் பேசும் ஒவ்வொரு நிமிடமும் என் மொழி வாழ்ந்து கொண்டிருக்கிறது."
இப்பொழுது அவர் முடிவெட்டுவதை நிறுத்திவிட்டார்.
சற்று எட்ட நின்று தலையை இரண்டு பக்கமும் சரித்து என் முடியை உன்னிப்பாகக் கவனித்தார்.
பின்னர் முகத்தைப் பார்த்தார். திடீரென்று 'ஷாம்பூ போடவா?' என்றார். நான் சம்பாஷணை தொடரவேண்டும் என்பதில் ஆவலாயிருந்தேன். சரி என்று தலையாட்டினேன்.
'நான் நிறையப் பேசிவிட்டேன். நீங்கள் எந்த நாடு, என்ன மொழி பேசுவீர்கள் என்று சொல்லவில்லையே?'.
நான் சொன்னேன். நானும் உங்களைப் போலத்தான். நான் பேசுவது தமிழ்மொழி. இலங்கைக்காரன்.
அங்கே எங்கள் மொழியை சிங்களம் விழுங்கிக் கொண்டிருக்கிறது'
உங்கள் மொழியைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அது பழைய மொழி அல்லவா?'
அது உண்மை இரண்டாயிரம் ஆண்டுகள் தொன்மையான இலக்கியங்கள் எங்களிடம் இருக்கின்றன.
கிறிஸ்து பிறப்பதற்கு 300 ஆண்டுகளுககு முன்னராகவே செதுக்கிய தமிழ் பிராமிக் கல்வெட்டுகள் அகப்பட்டிருக்கின்றன. இன்று உலகத்தில் பல நாடுகளில் 80 மில்லியன் மக்கள் தமிழ் பேசுகிறார்கள்.
எண்பது மில்லியனா? நம்பவே முடியவில்லை.
எங்கள் மொழியிலும் பார்க்க 80 மடங்கு அதிகமான எண்ணிக்கை அதிர்ஷ்டம் செய்த மொழி. ஆனால், உங்களுக்கென்று ஒரு நாடு உண்டா ?'
இல்லை .
' 'உங்கள் மொழியில் தேசிய கீதம் உண்டா ?
' 'இல்லை .'
'அப்படியானால் உங்கள் மொழிக்கும் என் மொழிக்கும் பெரிய வித்தியாசமே இல்லை .'
'எப்படி அவ்வளவு நிச்சயமாகச் சொல்லமுடியும்?'
'நீங்கள் வரலாற்றைப் படித்தால் தெரிந்துவிடும். கிறிஸ்து பிறப்பதற்கு 1000 ஆண்டுகளுக்கு முன்னரே ஹீப்ரு மொழியும், அராமிக் மொழியும் செழித்து வளர்ந்தன. இரண்டுக்குமே சம வயது. இரண்டிலுமே எழுதப்பட்ட செல்வங்கள் இன்று வரை பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
நாளடைவில் இரண்டு மொழிகளுமே நலிந்தன. 100 வருடங்களுக்கு முன் ஹீப்ரு மொழி எழுத்தில் மட்டுமே வாழ்ந்தது. பேசுவதற்கு ஓர் ஆன்மா இல்லை. இன்று ஐந்து மில்லியன் மக்கள் ஹீப்ரு பேசுகிறார்கள். எழுதுகிறார்கள். பழைய இலக்கியங்களும் புதிய இலக்கியங்களும் படிக்கிறார்கள்.
அவர்களுககு ஒரு நாடு உண்டு. அதன் பெயர் இஸ்ரேல், அவர்களுடைய மொழி இனிமேல் அழியவே அழியாது.'
''நாடு இல்லாமல் ஒரு மொழி வாழமுடியாது என்று சொல்கிறீர்களா?'
'நான் ஒரு தலைமுடி திருத்துபவன். மொழியியல் அறிஞன் அல்ல. எனக்கு என்ன தெரியும்? நாடு இல்லாமல்தானே என் மொழி சிதைந்தது. நாடு இருந்தபடியால்தானே இறந்து போன ஹீப்ரு மொழி மறுபடியும் உயிர்பெற்று நிலைத்து நிற்கிறது.
உங்கள் மொழி தமிழ்நாடு இல்லாமல் வாழும் என்று நினைக்கிறீர்களா?
'ஆனால், இந்தியாவில் ஒரு தமிழ் மாநிலம் இருக்கிறதே.'
'மாநிலம் வேறு, நாடு வேறு. இன்று உலகத்திலுள்ள ஒரு சின்னஞ்சிறிய நாட்டை எடுத்துக்கொள்ளுங்கள். மால்ட்டா 4,00,000 மக்கள் வாழ்கிறார்கள். அவர்களுடைய மொழி மால்ட்டீஷ். அந்த மொழி அழியுமா? அழியாது. ஒரு மைல்கல் எப்போதும் உண்மை பேசுவதுபோல நான் பேசுகிறேன். அவர்களுடைய மொழி அழியவேண்டும் என்றால் முதலில் அந்த நாடு அழியவேண்டும்.
உங்கள் நாட்டுக்குச் சமீபத்தில் இருக்கும் மாலைத்தீவு, அதை எடுத்துக்கொள்ளுங்கள், அதனுடைய சனத்தொகை 3.50,000. அவர்களுடைய மொழி திவேஹி.
அது அழியுமா ? எப்படி அழியும்? 3,00,000 மக்கள் வாழும் நாடு ஐஸ்லேண்ட். அவர்களுடைய மொழி ஐஸ்லாண்டிக்,அது அழியுமா?.
இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.'
நம்புவதற்கு கஷ்டமாக இருக்கிறது. பத்து மில்லியன் மக்கள் ஒரு மொழியைப் பேசினாலும் அவர்களுக்கு ஒரு நாடு இல்லா விட்டால் அந்த மொழி அழிந்துவிடும் என்று சொல்கிறீர்கள்?
ஷாம்பூ போட்டு முடிந்ததும் அவர் முடி உலர்த்தியால் தலைமுடியைச் சீவி உலர்த்திக்கொண்டிருந்தார்.
அவர் வாய் மட்டுமே பேசியது, ஆனால், கைகள் வேறு யாருடையவோ கைகள் போலத் துரிதமாக வேலை செய்தன.
அப்படித்தான் என் சிற்றறிவுக்குப் படுகிறது. ஒரு மொழிக்குப் பாதுகாப்பு வேண்டும். ஒரு நாடுதான் அதைக் கொடுக்க முடியும்.
உலகத்தில் 7000 மொழிகள் இருக்கின்றன என்று படித்திருக்கிறேன்.
அவற்றிலே 2000 மொழிகள் அழிவில் இருக்கின்றன. மீதியில், ஒரு நாடு பாதுகாப்புக் கொடுக்கமுடியாத மொழிகள் எல்லாம் ஒவ்வொன்றாக அழிவை நோக்கி நகர்கின்றன.
அனைத்து மொழிகளையும் காப்பாற்ற முடியாவிட்டாலும் அவற்றைச் சேமிக்க 'வேண்டும். ஆவணப்படமாகவும் ஒலி வடிவமாகவும் கணிமைத் 'தொழில்நுட்பத்தில் பாதுகாக்கலாம்.
ஒரு மொழி அழிவது என்பது ஓர் இனம் அழிவதற்கு, ஒரு கலாசாரம் அழிவதற்குச் சமம்.
கீழே விழுந்த முடியைத் திரும்பவும் ஒட்டமுடியாது. மொழியும் அப்படித்தான். பூமியிலிருந்து ஒரேடியாக மறைந்துவிடும்.
நான் பேசமுடியாமல் அவரையே பார்த்தேன். ' ஒரு மொழியின் எதிர்காலத்தை அதைப் பேசும் மக்களின் எண்ணிக்கை தீர்மானிப்பதில்லை.
அதுபோலவே அதன் வளர்ச்சிக்கும், எண்ணிக்கைக்கும் சம்பந்தமில்லை.
ஒரு சின்னப் பரிசோதனை. உங்கள் நாட்டு சிங்கள மொழியின் கடந்த 50 வருடகால வளர்ச்சியுடன் தமிழ் மொழியின் ஐம்பது வருட வளர்ச்சியை ஒப்பிட்டுப் பாருங்கள். நான் சொல்வது உங்களுககே புரியும்….
பதிய முடி அலங்காரத்தை நான் கண்ணாடியில் பார்த்தேன்.
திருப்தியாகவிருந்தது.
காசாளரிடம் பணத்தைக் கட்டினேன்.
ஈராக்கிய நண்பரின் பெயரைக்கூட நான் அதுவரை தெரிந்து இருக்கவில்லை. அது முக்கியமாகவும் படவில்லை
எனக்குக் கவியின் வரிகள் ஞாபகத்துக்கு வந்தன.
நான் சாக்கடையில்
விழுந்து கிடக்கிறேன்.
என் கண்கள்
நட்சத்திரங்களில்.
நான் என் மொழிமீது வைத்த நம்பிக்கையைத் துறக்கத் தயாராகவில்லை .
அவர் என்னை மூடியிருந்த போர்வையைக் கையிலே விரித்துப் பிடித்தபடி ஒரு மாட்டுச் சண்டைக்காரர் போல நின்றார். தத்தம் மொழிகளை இழந்துகொண்டுவரும் இருவரையும் ஒரு போர்வை பிரித்தாலும் அவர் வேதனையும் இழப்பும் துயரமும் என்னுடையது போலவே இருந்தது.
எப்படி இவரிடம் விடை பெறுவது என்பது எனக்குத் தெரியவில்லை . ஒருவர் அந்தச் சமயத்தில் எதைச் சொல்லக்கூடாதோ அதைச் சொன்னேன்.
‘நண்பரே, அழிவை நோக்கி பயணிக்கும் ஒரு மொழியை நிறுத்த தனிமனிதர் ஒன்றுமே செய்யமுடியாது. இன்றிரவு சுவருடன் உங்கள் உரையாடல் இனிமையாக அமையட்டும்.'
'என்ன, அப்படிச் சொல்லிவிட்டீர்கள். ஒரு மொழியை அழிய விட்டுவிடுவோமா?
அது "யேசு" பேசிய மொழி அல்லவா?
நான் திடுக்கிட்டேன். கடந்துபோன பிறகும் முடிவெட்டு நிலையக் கதவுகள் நெடுநேரம் ஆடின.
Monday, July 5, 2021
கச்சி ஏகம்பனே
உன்மத்தராயிருந்தோம்
"கச்சி ஏகம்பனே”
முறையிட்டுக்கொள்வதற்கு அவரைவிட வேறு யார் இவ்வளவு மலிவாக அகப்படுவார்கள்.
ஏகம்பனாம், ஏகம்பன்!
பக்திப் பெருக்கினால் கண்ணீர் சொரிய, மயிர்க் கால்கள் எல்லாம் குத்திட்டு நிற்க, உணர்ச்சி வசப்பட்டு 'கச்சி ஏகம்பனே' என்று அழைக்க வேண்டிய அந்தப் புனிதமான திருப்பெயரை, உம்முடைய ஊத்தை வாயால் வெறுமனே உச்சரிக்கிறீரா?
சீ, துப்பிவிடும், அந்த வார்த்தையை. பிரலாபிக்கிறாராம்! துக்கப்படுகிறாராம்!
கள்ளிப் புதரும் கருவேலஞ் செடியும் மண்டிக் கிடக்கும் காடு பக்கத்தில் ஓரிடமும் இல்லையா? இருந்தால் அதற்கு முறையிடும்! உம்முடைய கண்ணீரை அதற்குச் சொரியும்!
விழுந்த பிறகு, வேதாந்தம் பேச மாத்திரம், அற்புதமாக வருகிறது - எல்லா ஆண்களையும்போல; ஆனால், உம்மில் உயிரையே வைத்திருந்த அவள் - அவள்தான் சரசா - அவளுடைய மனசை ஒருகணமாவது அறிய, அறிய முற்பட, முயன்றிருக் கிறீரா?
கை கூசாமல் பேனாவைத் தூக்கி எழுத மாத்திரம் தெரிகிறது. ஆனால், இதை அவள் - அந்தப் பட்டுப் போன்ற உடலைப் போலவே மென்மையான உள்ளம் படைத்த அவள் - பார்க்க நேரிட்டால்...!
நீர் அதைப்பற்றி ஏன் கவலைப்படுகிறீர்?
சரசா என்னுடைய பள்ளியிலே சேர வந்தபோது, நான் திடுக்கிட்டு விட்டேன்.
இப்படியும் ஓர் அழகா! சாதாரண புடவைதான் உடுத்தியிருந்தாள். அவள் உடல் அழகை, அந்த மெலிந்த சிவந்த இடையை, முற்றிலும் மறைக்க முடியாது சிரமப்பட்டுத் திணறியது அந்தச் சாதாரண சேலை.
அந்த மார்பிலே, வெகு கூச்சத்தோடு புரண்டு, மேலும் கீழும் நெளிந்தபடி, பெருமையோடு கிடந்தது அவளுடைய அடர்த்தியான கேசம்.
அந்தக் கண்கள் - அந்த நீல விழிகள் - அதன் விலை அவள் முற்றிலும் உணர்ந்திருந்தாள் போலும். எந்தச் சந்தர்ப்பத்திலும் அந்தக் கண்களை நிமிர்த்தி அவள் யாரையும் பார்ப்பது கிடையாது. நிலமகள் ஒருத்திதான் அந்தப் பார்வையைத் தாங்கும் முழு ஆற்றல் படைத்தவள்.
பாவம், அவளுக்கு எப்போதுமே சேலை உடுத்தத் தெரியாது சிறு பெண்தானே!
'சடக், சடக்' என்று சேலை சத்தம்போட வெகு சிரமத்துடன் அவள் நடப்பாள்.
சிறு குழந்தைகள், 'குறு குறு'வென நடை பழகும்போது, எங்கே விழுந்து விடுமோ என்று பயத்தினால் அள்ளி அணைத்துக் கொள்வோமே, அத்தகைய வேட்கைதான் அவள் நடையைக் காணும் போதெல்லாம் தோன்றும்.
அந்தச் சிவந்த பாதங்கள் நிலத்தை மிதிக்கும் போதெல்லாம் எத்தனை ஆயிரக்கணக்கான இதயங்கள் அந்தப் பாதங்களின் கீழ் துடித்தவண்ணம் நசிகின்றனவோ என்று நான் வியப்பதுண்டு.
பொறாமை யாரைத்தான் விட்டது!
"சரசா, இரவு வேளைகளில் எங்கோ போகிறாள் போல இருக்கிறது” என்று மற்ற மாணவிகள் வந்து என்னிடம் முறை யிட்டபோது நான் திகைத்து விட்டேன்.
சரசாவா? என்னால் நம்பவே முடியவில்லை.
ஆனால், அன்றிரவு, அந்தப் பாவ காரியத்தை நான் செய்ய வேண்டியதாகிவிட்டது.
மறுநாள் காலை அழுத கண்ணுடன் குனிந்தபடியே வந்தாள். அவள் கையிலே கனத்த சூட்கேவஸைக் கண்டவுடன் என் மனதை என்னவோ செய்தது.
“மிஸ்! நான் போகத்தான் வேண்டுமா?”
"சரசா... விடுதி முழுவதும் கதை எப்படியோ பரவிவிட்டது. பிரின்சிப்பல் 'கூட 'டிஸ்மிஸ்' பண்ணும்படி உத்தரவு கொடுத்து விட்டார். எனக்கும்தான் பரிதாபமாக இருந்தது. ஆனால், நான் என்ன செய்ய முடியும்!”
"மிஸ்! சொல்லுங்கள், மிஸ். நான் என்ன அவ்வளவு பெரிய குற்றம் செய்துவிட்டேன்?”
“என்னை விரும்பினார் அவர்; எனக்கும் அவர்மீது அன்பு இருக்கத்தான் செய்தது. 'குற்றம்' என்று உணர்ந்த பின்புகூட எம்மால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு நாம் எம்மை மறந்து இருந்தோம். சுய புத்தியுடன் இருந்திருந்தால் இப்படி நடந்திருப்போமா? ஏதோ உன்மத்தம் பிடித்ததுபோல் நடந்துகொண்டோம்.
“மிஸ், இது மன்னிக்க முடியாத அளவுக்குப் பெரிய குற்றமா? எவ்வளவு சுலபமாக என்னைப் பள்ளியை விட்டு நீக்குகிறீர்கள்...''
“ஆனால்... யோசித்துப் பாருங்கள் மிஸ்... நாளைக்கு சமு தாயத்தில் என்னை , காறி உமிழ்ந்த எச்சிலில் நெளியும் புழுவிலும் கேவலமாக நடத்தப் போகிறார்களே, அது பரவாயில்லையா?”
"நீங்களும் ஒரு பெண்தான், உங்களைவிட யார் என் குறையை நன்றாக உணர முடியும்?"
அவள் கடைசியாகக் கேட்ட கேள்வி, என்னையே திடுக்கிட வைத்தது!
"குற்றம் செய்தவர்களை நீக்குவதற்காக ஏற்பட்டதுதானா பள்ளிக்கூடம்? அவர்களை நல்வழிப்படுத்துவதற்காகவல்லவா?"
நான் என்ன பதில் கூற முடியும்? "சரசா, உள்ளதைச் சொல்லு. இது எப்படி நடந்தது?”
வெள்ளம் பிய்த்துக்கொண்டு வந்தது. உள்ளத்தில் கிடந்த எல்லாவற்றையும் அப்படியே கொட்டினாள் அவள்.
நான்தான் திணறிப் போனேன்.
“மிஸ், நான் பள்ளியை விட்டுப் போவதைப் பற்றியே கவலைப்படவில்லை ... ஆனால், இன்னும் மூன்று நாட்கள்... மூன்றே நாட்கள் மாத்திரம் நீங்கள் பொறுத்திருக்கக்கூடாதா?”
அவள் விம்மி விம்மி அழுதாள்.
இதோ... இந்த 'ஸ்வெட்டர் இதை எதற்காகப் பின்னுகிறாய்? என்று நீங்கள் முன்பே என்னிடம் பலமுறை கேட்டிருக்கிறீர்கள்; நான் மறைத்துவிட்டேன். அவருடை பிறந்த தினம்.அது இன்னும் மூன்றே நாளில் வருகிறது.ஆசையோடு என் உள்ளத்துக் கனவுகளெல்லாவற்றையும் கோத்துப் பின்னிவைக் இதை இனிமேல் யாருக்குக் கொடுப்பேன். அந்தப் பரந்த மார்பைத் தவிர வேறு யாருக்கு இது பொருந்தப் போகிறது?"
"இனிமேல் நான் அவரை எப்படிக் காண்பேனோ?” என்று அவள் விம்மிய போது என்னால் அவளைத் தேற்றக்கூட முடிய வில்லை .
நர்ஸ் படிப்புக்குப் போனாலும் அவள் என்னை மறந்துவிட வில்லை . அடிக்கடி எழுதுவாள். அதிலும் அவள் எழுதிய முதல் கடிதம்...
“எதிர்காலம் இருள்; மனதிலே இருள்; வழியிலே இருள்; என் தந்தை முகத்தில் எப்படி விழிப்பது!
“உலகத்தையே ஒரு கையால் தள்ளுவது போன்று படலைக் காலைத் தள்ளினேன்.
“வாசல் திண்ணையிலே என் தந்தை - அந்தக் கண் பார்வை இழந்த எலும்புக் கிழவர் - சாப்பிட்டுக்கொண்டிருந்தார். பக்கத்தில் பன்னிரெண்டு வயதே ஆன என் அருமைத் தங்கை. அக்கா படிக்கவேண்டுமென்பதற்காகச் சமையல் பொறுப்பைத் தன் பிஞ்சுக் கரங்களில் ஏற்ற அந்த உத்தமச் சிறுமி - அவருக்குச் சோறு பிசைந்து கொடுத்துக்கொண்டிருந்தாள்.
"சரசாவா, என்ன இவ்வளவு வெள்ளென?” என்று குரல் தழுதழுக்கக் கேட்டபடி கைகளை என் பக்கம் நீட்டித் தடவினார்.
"ஐயோ! எதற்காகத் திடீரென்று மாரடைத்து அப்போதே நான் சாகவில்லை? எதற்காக என்னுடைய நெஞ்சம் சுக்கு நூறாகச் சிதறி நான் மாண்டு போகவில்லை?
"மூன்று மாதத்தில் சரசாவும் ஒரு நெசவு ஆசிரியை ஆகி விடுவாள்; அப்புறம் கஷ்டமெல்லாம் கரைந்துவிடும்” என்று இரவும் பகலும் கனவு கண்டு வந்த அந்தக் குருட்டுத் தந்தையிடம் கூறத்தான் செய்தேன் - வெட்கமில்லாமல் - என் குற்றமெல்லா வற்றையும்
"அடித்து உதைத்திருந்தால் சிறிதாவது ஆறுதல் அடைந்திருப்பேன்
“கையிலே பிசைந்து கண்ணீர்த் துளியையும் கலந்து அவர் உண்ட அந்தக் காட்சி - அதையும் சகித்தேன்.
"என் தங்கை - அந்தச் சிறுமி - காரணம் விளங்காமலே என் கால்களைக் கட்டி அழுதபோது - அதையும் அந்தச் சிறுமி யின் விலையில்லாத கண்ணீரையும் சகித்தேன்!
"உயிரைப் போக்கிக்கொள்ள எனக்குத் தெரியாமலில்லை. ஆனால்... ஆனால்.....
"கேணிக்கரையில், ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு யுகயுகாந்திரமாகக் களித்த அந்த இன்ப நாட்களை நினைக்கையில் என் மனதில் ஏதோ ஒரு நம்பிக்கை துளிர்த்தது.
"ஒரே முறையில் இருவரும் கேணியில் தெரியும் பூரண சந்திரனை எட்டிப் பார்ப்போம்.
"கூழாங்கற்களை வீசி, அந்தப் பூரண சந்திரனை ஆயிரம் பிம்பங்களாகச் சிதறடித்துவிட்டுக் கலகலவென்று காரணமின்றிச் சிரிப்போம்.
"திடீரென்று அவர் என் மடியிலே படுத்துக்கொள்வார். வானத்து நட்சத்திரங்களையெல்லாம் ஒன்று, இரண்டு, மூன்று என்று கணக்கில்லாமல் எண்ணுவார்.
"அந்த வானத்து மீன் மேலும், பூரண சந்திரன் மேலும் எத்தனை உறுதிகள், எத்தனை சத்தியங்கள்.
“உறுதிகள் கோடி செய்தோம்.
"உன்மத்தராயிருந்தோம்.
"ஆமாம் - உன்மத்தர்தாம்.
"இந்தப் பூரண சந்திரனும், இந்த லட்சோப லட்சம் நட்சத்திரக் கூட்டங்களும், இன்னும் எதற்காக வானத்தில் ஒட்டிக் கொண்டு கிடக்கின்றன?
"ஓ நட்சத்திரமே, நீ அவருடைய உறுதிமொழியை இன்னமும் நம்புகிறாயா?
“ ஏ,பூரண சந்திரனே நான் அப்படி என்ன பாபம் இழைத்து விட்டேன், அவர் இவ்வளவு சீக்கிரம் என்னை மறந்துவிட----?“
"அந்த ராஜு - இந்தப் பேதையை மறந்துவிட்டாரா! உலகத்துத் துன்பங்களையெல்லாம் யாருக்காக சகித்தேனோ உலகத்து அவதூறுகளையெல்லாம் எவருக்காக ஏற்றுக்கொண்டேனோ, அவருக்கு 'சரசா' என்பவள் உயிரோடு இருக்கிறாள் என்ற நினைவுகூட அற்றுப்போய்விட்டதா?
"கண்ணீரால் நான் வரைந்த அத்தனை கடிதங்களுக்கும் அவர் பதிலே எழுதவில்லை .
"காரணம் என்ன தெரியுமா?
"மிஸ், எழுதவே கைகூசுகிறது.
"எனக்கு ஏற்பட்ட அவதூறுகளைக் கண்டு அவர் பயப் படுகிறாராம். ஊரிலே என் பெயர் கெட்டுப்போய்விட்டதாம்.
"ஒரு பேதைப் பெண்ணுடைய காதல் அவ்வளவு இளக்காரமானதா? இவ்வளவு சீக்கிரத்தில் மறந்துவிடக்கூடியதா?”
பயிற்சி முடிந்ததும், யாழ்ப்பாணம் பெரிய ஆஸ்பத்திரியிலேயே அவளுக்கு வேலை கிடைத்தது. இனிமேலாவது அவள் அவனை மறந்துவிடுவாள் என்று எதிர்பார்த்த நான் ஏமாந்து போனேன். உண்மையிலேயே அவள் ஒரு பேதை. இன்னமும்கூட ஏதாவது நடக்கும் என்று ஏங்கிக்கொண்டிருந்தாள். அவள் சொன்ன செய்தி.....
"நான் நர்ஸ் வேலை பார்க்கத் தொடங்கி ஆறு மாதம் ஆகிவிட்டது மிஸ். இத்தனை நாளில்.... இத்தனை நாளில், என்னை ஒருமுறைகூட அவர் சந்திக்கவில்லை. முயற்சி செய்யவும் இல்லை . நான் பெண். இதயத்து உணர்ச்சிகளை அடக்கி வைக்க மட்டுமே பழகியவள். நான் வேறு என்ன செய்ய முடியும்?”
"அவர் ஆண்! நினைத்திருந்தால் ஆயிரம் சந்தர்ப்பங்கள் உண்டாக்கி இருக்கமாட்டாரா, சொல்லுங்கள் மிஸ்!"
அவள் விசித்து விசித்து அழுதாள்.
என்னைத் தன்னுடைய சினேகிதி போல் நினைத்து ஒளிவு மறைவின்றி அவள் கூறினாள்.
என்னுடைய இந்த விரல்களைத் தன்னுடைய கையில் அடக்கிக்கொண்டு 'இந்த விரல்களின் ஸ்பரிசத்திற்காக ஊழி ஊழிக் காலம் காத்திருப்பேன். சரசா' என்று கூறியவர் கேவலம் இரண்டரை வருடத்திற்கிடையில் மறந்துவிட்டாரா?"
இன்னொரு நாள் வியர்க்க, வியர்க்க அவள் வந்திருந்தாள்.
"ஏது இந்த நேரம்?" என்றேன்.
“டாக்டர் சந்திரசேகரை உங்களுக்குத் தெரியுமா? அவர் இன்று
மாற்றலாகிப் போகிறார்; அவருக்குப் பிரியா விடை நடநதது. இடையிலே வர முடியவில்லை" என்று கூறிவிட்டு, பெரியதொரு பெருமூச்சு விட்டாள்
தேர்தல் சமயம் அது; ஒரு நாளைக்குக் குறைந்தது ஒன்பது,பத்து
அப்பரேஷன் கேஸ்களாவது வந்தவண்ணம் இருந்தன. சரசாவுக்கு ஓய்வே இல்லை. அன்றைக்கென்று தலைமை டாக்டர் கூட லீவு போட்டுவிட்டார்.
இரவு ஒருமணி இருக்கும். பதினொராவது ஆப்பரேஷன் நடந்து கொண்டிருந்தது. ஆயுதங்களை ஒவ்வொன்றாக நீட்டிய வண்ணம் இருந்தாள் சரசா. டாக்டர் முகத்திலே முத்து முத்தாக வியர்வை துளிர்த்திருந்தது. கடமையைச் செய்ய வேண்டுமென்று ‘லின்ட்' துணியினால் அவர் முகவியர்வையை ஒற்றி எடுத்தாள் சரசா.
ஏனோ விளங்கவில்லை. ஆயுதத்தை வைத்துவிட்டுக் கூர்மை யான பார்வை ஒன்றை வீசினார் அந்த டாக்டர். அதே துணியால் அவளுடைய முக வியர்வையைத் துடைத்து விட்டார்; ஒருகணந் தான்! ஒருவருமே பார்க்கவில்லை.
சரசாவுக்கு உடம்பெல்லாம் புல்லரித்தது! அன்றுதான் அந்த "டோம்' விளக்கின் நடுவிலே அவர் கேட்டார். அவள் வாழ்வில் கற்பனைகூடச் செய்து பார்த்திராத ஒரு சந்தர்ப்பத்தை அளித்தார். அவள் நிராகரித்து விட்டாள்; ஒரு கணம்கூடத் தயங்கவில்லை. தான் இன்னொருவரின் உடைமை என்பதில் அவளுக்குச் சிறிது கூடச் சந்தேகம் ஏற்படவில்லை . அவள் நினைத்திருந்தால்... ஒரு உதட்டின் அசைவிலே... ஆனால், அவள், அதை விரும்பவில்லை.
இன்று டாக்டர் சந்திரசேகர் மாற்றல் வாங்கிப் போகும் காரணம் ஒன்றே போதாதா, அவள் காதலின் ஆழத்திற்கு சாட்சியம் கூற?
ஆனால் அவளுக்கு, அதை விளம்பரம் செய்யத் தெரியவில்லை. பெண் பேதையென்பதற்கிணங்க, நம்பிக்கையின் கீற்றைப் பிடித்தபடி அவள் நாட்களை எண்ணிக்கொண்டிருந்தாள்.
வழக்கம்போலப் பருத்தித்துறை பஸ் அவளைக் கவ்வியங் காட்டுச் சந்தையடியில் இறக்கிவிட்டுச் சென்றது. அதிலே இருந்து
அவள் வீடு வெகு சமீபத்தில்தான் இருந்தது. செங்குந்தான் பாட சாலைக்குப் போகும் அந்தக் குறுக்கு வீதி வழியாகப்போனால் ஒரு திருப்பம்; அடுத்து அவளுடைய வீடுதான். ஆனால் அந்தப் பூனைக்கண் இரட்டையர்களின் கடை வாயில் அதில் எப்போதும் ஒரு கூட்டம் நிற்கும்.
அதை அவள் கடக்கும் போதெல்லாம் 'விசில்' சப்தமும் விரசமான வார்த்தைகளும் காதிலே வந்து தெறிக்கும்; அந்த கணத்தில் கூனிக் குறுகி உள்ளம் எல்லாம் வெதும்பிவிடும் சரசாவுக்கு.
இதற்காகவே அவள் இரண்டு வீதி சுற்றிச் சங்கிலியன் தோப்பு தென்கோடிப் பக்கமாகப் போவாள்.
அன்றும் அப்படித்தான்.
பிலாவடிப்பரியாரி வீடு கழிந்ததும் யாரோ எதிராக சைக் கிளில் வருவது தெரிந்தது நெஞ்சம் ஒருகணம் 'திக்' என்றது.
அவன்தான். ராஜுதான்.
சந்தி கழித்து அவன் சமீபமாக வரும்வரைக்கும் படக் படக் கென்று இதயம் வேகமாக அடித்துக்கொண்டது. உள்ளத்திலே ஆயிரமாயிரம் எண்ண க் குமுறல்கள். 'எப்படி ஆரம்பிப்பார், என்ன கதைப்பார், யாராவது பார்த்து விட்டால், ' என்ன எண்ணங்கள் அவளை நிறைத்தன. நடையைத் தளர்த்திக்கொண்டு ஆசையோடு நின்றாள்.
இதோ ராஜு வந்து விட்டான். உற்றுப் பார்க்கிறான்' என்று அவளுடைய உள்ளுணர்ச்சிக் கூறியது. எவ்வளவோ எதிர்பார்த்தாள்.
ஆனால், அவன் நிற்கவில்லை. போயே போய்விட்டான்!
அப்படியே போயிருந்தாலும் பரவாயில்லை. தூரத்து. சைக்கிள் கடையில் அவன் நின்றது தெரிந்தது. மறுபடியும் திரும்பி வந்தான். தனியாகவல்ல; பின்சீட்டில், பீடி குடிக்கும் ஓர் அருமையான நண்பனை ஏற்றிக்கொண்டு.
"உன்னை நான் அடையாளம் கண்டுவிட்டேன். இருந்தும் என் மன உறுதியைத் தளரவிடவில்லை . பார்த்தாயா? பெருமை அடிக்க வருவது போல் வந்தான். அந்த உதடுகளில் நெளிந்த அரைகுறை சிரிப்பில் இவ்வளவு வஞசனை எப்படி ஒட்டிக்கொண்டது?
சைக்கிள் மின்வேகத்தில் அவளைக் கடந்தபோது “நேர்ஸ் உடுப்பிலை சோக்காயிருக்கடா!” என்று அந்த அழகான நண்பன்
சொல்லியது நாராசமாய்க் காதில் விழுந்தது. 'கொல்' என்ற சிரிப்பு அதற்குச் சுருதி கூட்டியது.
"அருமை ராஜு! நீ எப்போது இந்தக் கூட்டத்திற்குப் பலியா
னாய்?"
"மிஸ், என்னுடைய ராஜு, அந்த அருமை ராஜு, அவர் எப்போதோ இறந்து விட்டார்...'' என்று அவள் சொன்னபோது யார்தான் அழாமல் இருக்க முடியும்?
பல நாட்களாக அவள் வரவில்லை. நானே ஆஸ்பத்திரிக்குப் போயிருந்தேன். நர்ஸ் உடுப்பிலே அப்போதுதான் அவளை முதன் முறையாகப் பார்த்தேன். இளமையிட்ட கோலங்கள் இன்னமும் கூட அவள் ஒவ்வொரு அங்கத்திலும் பூரணமாக நிறைந்திருந்தன. 'கடமை, கடமை' என்று ஓடியபடியே அவள் கதைத்தாள்.
"மிஸ்! ராஜு வந்திருந்தார். சாதாரண காய்ச்சல்தான். என்ன நோக்கத்தோடு வந்தாரோ, தெரியாது. ஆனால்... ஆனால்... நிரம்ப வும் மாறிவிட்டார்.
"நர்ஸ் என்றால் அவள் பெண்ணே அல்ல. காதலிக்கக் கூடிய பொருளே அல்ல என்றொரு துர் எண்ணம் எப்படியோ அவர் மனதில் ஊன்றிவிட்டார்.
“நர்ஸ்' என்றால் அவ்வளவு இளக்காரமா? சொல்லுங்கள் மிஸ்;
"அவருடைய அந்தப் பார்வை. அன்பு வழிந்த பார்வையிலே ஆசை பீறிட்டது. காதல் கனிந்த பார்வையிலே, காமம் தெறித்தது; வாஞ்சை பொங்கிய பார்வையிலே - இன்று வெறி - ஒரே வெறி. சொல்லவே கூசுகிறது. அந்தப் பார்வையில் என் ஒவ்வொரு அங்கத்தையும் சுவைத்து வீசவேண்டும் என்ற நெருப்புத்தான் எஞ்சி
நின்றது.
"உள்ளத்தை அறிய முடியாதவர் உரிமை வேறு கொண்டாடினார். மற்ற நோயாளிகளைப் பார்க்க வேண்டாமாம். பேச வேண்டாமாம்.
"நர்ஸ் வேலைக்குப் போவது பிடிக்கவில்லையானால் ஒரு சொல், ஒரேயொரு சொல் அப்போது கூறியிருக்கலாமே. உடனே
நின்றிருப்பேன்.இன்று, நோயாளிகள் எல்லோரும் என்னுடைய குழந்தைகள் மாதிரி.
“நான் அவர் சொல்லியபடி எப்படி நடக்க முடியும்?”
சரசா! அவளுடைய அந்தப் பால்போன்ற உள்ளத்தை என்னைவிட வேறுயார் நன்றாக அறிய முடியும்! அவள் என்ன சொன்னாள்? அது எனக்குத்தான் தெரியும். “மிஸ் நான் இப்படித்தான் இருப்பேன்”
“என்னை எவராலும் கரைக்க முடியாது. மணம் முடித்தால் என் கணவராக அவர் ஒருத்தரைத்தான் நான் கற்பனை செய்ய முடியும். ஆனால்... ஆனால்... என் பழைய ராஜு எனக்குக் கிடைக்கவே மாட்டார்.”
அதற்குப் பிறகு கண்ணீர்தான் அவள் உள்ளக்கிடக்கையை எனக்குக் கூறியது.
அவள் இனிமேல் மணமே செய்துகொள்ளமாட்டாள். அது எனக்குத் தெரியும்.
மற்றவர்களுக்கு எங்கே தெரியப்போகிறது?
கச்சி ஏகம்பனே! என்று முறையிட்டுக்கொள்ள மட்டும் தெரிகிறது.
ஏகம்பனாம்! ஏகம்பன்
விழுந்த பிறகு வேதாந்தம் பேச மாத்திரம் அற்புதமாக வருகிறது.
சரசாவின் மனதை ஒரு கணமாவது அறிய,அறிய முற்படிமுயன்றீரா?
இப்பொழுது கவலைப்பட்டு என்ன ஆகப்போகிறது.?